படித்தோம் சொல்கின்றோம்
சர்வதேசம் எங்கும் ஒலிக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் முடிவுறாத முகாரி
ஈழத்து புங்குடுதீவிலிருந்து அவுஸ்திரேலியா சிட்னிவரையில் தொடர்ந்து வரும் ஒரு கவிஞனின் ஆத்மக்குரல்
மாறிவிட்ட நம்தேசத்தில்
இன்னம் எவ்வளவு காலம்தான்
இசைத்துக்கொண்டிருக்கும் இந்த முகாரி
நெஞ்சில் உருண்ட கேள்வியோடு
என் பிஞ்சுக்குழந்தையைப் பார்க்கிறேன்.
முகாரி அறியாத மகிழ்வோடு
நீலாம்பரி இசைத்துக்கொண்டிருக்கிறது.
இலங்கையில் கடலை அண்டிய புங்குடுதீவிலிருந்து கடல் சூழ்ந்த கண்டம் அவுஸ்திரேலியாவுக்கு வந்து, கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக இலக்கியப்பிரதிகளை எழுதிவரும் செ. பாஸ்கரனின் முதலாவது கவிதைத்தொகுதியில் இடம்பெற்றுள்ள இந்நூலின் தலைப்பில் வெளியாகியிருக்கும் கவிதையின் இறுதி வரிகளையே இந்தப்பதிவின் தொடக்கத்தில் படித்தீர்கள்.
இதனை எழுதிக்கொண்டிருக்கும்பொழுதும் இலங்கையில் பல தாய்மாரின் முடிவுறாத முகாரிகள்தான் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
ஒரு தாய் தாங்கள் அழுது அழுது கண்ணீரும் வற்றிவிட்டது என்கிறாள்.
சர்வதேசப் புகழ்பெற்ற லண்டன் பீ.பீ.சி.யின் ஒலிபரப்பில் அந்தத்தாயின் முகாரி கேட்கிறது. அதனைக்கேட்டுக்கொண்டே பாஸ்கரனின் இந்தத்தொகுப்பினை படிக்கின்றேன்.
பாஸ்கரன் பிறந்த ஊர் புங்குடுதீவின் மகிமை பற்றி சமீபத்தில் எழுதியிருந்த ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கின்றேன். கவிஞர்கள், கலைஞர்கள், சமூகப்பணியாளர்கள், கல்விமான்கள் பலரால் பெருமைபெற்ற புங்குடுதீவு ஒரு பள்ளிமாணவிக்கு நேர்ந்த வன்கொடுமையால் உலகத்தையே திரும்பிப்பார்க்கவைத்தது.
புங்குடுதீவு எமக்கு வழங்கிய பல படைப்பாளிகள் மத்தியில் மு. பொன்னம்பலம், சு. வில்வரத்தினம் ஆகியோர் கவிதைத்துறையில் முத்திரை பதித்தவர்கள். அவர்களை ஆதர்சமாகக்கொண்டுள்ள கவிஞர் பாஸ்கரன் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவராக அவுஸ்திரேலியா சிட்னிக்கு வந்து இக்கண்டத்தின் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முதலாவது தலைமுறையைச் சேர்ந்தவராக அயற்சியின்றி எழுத்து – வானொலி -ஊடகம் -நாடகம் – இணைய இதழ் முதலானவற்றில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார்.
கால் நூற்றாண்டுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் அமைதியாக நிதானமாக இயங்கும் இவரின் முதலாவது கவிதை நூல் முடிவுறாத முகாரியும் அமைதியாக நிதானமாக ஆனால், தாமதமாக எம்கரங்களுக்கு வந்துள்ளது.
இவருடைய ஆதர்சக்கவிஞர் மு.பொன்னம்பலம் எழுதா விதிகளையும் உண்டாக்கியவர் என்னும் தலைப்பில் தமது மதிப்பீடுகளை இந்நூலின் அணிந்துரையாக பதிவுசெய்துள்ளார்.
இலங்கையில் நீடித்த போர் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாராப்போர், காணமல் போனவர்களை கண்ணீருடன் தேடி அலையும் போர், சிறைகளில் பலவருடங்களாக வாடும் உறவுகளை விடுவிக்க தெருவில் இறங்கிய பெண்களின் கண்ணீரும் வற்றிய நிலையில் தொடரும் போர் என்பன இன்னமும் முற்றுப்பெறவில்லை. அந்த முடிவுறாத முகாரியையே பாஸ்கரனின் கவிதை வரிகள் இசைத்துக்கொண்டிருக்கின்றன.
