ஊரிலே சிறுவர்கள் நாய், பூனைகளை கல்லால் அடிப்பதை வேடிக்கை பார்த்திருக்கிறேன். அதைத் தடுப்பதற்கு முயற்ச்சியோ அல்லது அவை மீது அனுதாபமோ ஏற்படவில்லை. ஏதோ பிராணிகள் உணர்வற்ற வெறும் ஜடங்கள் என்ற எணணமே மேலோங்கி இருந்தது. டொக்டர் நடேசன் விலங்குகளைப் பற்றி அனுபவக் கட்டுரைகள் பல இங்குள்ள தமிழ் பத்திரிகையில் அடிக்கடி இடம் பெற்றது. அதை வாசித்த போது உணர்வுகள், உணர்ச்சிகள் மட்டுமல்ல அதற்கு ஆசாபாசங்களும் உள்ளன என்பனவற்றை அறிந்து கொண்டேன். அவரது படைப்புக்களை வாசிக்க வாசிக்க விலங்குகளை நேசிக்கத் தொடங்கினேன். விலங்குகள் மட்டுமல்ல அவரது எழுத்துக்களும் என்னை வசீகரித்தது. விலங்குகளின் கதை சொன்ன டொக்டர் நடேசன் மனிதர்களின் உணர்வுகளைப் .பற்றி ஏனையோர் சொல்லத் தயங்கிய, விடயங்களை நாவலாக்கியுள்ளார்; மாறுபட்ட கருப் பொருளை மையமாக்கி புதிய வடிவத்தில் தந்துள்ள நவீனமே உனையே மயல் கொண்டு.
பொதுவாகவே டொக்டர் என்.எஸ். நடேசன் ஏனைய படைப்பாளிகளிடம் இருந்து வேறுபடுகிறார். இவரது முதலாவது நாவலான வண்ணாத்திகுளம் தமிழ் சிங்களக் காதல், சிங்கள இளைஞரின் கிளர்ச்சியான ஜே.வி.பியின் போராட்டம், இனக் கலவரம், தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பம் என பல தளங்களுடாக கதையை நகர்த்தியுள்ளார். இதே போல் இந்த நாவலும் பல தளங்களிலூடாக செல்கின்றது.
கதையின் கரு பைபலோர் டிஸீஸஸ் என்று அழைக்கப்படும் ஒரு மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவளது கணவனுக்கும் இடையிருக்கும் பாலியல் மையமாகக் கொண்டுள்ளது. பாலியல் பிரச்சனையை நாவலாக்குவது கயிற்றில் நடப்பது போன்றது. கதையை நகர்த்தும் போது விரசமில்லாமலும் அதேவேளை ஆபாசம் என்று எல்லாவற்றையும் மூடி வைககாமல் சரியான அளவில் சொல்ல வேண்டும். இதை கதாசிரியர் அழகாக கையாண்டுள்ளார்;
புலம் பெயர்ந்த நாடாகிய அவுஸ்திரேலியாவின் பிரதான நகரான சிட்னியை களமாகக் கொண்டு நாவல் புனையப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தவர்களது சில படைப்புக்கள் பகைப்புலம் வெளிநாடாக இருந்தாலும் முக்கிய கதாப்பாத்திரங்கள் இலங்கையாராகவோ அல்லது தமிழராகவோ இருக்கும். ஆனால் நாவலில் வரும் ஜூலியாவை வெள்ளைக்காரப் பெண்ணாகப் படைத்துள்ளார் ஆசிரியர். இந்தப் பாத்திரத்திரத்தை ஒரு தமிழ் பெண்ணாக வடிவமைத்திருக்க முடியும். வேற்று இனப்பெண்ணை இந்த பாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்ததன் மூலம் அவர்களது வாழ்க்கை முறைகள் பிரச்சனைகள் என்பவற்றை நாவலில் கொண்டு வந்துள்ளார். இதே போல் சந்திரனுடன் வேலை செய்யும் குண்டல்ராவை ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்த பண்ணையார் குடும்பத்திலிருந்து வந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படி, அவுஸ்த்திரேலியா பல்கலாச்சார நாடாக இருப்பதால் காதாப்பாத்திரங்களும் அதற்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும்.
