ஒரு லாபிரடோர் நாயை வீட்டுக்குள் வைத்து வளர்க்கும் எனக்குத் தெரியும் அதனது நிபந்தனையற்ற அன்பு, விசுவாசம் மற்றும் தோழமை. ஆனால் வற்றாத நதியில் குளிக்கும்போது வேகமாக இழுத்துச் செல்லும் நதியின் சுழல்போல் சிக்கல்களையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். நமது வாழ்வில் ஏற்படும் காதல் பாசத்திற்குக் கொடுக்கும் விலை போன்றது. என்ன 12 அல்லது 13 வருடங்கள் மட்டுமே நீடிக்கும். அதில் முக்கியமானது வீட்டின் தரையில் தினம் தினம் புதிதாக முளைக்கும் உரோமங்கள். தரையில் மட்டுமல்ல வீட்டில் உள்ள கட்டில், மெத்தை, ஷோபா, உடைகள் மற்றும் உள்ளாடைகள் என எங்கும் வந்துவிடும். தரையில் படர்ந்த உரோமத்தை வீட்டில் யார் சுத்தம் பண்ணுவது என்பது எங்கள் வீட்டில் சட்டமன்ற வாக்குவாதமாக நடக்கும். நல்லவேளையாக நாங்கள் சேட்டைக்கிழித்து, சீலையை உருவும் பாரம்பரிய இன வன்முறையில் இறங்குவதில்லை. அதற்கப்பால் குறைந்த பட்சம் 1-2 மணி நேரம் நாயோடு செலவழித்து அதை நடைப்பயிற்சிக்கு காலையில் மனைவியும் மாலையில் நானும் கூட்டிச் செல்வது என்பது எழுதாத ஒப்பந்தம். ஏதாவது குடும்பவிடயங்கள் பொது விடயங்கள் என வரும்போது அதை மீறுவது இலங்கை அரசுபோல் நானாக இருப்பேன். அதில் ஏற்படும் குற்றவுணர்வு பல மணிநேரம் மனச்சாட்சியில் நிழலாகத் தொடரும். அதை ஊதிப்பெருக்கிவிட இல்லாள் இருப்பாள். விடுமுறையில் செல்லும்போது அதற்கு எங்காவது வசிப்பிடம் ஒழுங்கு பண்ணுவது, அவுஸ்திரேலியாவில் பிள்ளைகளுக்கு பாடசாலையில் இடம் பிடிப்பது போன்றது. அதுவும் மார்கழி மாதமானால் ஆறுமாதத்திற்கு முன்பாக பதிவு செய்வதுடன் ஒன்றரை மடங்கு அதிகமாக விலையிருக்கும். மிருகவைத்தியராக இருப்பதால் உணவு வைத்தியம் என்பன எனக்குச் சிக்கலாக இருப்பதில்லை.
என்னிடம் வரும் சிலர் இரண்டு லபிடோர்களை வைத்திருப்பார்கள். அவர்கள்மேல் எனக்கு என்னையறியாது மதிப்பு உருவாகும். மிருகங்களோடு பழகும்போது எம்மையறியாது எமது பொறுமை கூடும். குழந்தைகளை கண்டித்தாலும் மிருகங்களிடம் பொறுமையைக்காப்போம் அவைகள் உணவு, வைத்தியம் எனவரும்போது பல ஆயிரங்கள் செலவாகும். அதிலும் லாப்பிரடோர் போன்ற பெரிய நாய்கள் நான்கு சிறிய நாய்களுக்குச் சமமானது. சங்கடங்களும் சிக்கல்களும் நிறைந்தாலும் இந்த லாபிடடோர் இனமே பல நாடுகளில் அதிகமாக வளர்க்கப்டுகிறது.
சீன நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மூன்று லாப்பிரடோர்களை மெல்பேனில் வளர்த்த ஒரு குடும்பத்தின் கதையிது.
புதினைந்து வருடங்கள் முன்பாக நடந்த சம்பவம், காயாத சிமிண்டு நிலத்தில் வைத்த பாதச்சுவடுபோல நினைவில் இருக்கிறது. ஒரு கிறிஸ்மஸ்சுக்கு சில வாரங்கள் முன்பான ஒரு நாளின் காலை நேரம் என நினைக்கிறேன். அது எங்களுக்கு பிசியான காலம். நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகளை வளர்க்கத் பெரும்பாலோர் முடிவெடுக்கும் காலம் . மேற்கு நாடுகளில் பல குடும்பங்களின் வேலை மாற்றம், வீடுவாங்குவது மற்றும் விடுமுறை எனப் முடிவுகள் கிறிஸ்மஸ் காலத்தை நோக்கி எடுக்கப்படும்.