ஏழு ஸ்வரங்களுக்குள் ஒலிக்கும் இந்த முகாரி ராகம் ஒவ்வாரு இல்லங்களிலும் கேட்கிறது. அந்த இல்லங்கள், இலங்கையில், ஆப்கானிஸ்தானில், சூடானில், சிரியாவில், யேமனில், ஈராக்கில் என்று எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
அதனால் பாஸ்கரனின் கவிதை வரிகள் சர்வதேச பரிமாணம் கொண்டிருக்கின்றன.
பிஜித்தீவுக்கு செல்லாமலேயே அங்கே கரும்புத் தோட்டங்களில் வாடும் இந்திய மக்களின் முகாரியை பாரதியார் கேட்டிருப்பாய் காற்றே …என்று பதிவுசெய்தார். இலங்கை மலையகத்திற்கு என்றைக்குமே சென்றிராத புதுமைப்பித்தன், அங்கு அட்டைக்கடியுடன், மண்சரிவு அபாயத்துடன் வாழ்ந்த இந்திய மக்களின் துன்பக்கேணி எழுதினார்.
அவர்களின் வரிசையில் இன்று, அவுஸ்திரேலியாவில் வதியும் கவிஞர் பாஸ்கரன் இலங்கையில் தமது பாதங்கள் முத்தமிட்ட -முத்தமிடாத பிரதேசத்து மக்களின் ஓயாத முகாரியை மீட்டுகிறார். அந்த வலியை தாமும் சுமந்து எம்மையும் வலி சுமக்க அழைக்கிறார்.
அதிகாரம் துப்பாக்கி வடிவில் ஆளும் வர்க்கத்திடமும் விடுதலை பெற்றுத்தருவோம் என்று புற்றீசலாய் புறப்பட்டு வந்த இயக்கங்களிடமும் இருந்தது. ஆனால், ஆளும் வர்க்கத்திற்கும் அதற்கு எதிராக புறப்பட்டவர்களுக்கும் துப்பாக்கிகள் எங்கிருந்து வந்தன. துப்பாக்கிச்சன்னங்களுக்குள் நசுங்கி மடிந்த அப்பாவி இன்னுயிர்கள் எத்தனை எத்தனை…? அதனால் பாஸ்கரனின் தர்மாவேசக்குரல் இப்படி ஒலிக்கிறது:
சொந்த தேசத்தைவிட
எங்கள் தேசத்தில் அவர்களுக்கு
அதிகம் அக்கறை
அதனால்தான்
சமாதான தூதர்களாக வந்து
எங்கள் மக்களுக்கு வரைபடம் வரைந்து
கோடு கிழிக்கிறார்கள்.
எமக்கு உதவிகள் வேண்டாம்
எம்மை வாழவிடுங்கள்
குரல்வளை நசிக்கப்படும்போதும்
குரலொன்று எழுகின்றது
போர் வேண்டாம் எங்களுக்கு
நீங்கள் தூரப்போங்களென்று
மனிதம் மதிக்கப்படும் வரை
எமக்கு போர் வேண்டாம்
துப்பாக்கி சனியன்
துப்பாத இடம்வேண்டும்
தூரப் போங்கள்.
இனிச்சொல்லுங்கள் பாஸ்கரனின் இந்த வரிகள் எம் இலங்கையை மாத்திரம் நோக்கிச் சொல்லப்பட்டதா…?
மேலே குறிப்பிட்ட கந்தகப்புகை மணக்கும் தேசங்கள் அனைத்துக்கும் அங்கு அத்துமீறி வரும் சக்திகளுக்கும் சொல்லப்படுகிறது.
1985 இற்கு முன்னர் ஐரோப்பிய நாடுகள் பல இலங்கையருக்கு தஞ்சம் அளித்தன. அவுஸ்திரேலியாவும் அவ்வாறே வந்தவர்களுக்கும் இடமளித்தது. பல்தேசிய நாட்டினர் வாழும் குடியேற்ற நாடாக விளங்கும் இக்கண்டத்திற்கு வந்த தமிழர்களில் தொடக்கத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய உள்ளார்ந்த கலை இலக்கிய ஆற்றல் மிக்கவர்கள் தமது புலப்பெயர்வு வலிகளையும் பருவகால மாற்றங்களின் விந்தைகளையும் தாயகத்தின் மீதான ஏக்கங்களையும் பதிவுசெய்யும் படைப்புகளை எழுதினர். அவர்களில் ஒருவராக தனது அடையாளத்தை கவிதை, நாடகம், வானொலி, இணையம் என்று தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொண்ட பாஸ்கரன் அதிகாரத்தை கையிலெடுத்த எந்த வர்க்கத்தின் பக்கமும் சரியாமல், பாதிக்கப்பட்டவர்களின் குரலாய் எழுந்து நிற்கிறார். எழுத்தூழியத்தில் ஈடுபடுகிறார்.
