ஒரு தீர்க்கதரிசியின் சிந்தனைகளை பதிவு செய்த
கடிதங்கள்
முருகபூபதி
‘வேற்றுமைகளுக்கு நிறைய காரணங்களை கற்பிக்கலாம். ஆனால் ஒற்றுமைப்படுவதற்கு காரணங்களைத்தேட வேண்டிய சமுதாயத்தில் வாழும் துர்ப்பாக்கியசாலிகள்தான் எழுத்தாளர்கள்.’- என்ற சிந்தனைதான், டானியலின் கடிதங்களைப்படித்தபொழுது எனக்குள் தோன்றியது.
தமிழில் தலித் இலக்கிய முன்னோடி என்று விதந்து போற்றப்படும் கே.டானியல், இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 1927 ஆம் ஆண்டு பிறந்து தமிழ்நாட்டில் தஞ்சையில் 1986 ஆம் ஆண்டு மறைந்து அங்கேயே கல்லறையில் நிரந்தரமாக அடக்கமானவர்.
1982-85 காலப்பகுதியில் தமிழக மார்க்ஸீய இலக்கியவாதியான அ.மார்க்ஸ_க்கு டானியல் எழுதிய சில கடிதங்களின் தொகுப்பான இந்த நூலை, கனடாவுக்கு நான் சென்றிருந்த சமயம் எனக்குத்தந்தவர், டானியலின் மகன் புரட்சிதாஸன். அன்று அவரது வீட்டில் டானியல் சம்பந்தப்பட்ட பல ஒளிப்படங்களையும் பார்க்கமுடிந்தது. அவற்றுள் சில டானியலின் இறுதிக்காலத்தை, ஆசனம் ஒன்றில் உட்காரவைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடலை, அஞ்சலி செலுத்தியவாறு நின்ற சில எழுத்தாளர்களை காண்பித்தன.
அவரது கடிதத்தொகுப்பினுள்ளே சென்றபோது, பல இலங்கைச்சம்பவங்கள் எனக்கும் நெருக்கமானதாக இருப்பதை மனக்குகையில் பதிவாகியிருக்கும் அந்நாள் நினைவுகளிலிருந்து உணரமுடிந்தது.
டானியல் இறந்த செய்தியை இலங்கைக்கு அறிவித்தவர் அவரது அருகிலேயே இருந்த வி.ரி. இளங்கோவன், நான் அச்சமயம் வீரகேசரியில் ஆசிரிய பீடத்திலிருந்தேன். சில்லையூர் செல்வராசன் தொலைபேசி ஊடாக எனக்கு அந்த துயரச்செய்தியை தந்தார்.
1975 முதல் 1986 வரையில் ( டானியல் தமிழகம் செல்லும் முன்னர் கொழும்பில் காவலூர் ராஜதுரையின் வீட்டில் சந்தித்த அந்த மாலைநேரப்பொழுது) அவருடன் எனக்கு சகோதரத்துவ நட்பு நீடித்தது.
எனவே, இந்தக்கடிதத்தொகுப்பில் டானியல் குறிப்பிடும் பல சம்பவங்களும் இளங்கோவன் சுட்டும் சில நிகழ்வுகளும் எனது நெஞ்சத்துக்கும் நெருக்கமானவைதான்.
இலக்கியத்தில், அரசியலில் கடிதக்கலை என்பதும் கவனத்துக்குரியதுதான்.
இன்று பேனை எடுத்து கடிதம் எழுதி, கடித உறை வாங்கி அதில் அதனை இட்டு அஞ்சல் தலை ஒட்டி தபால் பெட்டியுள் போடும் பழக்கம் அரிதாகிக்கொண்டிருக்கும் கணினி யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தபால் மூலம் அநாமதேய மொட்டைக்கடிதங்கள் அனுப்பப்பட்ட காலம் சென்று அநாமதேய மின்னஞ்சல்களை தரிசிக்கும் அபாக்கியவாதிகளாகிவிட்டோம்.
அடுத்த நூற்றாண்டில் தபால்தலைகளும் தபாற்கந்தோர்களும் நூதன சாலைகளுக்குள் பிரவேசித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பண்டிதர் ஜவஹர்லால் நேரு சிறையிலிருந்து மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களே பின்னர் ‘ உலக சரித்திரம்’ என்ற விரிவான நூலாக வெளியானது.