நானும் எனது நேர்சும் வேறு ஒரு பூனையை எக்ஸ்ரே எடுப்பதற்காகத் தயாராகிக்கொண்டிருந்த வேளையில், எதுவித அறிவிப்பும் இல்லாமல் எனது கிளிக்னிக்கு கணவனும் மனைவியுமாக சீனக் குடும்பம், இரண்டு பெட்டிகளில் பத்துப்பொன்னிற லாபிரடோர் குட்டிகளைக் கொண்டு வந்தார்கள். அவைகள் உருட்டிவைத்த சந்தனமாக மொழு மொழுவென இருந்தன. ஆறு கிழமை வயதானவை என்பதால் பெட்டியை விட்டுப் பாய்ந்து முழு கிளினிக் முழுவதும் மஞ்சள் டென்னிஸ்பந்துகள் உருள்வதுபோல் உருண்டபடி தங்களது மலத்தையும் சலத்தையும் கதவுகள் மேசைகள் அருகே சென்று கழித்தன.அவைகளைப் பார்த்து எனது நேர்ஸ் முகம் சுழித்தாள். அவர்கள் இருவரும் அந்தக் குட்டிகளைப் பிடித்தாலும் அவை உடனே பெட்டியில் இருந்து வெளிவந்து விடும். கடைசியாக நாங்களும் சேர்ந்து எல்லாவற்றையும் பரிசோதனை அறையில் வைத்துப் பூட்டிவிட்டு அவர்களிடம் தகவல்களைக் கேட்டோம்.
அவர்கள் ஆரம்ப மருத்துவ பரிசோதனை செய்து குட்டிகளுக்கு தடுப்பூசி கொடுக்க வந்திருந்தார்கள். ஆண் நாயும் பெண்நாயையும் தங்களுக்குத் தெரியாது கருத்தரித்து உருவானது என்றார்கள்.பரிசோதித்தபோது எட்டுக்குட்டிகள் உடல் நலமாக இருந்தன. ஆனால் இரண்டில் குறைபாடு இருந்தது. பெண் குட்டியொன்றின் மேல்அன்னம் இரண்டாகப் பிரிந்திருந்து. பால்குடித்தால் மூக்கால் பால் வரும். மற்றைய ஆண் குட்டியின் ஒரு கண்ணின் இரப்பை புருவமயிர் கண்முழியைத் தொடும்.இதனால் கண் சிவந்து கண்ணீர் வரும். பின்பு அந்தக் கண் பின்பு குருடாகும். இவை இரண்டு நோய்களும் நெருங்கிய உறவுகளிடையே கலப்பு நடந்ததால் ஏற்பட்ட பாரம்பரிய நோய் எனச்சொல்லி அவர்களைக் கண்டித்தேன். அதன்பின் ஆணையும் பெண்ணையும் கர்ப்பத்தடை ஆப்பிரேசன் செய்வதற்கு வற்புறுத்தி நாள்க்குறித்தேன். மேல் அன்னத்தில் குறைபாடான குட்டி சில நாளில் உடல் நலிந்துபோனபோது கருணைக்கொலை என்னால் செய்யப்பட்டது. கண்ணில் குறைபாடான ஆண் நாய்க்குட்டியை அவர்களால் விற்கமுடியவில்லை. அதையும் வளர்க்க முடிவு செய்தபோது, அதனது கண்ணிற்க்கு ஆறுமாதம் அதாவது முதிர்ந்த வயதில் நான ஆபரேசன் செய்வதாகச் சொல்லி அதற்கான தொகையும் சொல்லிருந்தேன்.