இலங்கையில் ஊரில் படிக்கும்போது மாணவர் பராயத்திலேயே எழுதத்தொடங்கியவர். அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னரும் தான் நேசித்த கலை, இலக்கியப்பணிகளில் ஈடுபட்டார். நாடகங்கள் எழுதினார். இயக்கினார், நடித்தார். சிட்னியில் இலக்கியப்பவர் என்ற அமைப்பில் இணைந்தார். வானொலியில் ஊடகவியலாளராக பணிதொடர்கிறார். சிட்னி ஹோம்புஷ் தமிழ்ப்பாடசாலை – சிட்னி அறிவகம் முதலான அமைப்புகளில் முக்கிய பதவிகளில் இயங்குகிறார். தமிழ் முரசு அவுஸ்திரேலியா என்ற வாராந்த இணையத்தளத்தின் ஆசிரியர்குழுவில் பல வருடங்களாக இணைந்துள்ளார். வானொலி தொடர்நாடகங்களை எழுதித்தயாரித்து ஒலிபரப்பினார். இவ்வாறு பலதரப்பட்ட கலை, இலக்கிய, கல்விப்பணிகளில் அயராமல் உழைத்தவர் தமது கவிதைகளை தொகுத்து வெளியிட ஏனோ தாமதித்தார்.
ஆனால், அவர் மனைவி சாந்தியும் கலை, இலக்கிய பிரக்ஞை கொண்டிருந்தமையால் உதிரிகளாக கணவர் கவிதைகள் பறந்து மறைந்துவிடாமலிருக்க பக்கத்துணையாக நின்று, இந்நூலை வெளிக்கொணர உதவியிருக்கிறார். சிட்னியில் வதியும் எமது மூத்த கவிஞர் அம்பி அவர்கள், பாஸ்கரனை எங்கு கண்டாலும் முதலில் சுகம் விசாரிக்காமல், ” எங்கே உமது கவிதை நூல் ” என்றுதான் கேட்டு வந்திருக்கிறார்.
உலகெங்கும் போரின் சுவடுகள் நிரம்பியிருக்கும் – சாவின் நிழல் தொடர்ந்துவரும் தேசங்களின் முடிவுறாத முகாரி பாஸ்கரனின் கவிதை வரிகளில் தாமதமாக நூல் வடிவில் வந்திருந்தாலும், இதில் இடம்பெற்றிருப்பவை காலத்துக்கு காலம் இதழ்களில், இணையத்தளங்களில் வெளிவந்தவைதான்.
தொகுப்பாக பார்க்கின்றபொழுது, பாஸ்கரன் சுமந்து வந்த சுமையும் அவற்றின் வலிகளும், அவற்றுக்குப்பின்னால் தெரியும் சர்வதேசப்பார்வையும் எம்மை சமகாலத்துடன் ஒன்றிவிடச்செய்கிறது.
போரின் துயரம், இடப்பெயர்வு, புலப்பெயர்வு கடந்து – நாடின்றி, வீடின்றி, சொந்த பந்தங்கள் ஏதுமின்றி, பரதேசிகளாய் பார் எங்கும் பரந்திருக்கும் மாந்தரின் விம்மலை – தாயகம் குறித்த ஏக்கங்களையெல்லாம் பாஸ்கரன் பதிவுசெய்கிறார்.
அத்துடன் ஊழ்வினை பற்றியும் எழுதுகிறார். ஊழ்வினை குறித்து பல படைப்பாளிகள், ஆன்மீகவாதிகளும் எழுதியுள்ளனர். குறிப்பாக லியோ ரோல்ஸ் ரோயும் ஊழ்வினை பற்றி எழுதியிருப்பதாக சொல்வார்கள்.
ஆங்கிலத்தில் Every action has it’s re action என்பார்கள்.