“ நேருவின் அந்தக் கடிதங்கள் அடங்கிய உலக சரித்திரம் படித்த பின்னர்தான் கம்யூனிஸத்தில் நம்பிக்கை கொண்டதாக தமிழக கம்யூனிஸ்ட் கட்சி தோழர் எம்.கல்யாணசுந்தரம் ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறார்.
கி.ராஜநாராயணனும் கைலாசபதியும் இலக்கியவாதிகளுக்கு எழுதிய கடிதங்கள் சிலாகித்துப்பேசப்படுபவை.
ஆனால் அவற்றில் விவாதத்திற்குரிய காரசாரமான விடயங்களை நாம் பார்க்கமுடியாது.
டானியலின் கடிதங்களில் அவரது தர்மாவேசமும் தேசிய இனப்பிரச்சினை குறித்த அவரது திடமான மாக்ஸீய நிலைப்பாடும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தில் அவரது போர்க்குணமும் வெளிப்படுகின்றன. அத்துடன் அவரது மனிதநேயம் மிக்க இயல்பும் துலக்கமாகின்றது.
அதனல், அவரது கருத்துக்கள் கவனத்துக்கும் விவாதத்திற்குமுரியதாகின்றன.
இத்தொகுப்பில் இடம்பெறும் சில கடிதங்கள் அவரது நண்பர் தஞ்சை பிரகாஷினால் ‘பஞ்சமர்’ நாவலின் இரண்டு பாகங்கள் வெளியீடு சம்பந்தமாக சந்தித்த கசப்பான அனுபவங்களைப்பேசுகின்றன.
கடிதங்ளைத்தொகுத்திருக்கும் மார்க்ஸ{ம் தஞ்சை பிரகாஷின் நடவடிக்கைகளை தமது தொகுப்புரையில் பதிவுசெய்கிறார். டானியல் தமது படைப்புகளை தமிழகத்தில் வெளியிடுவதில் எதிர்நோக்கும் சிரமங்களையும் அவற்றை இலங்கைக்கு தருவிப்பதில் அவருக்கு ஏற்படும் மன உளைச்சல்களையும் சில கடிதங்களில் வாசிக்கும்பொழுது எமக்கு டானியல் மீது அனுதாபமே வருகிறது.
தஞ்சை பிரகாஷ் மீது டானியலுக்கிருந்த கோபத்தைக்காட்டிலும் அவரைப்பற்றிக்கொண்டிருந்த கரிசனைதான், வியக்கவைக்கிறது.
27-7-82 ஆம் திகதி எழுதியிருக்கும் கடிதத்தில் இப்படிக்குறிப்பிடுகிறார்:- “…..பஞ்சமர் விஷயத்தில் என்னதான் அவர் தவறுகள் செய்திருந்தாலும் அவர் மீது என்னால் ஆத்திரப்படமுடியவில்லை. கீழ்மட்ட வர்க்கத்தைச்சேர்ந்த ஒருவனிடம் 99 வீதமான தவறுகள் இருந்தாலும் மிகுதியுள்ள ஒரு வீத நல்ல தன்மைக்காக – அந்த நல்லதன்மையை பொதுமைக்குப் பயன்படுத்திக்கொள்வதற்காக அவனின் உறவை வைத்துக்கொள்ளும் எனது சுபாவத்திலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. பாவம் அந்த மனிதனின் கொள்கை நிலைப்பாடற்ற போக்குக்கு நாம் கவலைப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். முடிந்தவரை முரண்பட்டுக்கொள்ளாமல் இருக்கப்பார்ப்போம்.”
தர்மாவேசம்கொண்ட டானியலின் மற்றுமொரு பக்கம்தான் அவரது இந்த இயல்பு.
அதே கடிதத்தில் இப்படியும் குறிப்பிடுகிறார்:- ‘ பொதுவில் தத்துவ ரீதியாக இருக்கக்கூடிய முரண்பாடு உடனடி நடைமுறை வேலைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தின் தத்துவங்களுக்கான முரண்பாட்டை முன்னெடுப்பது சரியானதுமல்ல.’
‘ஈழத்திலிருந்து ஒரு இலக்கியக்குரல்’ என்ற பெயரில் தமது நூலொன்று வெளியாவதிலும் டானியலுக்கு உடன்பாடு இருக்கவில்லை என்பதும் ஒரு கடிதம் மூலம் எமக்குத்தெரிகிறது. அதே பெயரில் மற்றுமொரு நூலொன்றை டொமினிக் ஜீவா வெளியிட்டிருக்கிறார் என்பது மாத்திரம் அதற்குக் காரணம் அல்ல. ‘ஈழம்’ என்ற சொல் மீது டானியலுக்கிருந்த அலர்ஜியையும் மற்றுமொரு கடிதத்தில் பார்க்கின்றோம்.
