நடேசன்
இலங்கைக்கு மிக அருகில் இருக்கும் தேசம் மட்டுல்ல கலாச்சாரம், மதம் என்பவற்றால் மிகவும் நெருங்கிய தேசம் (மியான்மார்) எனப்படும் பர்மா.
பர்மாவை நினைத்தவுடன் இராணுவ அரசுக்கு எதிராக போராடி வருடக்கணக்கில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பெண்மணி அங் சான் சூ கி யும் நினைவுக்கு வருவார். தற்போது ராக்கின் மாநிலத்தில் இருந்து அகதிகளாக வந்து வங்காளக்கடலிலும், தாய்லாந்திலும் துன்பப்படும் ரொகிங்கா முஸ்லீம் மக்களை நினைக்கத் தோன்றும். இதற்கும் அப்பால் பர்மாவில் இருந்து வெளியேறிய தமிழர்களால் சென்னையில் உருவாகிய பர்மா பஜார் , சென்னையில் நானும் சிறிதுகாலம் இருந்ததால் எனது நினைவுக்கு வரும். சமீபத்திய தமிழ்ப்படம் ஒன்றில் பர்மாவிலிருந்து இந்தியர்கள் வெளியேறியதை வைத்து அலங்கோலமாக எடுத்த படம் ஒன்றும் சிலருக்கு நினைவுக்கு வரலாம். எல்லாவற்றிற்கும்மேல் ஒரு சௌகரியமும் பர்மாவில் நமக்கு இருக்கிறது. அதாவது நமது ஊர் போன்று சாரம் (லுங்கி) அணிந்தபடி எங்கும் செல்லமுடியும்.
ஆங்கிலேய காலனித்துவத்தின் கீழ் அரசாளப்பட்ட நாடுகளில் பர்மா மிகவும் வித்தியாசமானது. கிரிக்கட் , ஆங்கிலேயரின் உடை, அவர்களது சட்டம் என எந்த ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தையும் தமதாக்கி கொள்ளாதவர்கள்தான் பர்மியர்.
பிரித்தானியர்களின் ஆங்கில மொழியை அவர்கள் சிறிதளவேனும் ஏற்கவில்லை என்பது அங்கு சென்ற எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆங்கிலேயரினது காலனிநாடுகளில் எல்லாம் காணப்படும் இடது பக்கமாக வாகனங்கள் ஓடும் பாதை பர்மாவில் இல்லாதிருந்தது. யங்கோனில் இறங்கியவுடனே அவர்கள் வாகனத்தை செலுத்தும்விதம் ஆச்சரியத்தை கொடுத்தது.ஆனால் காரில் சாரதி வலது பக்கம் இருந்து வாகனத்தைச் செலுத்தினார். பர்மியர்கள் , பிரித்தானிய காலனி ஆதிக்கத்தினர் தங்களை ஆளுவதற்கு இலகுவாக சம்மதிக்கவில்லை.
பிரித்தானியா மூன்று முறை போரை நடத்தியிருக்கும் பர்மா, முதலாவது யுத்தத்தில் பிரித்தானிப்படைக்கு ஆசியாவிலே அதிகம் சேதம் விளைவித்தமையால், பர்மாவைப் பிரித்தானியர் பகுதி பகுதியாகவே கைப்பற்ற முடிந்தது.
பர்மாவுக்கு தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக அங்கு போவதற்கு பல காலமாக எண்ணியிருந்தாலும் தேர்தல் நடைபெற்று ஆங் சான் சூ கியின் கட்சி, எண்பது வீதமான பெரும்பான்மை வாக்குகளை பெற்று புதிய அரசாங்கம் அமைப்பதற்காக காத்திருக்கிறது. புதிய அரசாங்கம் பொறுப்பேற்க முன்பாக அங்கு எனக்கு செல்ல சந்தர்ப்பம் வந்தது.