ஆறுமாதத்தில் அந்தக் குட்டிநாய்க்கு ஆபரேசன் செய்வதற்கான நாளைத் தங்களது சொந்த குடும்ப விடயங்களால் பின்போட்டார்கள் அதன்பின்பு நானும் மறந்து விட்டேன். ஒரு வருடத்தால் வந்து சொன்னார்கள். தாங்கள் தேவனிடம் பிரார்த்தித்தார்கள். இப்பொழுது கண்ணீர் வருவதில்லை என்றபோது நான் நம்ப மறுத்து அந்த நாயைக் கொண்டு வரச்சொல்லிப் பரிசோதித்தேன். அது உண்மையில் குணமாகியிருந்தது. குட்டியாக இருந்தபோது இருந்த விடயம் வளர்ந்தபோது இல்லாது போனது அவர்களுக்குச் சந்தோசம் அத்துடன் நான் ஆறு மாதம்வரையும் பார்ப்போம் என்றதால் இது நடந்தது என என்னைப் புகழ்ந்தார்கள். இதன்பின்பு தவறாமல் என்னைப் பார்க்க வருவார்கள் நான் விடுமுறையில் இருந்தால் காத்திருந்து விடுமுறை முடிந்த பின்பு வருவார்கள்.
கண்ணில் குறைபாடாக இருந்த ஆண்குட்டி குட்டி வளர்ந்து ஆறு அல்லது ஏழு வயதாக இருக்கும்போது காரிலிருந்து விழுந்து நொண்டுவதாக என்னிடம் வந்தபோது காலை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தேன். அதனது முழங்கால் மூட்டில் சவ்வுகிழிந்து இரத்தம் வந்திருந்தது. ‘
‘சவ்வு கிழிந்துவிட்டது. இது கால் மூட்டில் முக்கியமான சவ்வு என்பதால் அதை ஆபிரேசனிலே குணப்படுத்த முடியும்.ஆனால் சில வேளைகளில் இளம் நாயானபடியால் பகுதியாகக் கிழிந்திருக்க வாய்ப்பு உள்ளது. அப்படியானால் ஆபிரேசன் தேவையில்லை என்பதால் ஒரு மாதம் பொறுத்துப்பார்போம் அதன்பின்பும் நொண்டினால் ஆபிரேசன் செய்கிறேன்.ஒரு மாதம் அதிகம் நடக்காமல் வீட்டுக்குள் வைத்திருங்கள்’ என்றேன்.
சரியாக ஒரு மாதத்தில் அவர்கள் வந்தார்கள் எந்தப் பிரச்சனையுமில்லாமல் நாய் நடந்தது. இதன்பின் அவர்கள் மனத்தில் நான் ஒரு கை தேர்ந்த வைத்தியராக மதிக்கப்பட்டேன். ஏன் என்பது எனக்கே புரியவில்லை. செய்யவேண்டிய இரண்டு ஆப்பிரேசன்களையும் செய்யாது இயற்கையின் உதவியை நாடியதால் என நினைக்கிறேன். ஒரு விதத்தில் தற்காலத்தில் பல விடயங்களை மருத்துவர்கள் அவசரமாக பணத்திற்காகவும் ஏதாவது செய்ய வேண்டுமென நோயுற்றவர்கள் அவசரப்படுத்துவதாலும் செய்கிறார்கள். ஆபிரேசனால் வந்த விளைவுகள் இயற்கையான செயல்பாட்டிலும் சிறந்ததாக இருக்குமென்பது உண்மையற்றது.
காலங்கள் ஓடின.
அவர்களது தந்தை நாயான ஜெற்க்கு பதின்மூன்று வயதானபோது, கழுத்தின் கீழ்ப்புறத்தில் ரென்னிஸ் பந்தளவு கட்டி வந்தபோது அதை உடன் ஆபிரேசன் செய்து எடுத்துவிட்டு கட்டியை பார்த்தபோது கான்சராக இருக்குமென சந்கதேகித்ததால் அதைப் பரிசோதனைக்கு அனுப்பினேன். அது தைரோயிட் கான்சர் என அறிக்கை வந்தது. அவர்களிடம் இந்தக்கான்சர் எப்படியும் மீண்டும் வரும். ஆனால் உங்கள் அதிஸ்டத்தைப்பொறுத்து, மூன்றா அல்லது ஆறு மாதமா என்பதைப்பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனச் சொன்னேன். அவர்கள் தங்கள் நாயில் கான்சர் என நான் தெரிவித்தபோது மற்றவர்கள்போல் முகம் வாடாது இவ்வளவு நாட்கள் ஜெற்றை எங்களுடன் வைத்திருப்பதற்காக உதவியதற்கு என்னைப்பாரட்டியபோது கூச்சமாக இருந்தது.