ஒரு சாதிக்கலவரம் குறித்து அவர் எழுதிய கடிதம் ஒன்றில் (6-9-82) “ … மக்கள் தடி கம்புகளுடன் எதிர்கொண்டதைப் பார்க்கும்போது- பார்த்தபோது பிரமித்துப்போனோம். அடக்குமுறைகளால் ஏற்படும் பீதிகள் நிரந்தரமானவையல்ல. அது மக்களை வீறு கொள்ளும் அளவுக்கு உற்சாகமும்படுத்துகிறது என்பதனை உணர்த்தியது. தலைவர்கள் பேச்சுக்கப்பால் தியாகங்களுக்குப் பின்வாங்குவதற்கு எதிர்மாறாக மக்கள் தியாகங்களுக்கும் தயாராவர் என்பது புதிய உற்சாகத்தையே ஏற்படுத்துகிறது.”
என்று எழுதுகிறார்.
ஒரு காலத்தில் இலங்கையில் இடதுசாரிகள் மாஸ்கோ சார்பு பீக்கிங் சார்பு என பிரிந்து நின்று சத்தம்போட்ட காலத்தில் மாஸ்கோ சார்பாளர்கள் பீக்கிங் சார்பினரை ‘முனிகள்’ என்றும் பீக்கிங் சார்பினர் மாஸ்கோ சார்பினரை ‘திரிபுவாதிகள்’ என்றும் திட்டிக்கொண்டிருந்தனர்.
தமிழ் தீவிரவாத இயக்கங்கள் ஆயுதங்களைத்தூக்கியதும் இந்த இடதுசாரிகளின் வாயிலிருந்து உதிர்ந்த அந்த சொற்பிரயோகங்கள், துப்பாக்கிகளுக்குப்பின்னால் மறைந்த சாதியம் போன்று மறைந்தன.
இனங்களின் சுயநிர்ணய உரிமைபற்றி பேசிய ருஷ்யாவும் சீனாவும் கியூபாவும் வியட்நாமும் இலங்கையின் சமகால யுத்தத்தின்போது யார் பக்கம் நின்றன என்பதைப்பார்க்க டானியல் இல்லை என்பது ஒரு நகைமுரண்தான். எனினும் டானியல் சாதிப்பிரச்சினையிலும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையிலும் தெளிவான தீர்க்கதரிசனமும் அதேசமயம் துணிச்சலும்கொண்ட கருத்துக்களை தமது கடிதங்களில் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். அந்த வகையில் பல முற்போக்கு எழுத்தாளர்களில் (நான் உட்பட) இருந்து நிரம்பவும் வேறுபடுகிறார்.
எழுதுமட்டுவாலில் பாடசாலைக்குச்சென்று திரும்பிய சிறுபான்மை சமூகத்தைச்சேர்ந்த பிள்ளைகளின் கொப்பி புத்தகங்களை பறித்து துவம்சம் செய்த தமிழ் சாதிவெறியர்களை, யாழ். பொது நூலக எரிப்பில் சம்பந்தப்பட்ட சிங்கள தீய சக்திகளுடன் ஒப்பிடுகிறார்.
இந்நூலில் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ள டானியல் – மார்க்ஸ் நேர்காணலில் தனி ஈழம் கோரிக்கை சாத்தியமா? என்ற கேள்விக்கு நேரடியாகவே இரத்தினச்சுருக்கமாக ஒரு வரியில் சாத்தியப்பட்டதல்ல எனச்சொல்கிறர். மார்க்ஸ் டானியலுக்கு எழுதிய கடிதங்கள் இந்நூலில் இல்லையாயினும் அவரது பல கடிதங்களுக்கு டானியல் எழுதிய கடிதங்களின் மூலம் அவர்கள் இருவருக்கும் இடையில் தமிழரின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான மாறுபட்ட சிந்தனைகள் இருந்திருப்பதும் காலப்போக்கில் மார்க்ஸே நிலைமைகளை புரிந்துணர்வோடு ஏற்றுக்கொள்வதையும் அவதானிக்க முடிகிறது.
