By Pon Vasudevan
கடந்த இரண்டு நாட்களாக ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். படிக்கப்படிக்க மிகவும் பிடித்துப்போய் இதைப்பற்றி அவசியம் எழுத வேண்டும் என்று தோன்றியபடி இருந்தது. இன்று படித்து முடித்துவிட்டேன்.
எழுதலாம் என்று யோசித்தால், ‘ஆகா, ஓகோ, பிரமாதம், பேஷ் பேஷ்’ என்ற மாதிரியான வார்த்தைகளை மாற்றிப்போட்டு ‘உணர்வுகளை, ரசனையைத் தூண்டும் எழுத்து, சகல உயிரினங்களின் மீதும் உருவாகும் மனிதாபிமானம், நுண்ணுணர்வால் மனிதர்களை அடிமைப்படுத்துகிற செல்லப் பிராணிகள், அழகாகச் சித்தரிக்கப்பட்ட உறவுச்சிக்கல்கள்’ என்றெல்லாம் எழுத வேண்டி வருமோ என பெரும் அச்சம் மனதில் நிலவியது. சரி, ஏன் எழுத வேண்டும். நல்ல புத்தகம் என்று நான் பரிந்துரைக்கிறேன். வாங்கிப் படிக்கிறவர்கள் படிக்கட்டுமே என்று தோன்றியது. அப்படியொரு தகுதிக்குரிய புத்தகம்தான். கதை, கவிதை, கட்டுரை இந்த வகைமைகளில் இல்லாமல் அனுபவப் பதிவுகளாக வந்திருக்கிறது ‘நோயல் நடேசன்’ எழுதியிருக்கும் ‘வாழும் சுவடுகள்’ புத்தகம். அடிப்படையில் நோயல் நடேசன் ஒரு விலங்கு மருத்துவர் (அல்லது கால்நடை மருத்துவர். பொருத்தமானதை நிரப்பிக்கொள்ளவும்). பிராணிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான அவரது அனுபவங்களை, செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களின் மன உவப்புகளை, கருணைக்கொலை செய்யப்படும் உயிரினங்களை, அவை தருகிற குற்றவுணர்ச்சிகளைத் தனது பார்வையில் சிறு சிறு கட்டுரைகளாகப் பதிந்துள்ளார். வெறும் செல்லப்பிராணிகளைப் பற்றியதாக மட்டுமில்லாமல் கட்டுரைகளுக்கு நடுவே வாழ்க்கையின் அனுபவங்களையும் சேர்த்துச் சொல்கிறார். நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது. மொத்தம் 56 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. எழுத மனமில்லை என்று சொல்லியபடியே புத்தகத்தைப் பற்றியும் எழுதிவிட்டேன். விருப்பமுள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம்.
•
வாழும் சுவடுகள்
(அனுபவப் பதிவுகள்)
– நோயல் நடேசன்
காலச்சுவடு வெளியீடு
விலை: ரூ.225