‘இது தைரோயிட் கான்சர் எனத் தெரிந்திருந்தால் உங்களை விசேடநிபுணரிடம் அனுப்பியிருப்பேன் ‘
‘இல்லை உங்களை எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது’
பாராட்டு என்பது ஒரு போதைவஸ்து பலர் இதற்கு அடிமையாகுவதைப் பார்த்திருக்கிறேன். இதுவரையில் எந்தப்பாராட்டுக்கும் நன்றி எனச் சொல்லி வெட்கப்பட்டு விலகுவதே எனது சுபாவம் மிருகவைத்தியத்திலும் மற்றையவிடயங்களிலும் தொடர்ந்து இதுவரை காலமும் நடக்கிறேன்
நான் அவர்களுக்குத் தெரிவித்தபடி அந்த கான்சர் நாலு மாதத்தில் அதே இடத்தில் வந்தது. அப்பொழுது நான் விடுமுறையில் இருந்ததால் எனது சகா விசேட சத்திரசிகீச்சை நிபுணரிடம் போகும்படி பணித்தார். அவர்கள் ஆபிரேசன் செய்வதற்கு தேதி குறித்தபின்பு சன் தம்பதியினர் என்னைச் சந்தித்தார்கள்.
இரண்டாவது தரம் தைரோயிட் கான்சர் அதே இடத்தில்ஆக்கிரோசமாக வரும். கான்சரை வெட்டுவது சிக்கலாக இருக்கும். மனிதர்களைப்போல் தற்பொழுது கதிரியக்க அல்லது இரசாயன சிகிச்சை செய்யமுடியும் என்பதாலும் ஏற்கனவே ஆபிரேசனுக்கு தேதி குறிக்கப்பட்டதால் அவர்களிடமேஆபரேசன் செய்து கொள்ளும்படி சொன்னேன்..
ஆபிரேசன் நடந்து சிலநாட்களில் மீண்டும் என்னிடம் வந்தார்கள். ஜெற்ரினது தொண்டை வீங்கி ஜெற் கஸ்டப்படுகிறது என்றபோது அதன் கழுத்தை சோதித்துப் பார்த்தபோது தொண்டையில் அதிக நிணம் வடிந்து. அது கழுத்துப்பகுதி சுவாசக்குளாயை அழுத்தியது. ஆபரேசன் செய்தவர்களிடம் போகும்படி அவர்களிடம் அனுப்பியபோது அவர்கள் சிறிய குளாயைப் போட்டு நிணத்தை வெளியேற்றினார்கள்.
இரண்டு நாட்களில் ஒரு அதிகாலையில் மீண்டும் தொண்டை வீங்கியதாக தொலைபேசியில் அழைத்தார்கள்.ஆனால் ஏற்கனவே செய்தவர்களிடம் போக மறுத்து மீண்டும் என்னிடம் கேட்டனர் நான் சொன்னேன் ஆபிரேசனைச் செய்தவர்களே அதனது பின்விளைவுகளை சரி செய்யவேண்டும் மேலும் இதேபோல் பல ஆப்பிரேசன் செய்திருப்பதால் அவர்கள் ஏதாவது மாற்றுவழி வைத்திருப்பார்கள் எனச் சொல்லியபோது அவர்கள் கேட்கவில்லை.ஏற்கனவே ஆப்பிரேசன் சில ஆயிரங்களை விழுங்கிவிட்டது. எனக்குச் சங்கடமான நிலையை தோற்றவித்தார்கள் நானும் எனது சகாவும் வேறு வழியில்லாமல் மீண்டும் தொண்டையை ஆபிரேசன் செய்து அங்கு உள்ள நிணத்தை பெரியகுளாயை வைத்ததும், நிணம் வடிந்து நான்கு நாட்களில் ஜெற் சிரமமற்று மூச்சுவிட்டது.
இரண்டு கிழமைக்கொருமுறை கொண்டு வந்து ஜெற்யை பரிசோதித்துக் சொல்வார்கள். இப்படியான பரிசோதனைகளுக்கு பணம் பெறாததால் சாக்கிலட் பெட்டிகள் தந்தார்கள்.பின்பு ஒரு முறை ஜெற்யை படமெடுத்து அதை பிரேம் பண்ணி பரிசாகத் தந்தார்கள். கான்சர் மீண்டும் வரும்போது கருணைக்கொலை எனத் திட்டவட்டமாகச் சொல்லியிருதேன்.