ராமேஸ்வரம் கடலில் மீனவப்பெண்கள் மீன் பிடித்தொழில் ஈடுபடுவதைப்பார்த்து வியக்கும் டானியல் அந்தக்காட்சியைப்பற்றி, மார்க்ஸிடம் ரஸனை உணர்வோடு பேசும்போது – ‘ உண்மையே அழகு என்று சொல்லக்கேட்டிருக்கின்றேன். உழைப்பே அழகு’ என்று அன்று டானியல் சுட்டிக்காட்டிய காட்சியில் புரிந்துகொண்டேன்’- என்று பதிவு செய்யப்படுகிறது.
லொண்டரி நடத்தியவர், சோடாப்போத்தல் விற்பனையில் ஈடுபட்டவர், மீன்பிடித்தொழிலும் தெரிந்தவர் பஞ்சமருக்காக பாடுபட்ட டானியல். எனவே உழைப்பின் அழகை அவரால் அனுபவத்தால்தான் சொல்ல முடிந்திருக்கிறது.
மல்லிகை ஜீவாவுக்கும் டானியலுக்குமிருந்த முரண்பாடுகள் கூட இக்கடிதங்களில் வெளிப்பட்டிருக்கின்றன. மல்லிகைக்கு தனது படத்தைக்கொடுக்காமல் டானியல் மறுத்தாராம். ஆனால் தமிழ் நாட்டில் அவரது புத்தக வெளியீட்டுக்கு சிதம்பர ரகுநாதன் (மாஸ்கோ சார்பு) தலைமைதாங்கியிருக்கிறார். என்பது ஜீவாவின் குற்றச்சாட்டு. என்பதையும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஜீவாவே டானியலின் நூல்களை என்.ஸி.பி.எச். பதிப்பகத்திலும் நர்மதா பதிப்பகத்திலும் வெளியிடுவதற்கு பெரும் பிரயத்தனப்பட்டிருப்பதும் சில கடிதங்களில் தெரிகிறது.
பின்னாட்களில் மல்லிகையில் டானியலின் படம் அட்டையில் பிரசுரமானதும். யாழ்ப்பாணத்தில் ஜீவா மல்லிகை வெளியிட்ட காலத்தில் அவரது பிறந்த நாளின்போது டானியல் நேரில் சென்று வாழ்த்தியதும் நான் அறிந்த செய்திகள். அத்துடன் டானியலுக்கு சார்பாக அவரது மறைவுக்குப்பின்பு தொடர்ச்சியாக குரல் கொடுத்தவரும் ஜீவாதான் என்பதும் காலம் வந்தால் தஞ்சாவூரில் இருக்கும் டானியலின் கல்லறையை பெயர்த்துக்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரவேண்டும் என்று குழந்தையுணர்வுடன் எழுதியதும் ஜீவாதான்.
நானறிந்த மட்டில் டானியல், ஜீவா, எஸ்.பொ. ஆகியோருக்கிடையில் நீடித்த முரண்பாடுகள் கருத்தியல் சார்ந்தது. ஆனால் அவர்கள் பஞ்சமர் சமூகத்திலிருந்து வந்தமையாலும் (அதேசமயம் ஒரேமுகாமிலிருந்து எழுதி பின்னர் வேறு முகாம்களுக்குள் தங்களை முடக்கிக்கொண்டிருந்தாலும்) ‘எழுத்தாளன்-இலக்கியவாதி’ என்ற ஒற்றுமைக்குள் மாத்திரம் நின்றுகொண்டனர்.
இந்நூலில் டானியல் மகன் புரட்சிதாஸன் மற்றும் டானியலின் ஆத்ம நண்பன் வி.ரி.இளங்கோவன் ஆகியோரின் கடிதங்களும் இடம்பெற்றுள்ளன.
கடிதங்கள் ‘பொக்கிஷம்’தான் திரைப்பட இயக்குநர் சேரனின் பாஷையில்.
மற்றவர்களின் கடிதங்களை பார்ப்பது அநாகரீகம் என்றும் சொல்வார்கள். இளவரசி டயானாவின் கடிதங்களை வைத்து பிழைப்பு நடத்தும் பதிப்பகங்கள் பற்றி அறிகிறோம்.
இங்கே டானியலின் கடிதங்கள் இலக்கியவாதிகளை மாத்திரமல்ல தமிழ்த்தேசியம் குறித்து பேசியவர்களையும் பேசுபவர்களையும் கேள்விக்குள்ளாக்குகின்றன.
—-0— (நன்றி: தினக்குரல் ஞாயிறு பதிப்பு