அவுஸ்திரேலியா பாஸ்போட்டுக்கு பலநாடுகளில் விசா தேவை இல்லை என்பது வசதியானதுதான் ஆனால் பர்மாவிற்கு, அவுஸ்திரேலியா பாஸ்போட்டை வைத்திருப்பவர்கள் குறைந்ததும் ஒரு மாதம் முன்பே விசாவுக்கு விண்ணபித்து எடுக்கவேண்டும்.. இதில் பர்மியர்களை அதிகம் குறை கூறமுடியாது 2010 வரையும் பர்மாவுக்கு செல்வதற்கு பல தடைகளை மேற்கு நாடுகள் விதித்து வட கொரியாவின் தம்பிபோல் வைத்திருந்தன. ஜனநாயகம், பத்திரிகை சுதந்திரம் என மேற்கு நாட்டுத் தலைவர்கள் பர்மாவிற்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தனர். தென்கிழக்காசிய நாடுகளும் சீனாவும் அதை உதாசீனம் செய்து கொண்டு இருந்தன.
ஆங்கிலேயர்கள் காலனியாக வைத்திருந்த நாடுகளில் மியான்மார் மிகவும் அடக்கு முறைக்கு உள்ளாகியது. மூன்று தடவை போர் புரிந்து பகுதி பகுதியாக கைப்பற்றியதுடன், பர்மாவின் இயற்கை வளங்களையும் பெருமளவில் கொள்ளையடித்தார்கள்.
இலங்கை, இந்தியாவில் உள்ள கிராம, மற்றும் நிலவுடமை விடயங்களை ஆங்கிலேயர் பாதுகாத்தனர். இந்தியாவின் பல பகுதிகளில் மன்னர்கள் மற்றும் ஜமீன்தார்கள் கிராமபஞ்சாயத்து விடயங்களில் கை வைக்கவில்லை. ஆனால் பர்மாவில் அரசைக் கைப்பற்றியதுடன் முற்றாக சகல மட்டத்தில் உள்ள பர்மிய தேசத்தின் சமூக உட்கட்டுமானத்தை உருக்குலைத்தார்கள். பர்மிய அரசு அதிகாரிகளை வீட்டுக்கனுப்பினார்கள். இராணுவம் காட்டில் தலைமறைவாகியது. ஒருவிதத்தில் தற்காலத்தில் ஈராக்கில், அமெரிக்கா செய்ததுபோல் சமூகத்தின் படிமுறையான வாழ்வில் வெற்றிடத்தை உருவாக்கினார்கள்.
நில உடமைச் சமூகம் ஐரோப்பாவில் படிமுறையாக வளர்ச்சியடைந்தன. விவசாயத்தால் உருவான உபரி முதலால்(Capital) நகரங்களையும் தொழிற்சாலைகளையும் உருவாக்கி கைத்தொழில் புரட்சி நடந்தது. இதன்மூலம் சர்வதேச வர்த்கம் அதன்விளைவான காலனித்துவம் உருவாக இதன்மூலம் தற்போதைய முதலாளித்துவம் அங்கு உருவாகியது. இப்படியான சந்தர்ப்பம் கிடைக்காத ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் சமுதாயங்களின் கட்டுமானங்கள் பல்லாயிரம் வருடங்களாக உருவாகியவை. இந்த அமைப்புகளின் படிமுறைகள் அழித்து, அமைக்கப்பட்ட காலனி அரசாங்கங்களின் நோக்கம் எவ்வளவு பணத்தை உள்ளுரில் இருந்து வசூலிப்பதாக மட்டுமே இருந்தது. காலனி ஆட்சியினர் வளங்களை விரைவாக உறிஞ்சும் முகமாக உருவாக்கிய ஆட்சி முறையில் பல குறைபாடுகள் தோன்றுவது சதாரணமான விடயம்.
சுதந்திரம் வந்தவுடன் இந்த குறைபாடுகள் மாறி பிரித்தானிய நாட்டின் அரசுபோல் ஜனநாயகம் பூத்துக் குலுங்கும் என எதிர்பார்ப்பது கனவே. பல ஆண்டுகள் சென்ற பின்பும் அந்தக் குறைபாடுகள் மாறாதவையாக பல நாடுகளில் இருக்கின்றன.