இங்கே பாஸ்கரனின் கவிதையை பாருங்கள்:
வசந்த காலத்தின் வருகை
எனக்குள்ளும் புகுந்துகொள்ளும்
வேப்பமரக் குயில் பாடுகின்றபோது
ஒற்றைக்குரலெடுத்து கூவுவேன் நானும்
கல்லெடுத்து வீசி கணத்தில்
மகிழ்ந்து மனம் குதூகலிக்கும்
பாட்டை நிறுத்தி பறந்து சென்று
குயில் சோகக் குரலிசைக்கும்
எல்லையற்ற ஆனந்தம் என்னுள் புகுந்துவிடும்
” குயிலின்ர சாபம் சும்மா விடாது”
சொல்லிச்செல்வாள் மூதாட்டி
எதுவும் என் காதில் விழாது.
நாயொன்று என் வீட்டை தாண்ட முயற்சிக்கும்
கல்லோடு நிற்கும் எனக்காக ஒரு தயக்கம்
பார்க்கவில்லை என
பாசாங்கு பண்ணி
மறுபக்கம் பார்த்து நிற்பேன்
மனக்கண்ணோ பிடரியில்
உட்கார்ந்து உன்னிப்பாய் பார்த்திருக்கும்
நேரம் பார்த்து கடந்துவிடும் முயற்சி
உச்ச ஓட்டமாய் ஓடிவிட முயலும் அது
விண்கூவி பறக்கும் கல்
நாயின் நடு முதுகை பதம் பார்க்கும்
“ஊ…” என்ற சத்தம் உயர்த்திய பின்னங்கால்
நொண்டிச் செல்லும் அப்பாவி நாய்
என் வீரத்தின் செயல்கண்டு
பெருமிதம் கொள்வான் இளையவன்
” நாயை அடிச்ச பழி சும்மாவிடாது”
சொல்லிச்செல்லும் சோலைக்கிழவன்
சிரிப்போ என் மறுமொழியாகும்
அது அன்றொரு காலம்
பாட்டியும் சோலையும் சொன்னவை
பலித்துவிட்டதா…?
பார்க்கும் இடமெல்லாம் நொண்டிக்கொண்டு
என் உறவுகளின் வாழ்க்கை
வீரத்தின் விளைவுகளாய்
முகாம் முட்கம்பி வேலிகளும்
முளைத்துக்கொண்டே போகிறது
உறவுகளைக்கூட பார்க்க முடியாத
தடுப்பு முகாம் வாழ்க்கை
ஆயுதக்காரர்கள் இயமனின் வடிவில்
எழுந்து நிற்கின்றார்
இந்தக்கவிதை மாற்றம் என்ற தலைப்பில் வந்துள்ளது.
இக்கவிதையை கூர்ந்து கவனித்தால், அந்த பாட்டி மூதாட்டியும் சோலைக்கிழவனும் கல்லெடுத்து வீசும் அச்சிறுவனும் குறியீடுகளாக வருகிறார்கள்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் குடிநீர் மாசடைந்து – மக்கள் தாகம் தணிக்க சிரமப்பட்டபொழுது, பாஸ்கரனினதும் எனதும் ஆதர்சமாக விளங்கிய புங்குடுதீவு பெற்றெடுத்த மூத்த படைப்பாளி மு. தளையசிங்கம் மரணிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் அவ்வூரில் கண்ணகி அம்மன் கோயில் கிணற்றில் அடிநிலை மக்கள் தண்ணீர் அள்ள அனுமதி கோரி உண்ணாவிரதம் இருந்த காட்சிதான் நினைவுக்கு வந்தது.
கூவும் குயிலும், நன்றியுள்ள நாயும் கல்லெறிபட்டு ஓடி மறைந்து ஈனக்குரலில் கூவியதையும் குரைத்ததையும் காலம் கடந்து முட்கம்பி வேலிகளுக்குள் சிறைப்பட்ட மக்களின் கண்ணீருடன் ஒப்பிட்டுப்பார்க்கிறார் இந்த மனிதநேயக் கவிஞர்.
கவிஞன் உணர்சிமயமானவன். அயலான் வலியும் தன்வலியென வருந்தும் இயல்புள்ளவன்.
அந்த இயல்புடன் எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் பாஸ்கரனின் உள்ளக்குமுறல்கள் தேசம் கடந்து, சர்வதேச ரீதியாக ஒலிக்கிறது முகாரி ராகமாக. ஆமாம்– அது முடிவுறாத முகாரி.
( முக்கிய குறிப்பு: இன்று 17 ஆம் திகதி சனிக்கிழமை அவுஸ்திரேலியா சிட்னியில் ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் மாலை 5 மணிக்கு பாஸ்கரனின் முடிவுறாத முகாரி கவிதை நூல் வெளியிடப்படுகிறது)
letchumananm@gmail.com
