நடேசன்
கடல் சூழ்ந்த எங்கள் எழுவைதீவுக்கு கிழமைக்கு ஒருமுறை அருகில் உள்ள அனலைதீவிலிருந்து வைத்தியர் வருவார். அவரை சந்திப்பதற்கு எப்பொழுதும் கூட்டம் நிற்கும். சடுதியாக நோய் வந்தால் வள்ளத்தின் மூலம் பக்கத்தூருக்குச் செல்வோம்.
சிலநாட்கள் வரை தாக்குப் பிடிக்கக் கூடிய நோய் வந்தால் தினம் இருமுறை நடைபெறும் மோட்டார் படகு சேவையை உபயோகிப்போம். எம்மோடு சேர்ந்து வாழும் நோய்களான தொய்வு, சர்க்கரை வியாதி, (நீரழிவு) போன்றவற்றிற்கு பக்கத்து ஊர் வைத்தியரின் வருகையை எதிர்பார்த்து நிற்போம்.
ஒவ்வொரு கிழமையும் அம்மா கையைப் பிடித்து இழுத்தபடி ”வா! டாக்குத்தரிடம் போவோம்.” என, என் பதிலோ அல்லது சம்மதமோ தேவையற்ற விடயம் எனக் கருதிக்கொண்டு என்னை டாக்டரின் முன்னிலையில் நிறுத்துவார். நான் மெல்லியதாக இருந்தபடியால் கிழமை தவறாமல் ஒரே கேள்வியையே கேட்டு வைப்பார்.
”இவன் சாப்பிடுகிறானில்லை டாக்டர்” டாக்டரின் பதிலுக்கு கூட காத்திராமல் என்னை அரை நிர்வாணமாக்கிவிடுவார். டாக்டர் சிரித்தபடி நெஞ்சு முழுவதும் ஸ்ரதஸ் கோப்பால் வைத்துப் பார்த்துவிட்டு கச்சேரிக்கு முன்பு மத்தளத்தை தட்டி சரிபார்க்கும் வித்துவான் போல் டொக்கு டொக்கு என தட்டுவார். கலக்கமும் பயமும் இருந்தாலும் குட்டையான வைத்தியர் உயரமான முக்காலியில் இருப்பது எனக்கு சிரிப்பை வரவழைக்கும்.
சோதனைகள் முடிந்தபின் சிவப்பு நிற தண்ணீர் மருந்தை கொடுக்கும்படி உதவியாளரிடம் சைகை செய்வார். ஒரே மருந்தை ஒவ்வொரு கிழமையும் தருகிறாரே என நினைத்தாலும் ஊசி ஏற்றவில்லை என்ற ஆறுதலோடு வெளிவருவேன்.
ஆறாம் வகுப்புக்கு நயினாதீவுக்கு செல்லும்வரையில் வைத்தியர் வருகையும் சிவப்பு மருந்தும் நீடித்தது,
அவுஸ்திரேலியாவில் மிருகவைத்தியராக வேலை செய்யும் போது சகவைத்தியரான காசன் (லெபனானை சேர்ந்தவர்) அரேபிய மொழியில் எழுதப்பட்ட புராதன அறுவை சிகிச்சை புத்தகமொன்றை காட்டினார். அதில் 4000 வருடங்களுக்கு முன்பு உபயோகிக்கப்பட்ட சத்திரசிகிச்சை உபகரணங்களின் படங்கள் இருந்தன. அவற்றில் பல தற்போதும் உபயோகிக்கப்படும் உபகரணங்களைப் போன்று இருந்தது, இவற்றில் முக்கியமாக கண் சத்திரசிகிச்சைக்கு பாவித்தவை அச்சொட்டாக தற்கால உபகரணங்களைப் போன்று இருந்தன.