அது ஒரு சனிக்கிழமை வேலை முடிந்து நாங்கள் வெளியேறத் தயாராக இருந்தோம். கோடைக்காலத்து மதிய வெயில் காய்ந்தபோது காரில் வந்து முழுக்குடும்பமாக மகள், மகனுடன் இறங்கினார்கள். ஏதோ மீண்டும் பரிசோதித்தபின் அனுப்பிவிடலாம் என நினைத்தபோது கழுத்தில் சிறிய மாமிசத்துண்டாக தோலை மீறி வெளியே அந்தக்கட்டியிருந்தது. ஜெற் நோயுடன் சேர்ந்து கோடையின் உஷ்ணத்தினாலும் கொல்லன் துருத்தியாக, இரைந்தபடி காற்றை வாயைத் திறந்தபடி உள்ளெடுத்தபடி என்னைப் பார்த்தது. அதனது கண்கள் அணைந்த மின்குமிழ்போல் ஒளியற்றுவிட்டது. நான் காய்ந்த மாட்டீரல்த் துண்டொன்றைக் முகத்தெதிரே கொண்டு சென்றபோது தலையை மறுபக்கம் திருப்பியது.பின் தரையில் படுத்தது.
இது வரையும் மவுனமாக இருந்த திருமதி சண் ஜெற்யைப் பரிசோதிக்க மட்டும் வந்ததாகக் கூறினார்.நான் பதில் கூறாமல் கணவனைப் பார்த்தேன். கண்களில் கண்ணீர் முட்டியிருந்தது. வளர்ந்த அவர்களின் பிள்ளைகள் சென்று தரையில் கிடந்த ஜெற்ரைத் தடவினார்கள்.
இனிமேல் தாங்காது என்பதால் எனது மவுனத்தைக் கலைத்து ‘கோடைக்காலத்தில் ஜெற் சுவாசிக்க கஸ்டப்படும். அதைவிட இலையான் மற்றும் புழுக்கள் இந்தக் கட்டிமீது வந்தடையும் அதனால் மணப்பதுடன் செப்டிசீமியா வரும். இதனால் ஜெற்யை மேலும் துன்பப்பட அனுமதிப்பது கூடாது’ எனக்கூறியபோது எல்லோரும் தலையாட்டினார்கள். வார்த்தைகள் எதுவும் பேசாது கருணைக்கொலைக்கு சம்மதத்தை எழுத்தில் வாங்கினேன்.
மயக்க மருந்தைக் கொடுத்து நினைவற்ற பின்பு ஜெற்ரின் பதின்மூன்று வருட வாழ்வைக் முடிவுக்குக் கொண்டுவந்தேன்.
எனது கிளினிக்கில் ஜெற்ரின் மரணச் சடங்கு முடிவடைய இரண்டு மணி நேரமாகியது. அவுஸ்திரேலிய தேவாலயங்களில் நடக்கும் மனிதர்களது மரணச் சடங்கிலும் அதிக நேரமெடுத்தது. குடும்பமாக ஒரு மணிநேரம் ஜெற்ருடன் மவுனமாக இருந்தனர். அதற்கு பின்பாக புகைப்படம் வீடியோ எடுத்துடன் எங்களையும் தங்கள் குடும்பத்துடன் சேர்த்து எடுத்து அந்த மரணம் நிகழ்வு அரங்கேறியது. நானும் எனது நேர்சும் களைப்படைந்தபோதும் ஜெற்ரின் மேல் அவர்களது பாசத்தை பார்க்கமுடிந்தது.
ஜெற்ரின் மரணத்துடன் எனது வைத்தியம் முடியவில்லை திருமதி சன் சில நாட்களில் வயிற்றில் வலி எனவந்தார்.நான் சிரித்துவிட்டு உங்களது மனத்தில்தான் வலி. ஜெற் 13 வருடங்கள் வாழ்ந்தது. இது ஒரு லாபிடோரின் முற்றான வாழ்வுக்காலம். அக்காலத்தில் அதனது சந்தோசமான நினைவுகளை மட்டுமே நினையுங்கள். உங்கள் வயிற்றுவலி குணமாகும்’
அப்பொழுது திரு சன் ‘மகன் நாய் இதுவரையும் கீழே கிடந்து ஜெற் நோயுற்ற காலத்திலே ஜெற்ரைத் தள்ளிவிட்டு அதனது படுக்கையை எடுத்துவிட்டது.”என்றார்
‘அதுதான் விலங்குகளினது மட்டுமல்ல மனிதர்களது இயல்பும்’ என்றேன்