பர்மாவில் இந்தியர்களைக் கொண்டு ஆங்கிலேயர் தங்களது காலனி ஆதிக்கத்தை நடத்தினார்கள்.அரச அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் என இந்தியர்களால் நிறைத்தார்கள். பொலிஸ்காரர்களாக சீக்கியர்களையும், அரசாங்க அலுவலகங்களில் லிகிதர்வேலைகளில் வங்காளிகளையும், கூலிவேலைகள் செய்வதற்கு தமிழரையும் கொண்டு வந்தனர். ஆட்சியைக்கூட ஆரம்பத்தில் கல்கத்தாவில் இருந்தும் பின்பு டில்லியில் இருந்தும் இந்தியாவின் ஒரு பகுதியாக நடத்தினார்கள். இதை பர்மியர்கள் வெறுத்தார்கள். பர்மிய இராணுவம் முற்றாக காட்டிற்கு சென்று தொடர்ந்தும் பிரித்தானியர்களை எதிர்த்தார்கள்.
பர்மீயர்களின் எதிர்ப்பு கொள்ளையடிப்பதிலும், கொலைசெய்வதிலும் ஒழுங்கமைப்பு இல்லாமல் தனிநபர் செயலாக மாறியபோது, இந்தியர்களை தங்கள் இராணுவத்தில் வைத்து பர்மிய கலவரங்களை எதிர்த்தார்கள்.
சுதந்திரமடைந்த பர்மாவில் இந்தியர்களது ஆதிக்கம் நிறையவே இருந்தது..1962 இல் ரங்கூனில் 67 வீதமான வர்த்தகத்தை இந்தியர்கள் செய்தார்கள்.அப்பொழுது ரங்கூனின் ஜனத்தொகையில் அரைப்பகுதியினர் இந்தியர்கள்.
காலனித்துவ காலத்தில் இந்தியர்கள் இராணுவத்திலும் பொலிசிலும் இருந்ததால், பர்மியர்கள், இந்தியர்களை, பிரித்தானிய காலனி ஆதிக்கத்தின் ஒரு கரமாகப் பார்த்தார்கள். பர்மிய விவசாயிகள் இந்திய வட்டிக்காரரிடம் தங்கள் நிலத்தை இழந்தனர்.1962 இல் ஏற்பட்ட இந்தியர்களின் வெளியேற்றத்திற்கு பல காரணங்கள் இருந்தாலும் மேற்கூறியவை முக்கியமானவை.
42 ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடம் இருந்து மூன்று வருடங்கள் பர்மாவை ஜப்பான் கைப்பற்றி இருந்தது. சுதந்திரத்தின் பின்பாக இரண்டு இராட்சதர்களுக்கிடையே தவிப்பது போல் சீனாவிடமும் இந்தியாவிடமும் இருந்து புவியியல், பொருளாதாரம், சட்டவிரோதமாக உள்ளே வந்து குடியேறுபவர்களில் இருந்து தனித்தன்மை கலாச்சாரம் சுதந்திரத்தை பாதகாப்பது இலகுவானதகவில்லை..
மேற்கூறிய காரணிகளே பர்மா, அறுபது வருடங்களாக வெளிநாடுகளுடன் தொடர்பை குறைத்துக்கொண்டதற்கான அடிப்படை. இதற்கு அவர்கள் கண்டுபிடித்த கருத்தியல் பர்மா வழியில் சோசலிசம். சீனர்களின் கம்யூனிசமும் வேண்டாம், இந்தியர்களின் ஜனநாயகமும் எமக்குத் தேவையில்லை. தனிவழிச் சோசலிசம் எமது வழி எனப்புறப்பட்டு நாட்டை 26 வருடங்கள் வங்குறோத்தாக்கியதை தற்போதைய அரசாங்கங்கள் வெளிப்படையாக ஒத்துக்கொள்வது மகிழ்சியான விடயம்.
சோசலிசம் பலநாடுகளில் நீர்த்துப்போய் விட்டது போல் பர்மாவிலும் தோல்வியடைந்துவிட்டது என்பதை 1988 இல் பர்மாவை ஆண்ட இராணுவ அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு பல தவறுகளை போக்கியதுடன், தற்போதைய தென்கிழக்காசிய அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டது. இராணுவம் பல சீர்திருத்தங்களைச் செய்தபோதும் ஜனநாயகமற்ற விதத்தில் நடந்து கொண்டது.