வைத்திய முறைகள் எல்லா சமூகங்களிலும் இருந்தாலும் சீன வைத்திய முறையான அக்கியுபங்சர் புராதனமானதும், அதிக மாற்றங்கள் இல்லாமல் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது, 4500 வருடங்களுக்கு முன்பு மனிதர்களிலும் மிருகங்களிலும் பாவிக்கப்பட்ட எலும்பாலான அக்கியூபங்சர் ஊசிகள் அகழ்வாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அக்யூபங்சர் புள்ளிகளைக் கொண்ட யானையின் வரைபடம் கண்டெடுக்கப்பட்டதாக சீன மருத்துவக் குறிப்பொன்றில் உள்ளது. இதே காலத்தில் இந்தியாவிலும் ஆயுர்வேதம் நடைமுறையில் இருந்ததாக அறிகிறோம்.
சீன இந்திய மருத்துவ முறைகள் Holistic (முழுமையாக) நோயாளியைப் பார்க்கின்றன. மேல்நாட்டு வைத்திய முறையில் பகுதி பகுதியாக பார்க்கப்படுகிறது.
உதாரணமாக சீன தேச மருத்துவத்தில் நரம்பு மண்டலம் என்பது இல்லை. ஆனால் நரம்பு வியாதிகள் உள்ளன. அத்துடன் குணப்படுத்த வழிகளும் உண்டு. இதே போல் ஆயுர்வேதத்திலும் காலிலும் முதுகிலும் வாய்வினால் நோ ஏற்பட்டதாக நாம் கூறுவோம். மேற்கத்தைய மருத்துவத்தில் இவைக்கு வேறுவேறு காரணங்கள் உள்ளன. உடலில் புற்றுநோய் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பகுதி எறியப்படுவது மேற்கத்தைய முறையாகும். கீழைத்தேச மருத்துவம் மொத்த உடலில் ஏற்படும் சமநிலை மாற்றத்தின் வெளிப்பாடு என்கிறது.
அறுவை சிகிச்சைமுறை 4000 வருடங்களுக்கு முன்பாக எகிப்திலும் பாபிலோனியாவிலும் தோன்றியதாக கூறப்படுகிறது. கிரேக்கர், ரோமர்கள் பின்பு அம்முறைகளை ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட பல குறிப்புகள் இவற்றை தெளிவாக்குகின்றன.
மாட்டு ஈரலை மாலை கண்ணுக்கு பயன்படுத்துதல் (Vitamin A deficiency)
எலும்பு முறிவுகளை அறியவும் குணப்படுத்தும் முறைகள்.
கருத்தடை உறைக்காக ((condom)) ஆட்டின் சிறுகுடலில் இருந்து எடுக்கப்படும் சவ்வு பயன்படுத்தப்பட்டது.
முதலையின் சாணி (Vaginal Pessaries) Spermicide ஆக பாவிக்கப்பட்டது. (சிரிக்க வேண்டாம். நிச்சயமாக வேலை செய்ததாம்)
லெனினின் உடலை பாதுகாக்க சோவியத் டாக்டர்கள் எகிப்திய மம்மிகளின் செய்யும் தொழில்முறையை ஆராய்ந்தார்கள்.
சமீபத்திய ஓர் மருத்துவ சஞ்சிகையின் குறிப்பின் படி 5th Dynasty ஐ சேர்ந்த Pharaoh வின் அரச வைத்தியரின் சமாதி ((Tomb)) அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. Dr. Skar என்ற இவரது சமாதியில் இருந்த பல வர்ண சித்திரங்கள் இவரது செல்வத்தையும் செல்வாக்கையும் விளக்குகின்றன. இந்த சமாதியில் உடலை வெட்டுவதற்கும், தைப்பதற்கும், பாவிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் கரண்டி போன்ற பல அறுவை சிகிச்சைக்கான ஆயுதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த வைத்தியரின் சமாதி மண்ணின் சமாதிக்கு அருகில் உள்ளது. இவரது சமாதிக்குள் சென்று வந்த கட்டுரையாளர் உலகத்தின் முதலாவது வைத்தியரின் அறைக்குள் சென்று வந்தேன் என கட்டுரையை முடிக்கிறார்.