இந்த நாவல் பல பின்னணிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. சந்திரனின் பல்கலைக்கழக் காதல், இனக்கலவரம், இயக்க மோதல்கள், வயதான பெற்றோரின் பிரச்சனை, ஆவுஸ்த்திரேலியா நடப்புக்கள் இலங்கை இனப்பிரச்சனை எனக் கதை செல்கிறது. சிலவற்றை அழமாகவும், சிலவற்றை மேலோட்டமாகவும் விபரிக்கிறது. புலம்பெயர்ந்த பல படைப்பக்கள் பிரச்சாரத்தன்மையாகவும், ஒருசார்பு அரசியலாகவும் இருக்கின்றன. இங்கேயும் அரசியல் பேசப்படுகிறது. அது போதனையாக இல்லாமல் விவாதமாக இருக்கிறது.
சில இடங்களில் எமது சமுதாயத்தின் குறைபாடுகளை தனக்கே உரித்தான பாணியில் நையாண்டி செய்கிறார். உதாரணத்திற்கு ஒன்று, இலங்கையில் நடக்கும் சண்டை ஏதோ இவர்களது காசிலதான்; நடப்பது போலவும், அரசியலில் அக்கறை இல்லாதவர்களை துரோகிகள் என வசைபாடுவதும் இவனுக்கு ஒத்துவரவில்லை சிட்னி வாழ் இலங்கைத் தமிழரிடம் இருந்து அந்நியமாக வாழ்ந்தான். இவனது சொந்தப் பிரச்சனை இலங்கையின் அரசியல்பிரச்சனை போல் சிக்கலாக இருக்கும் போது இவன் என்ன செய்யமுடியும். இன்னொன்று, எங்கள் சமுகத்தில் மனோவியாதிக்காரருக்கு மட்டுமல்ல மனநலமருத்துவர்களுக்கும் நல்ல பெயர்கிடையாது. மனநோயாளர்களை சமூகம் வேண்டாதவர்களாகப் பார்க்கிறது. தாய்தந்தையரால் பராமரிக்கப்படாவிட்டால் பிச்சைக்காரர்களாத்தான் எம்மூரில் வாழ்வார்கள். மனநோயளர்கள் மீது கல் எறிந்து விளையாடும் ஒரு சமூகத்திலிருந்து வந்தவர்கள் நாங்கள்.
இவர் கதை சொல்வதில் கையாண்ட நடை என்னை மிகவும் வசீகரித்துள்ளது. முன்பு சுஜதா இதைக் கையாண்டார். இப்போது முத்துலிங்கத்திடமும் காணப்டுகிறது. நான் சுவைத்த சிலவற்றை பகிர்கிறேன்.
கதவை மூடிவிட்டு ரெலிவிசனை உயிர்ப்பித்தான்.
அடுத்தது, மதுவின் மயக்கத்தில் வார்த்தைகளை சீராகக் கோர்ப்பதில் சிரமம் இருந்தது. போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
வன்செயலினால் மனிதர்கள் இறப்பதும் காயப்படுவதும் ஊடகங்களாலும் தொண்டு நிறுவனங்களாலும் புள்ளி விவரப்படுத்தப்படுகின்றன. வன்முறைகளிலிருந்து உயிர்தப்பியவர்களது மனத்தில் ஏற்பட்ட ரணங்களின் வேதனைகளை எவரும் கண்டுகொள்வதில்லை. எந்த நாட்டில் போர் நடந்தாலும் பாதிக்கப்பை அடைபவர்கள் பெண்கள் என இந்தப் புத்தகத்தைப்பற்றி இதன் ஆசிரியர் டொக்டர் நடேசன் குறிப்பிடுகிறார். இந்தப் பிரச்சனையை நாவலில் இன்னும் விரிவாகச் சொல்லியிருக்கலாம்.
இன்னொன்று முக்கியமாக் குறிப்பிடப்பட வேண்டும் புத்தகத்தின் வடிவமைப்பு மிகவும் நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.பொவின் மித்ர வெளியீடா வந்திருக்கும் இந்தப் புத்தகம் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தில் ஓர் புதிய வரவு என்பதில் சந்தேகமில்லை.
