அரசியல் வாதிகளும் ஆயுதப்படையினரும்
வற்றாப்பளை அம்மனுக்கு அரோகராமுருகபூபதி
ஈழவிடுதலைப் போராட்டம் தொடங்கியதற்கான பல்வேறு காரணங்களை பலரும் ஏராளமாக எழுதிவிட்டார்கள். தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை தற்போது மாறியிருப்பதனால் கணினியின் வரவுடன் இணைய இதழ்களின் பெருக்கமும் கூடியிருப்பதனால் ஆய்வாளர்களுக்கு வசதியாகிப்போய்விட்டது.
ஈழப்போராட்டம் முடிந்துவிட்டதாகவும், இல்லை அது முற்றுப்பெறவில்லை மேலும் தொடரும் என்றும் வாதப்பிரதிவாதங்கள் நீடிக்கின்றன. புலம்பெயர் தேசங்களில், 2009 மே மாதத்திற்குப்பின்னர் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம், சர்வதேச தமிழர் பேரவை, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, இவைதவிர இலங்கையில் அரசியல் செய்யும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வெளிநாட்டுக்கிளைகளின் அங்குரார்ப்பணம்…..தமிழர் ஒருங்கிணைப்புக்குழுக்கள்… நெடியவன் குழு, விநாயகம் குழு…. தமிழ்நாட்டில் செந்தமிழ்ச்செல்வன் சீமானின் நாம் தமிழர் இயக்கம்.. இவற்றின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டு மாணவர்களும் தமது கல்வியை இடைநிறுத்திவிட்டு ஈழத்தமிழர் பெயரில் அரசியல் இயக்கமும் ஆரம்பிக்கலாம் என்ற கருத்து உருவாகியிருக்கிறது. அவர்களை தமது கட்சிகளின் வாக்கு வங்கிகளாக்க சில தமிழக அரசியல் கட்சிகளும் தீவிரமாக முயலுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
பிரிவினைவாதம், இறுதியில் வல்லாதிக்க நாடுகளின் கையில்தான் எம்மைக்கொண்டுபோய்விடும் என்பதை 1972 இலேயே ஒரு இடதுசாரித்தோழர் சொன்னது இந்தப்பொல்லாத ஞாபக சத்தியினால் நினைவுக்கு வருகிறது.
1972 காலப்பகுதியில்தான் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் இடதுசாரிகள் அமைத்த கூட்டரசாங்கத்தில் குடியரசு அரசியலமைப்பு வந்தது. பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் வந்தது. அதன் விளைவு காங்கேசன்துறை இடைத்தேர்தல், வட்டுக்கோட்டைத்தீர்மானம், தமிழ் இளைஞர்கைது, உணர்ச்சிக்கவிஞருக்கு இரத்தத்திலகம், 1977, 1981, 1983 இனக்கலவரம், 1981 இல் யாழ். பொதுநூலகம் எரிப்பு, ஆயுதப்போராட்டம்….வெலிக்கடைச் சிறை படுகொலைகள்,…துரையப்பா முதல் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் பிரேமதாஸ வரையில் கொலைகள்… தமிழகத்தில் பத்மநாபா முதல் ராஜீவ்காந்திவரையில்…. இப்படியாக தொடர்ந்தது படுகொலைக்கலாசாரம்,
இயக்கங்களின் மோதல், சகோதரப்படுகொலைகள், அநுராதபுரத்தில் சிங்கள மக்களும் காத்தான்குடியில் முஸ்லிம்மக்களும் படுகொலை….வடக்கிலிருந்து புலிகளினால் முஸ்லிம் மக்கள் வெளியேற்றம்…. பேச்சுவார்த்தை, யுத்தநிறுத்தம், சமாதான காலம்…. மீண்டும் இரண்டாம் கட்டம் மூன்றாம் கட்டம், நான்காம் கட்டப்போர் முதலான புலிகளின் தரப்பு பிரகடனங்கள், லிபரேஷன் ஒப்பரேஷன், ஜயசிகுரு (வெற்றிநிச்சயம்) முதலான அரசுகள் தரப்பிலான போர்ப்பிரகடனங்கள்…. வட்டுக்கோட்டையில் ஆரம்பித்த அஹிம்சைப்போரும் வல்வெட்டித்துறையில் தொடங்கிய ஆயுதப்போரும்…. அப்பாவி மக்களின் இடப்பெயர்வுகள் போன்று வன்னிக்கு இடம்பெயர்ந்து அங்கு குடியிருந்த மக்களின் அவலச்சாவுகளுடனும்; முள்ளிவாய்க்காலில் பிரபாகரனின் அழிவோடும் ஈழப்போரின் ஒரு அங்கம் முடிந்துவிட்டது.
இந்நிலையில் பாராளுமன்ற ஆசனங்களில் தங்கியிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தங்களது போராட்டத்தை மூன்று கட்டமாக வகுத்திருக்கிறார்களாம்.
முதலவது கட்டம் அகிம்சைப்போர், இரண்டாவது கட்டம் ஆயுதப்போர், தற்பொழுது மூன்றாவது கட்டம் ராஜதந்திரப்போர் எனச்சொல்கிறார்கள். இது எங்கே கொண்டுபோய் நிறுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கூட்டமைப்பினர், இந்தியாவினதும் அமெரிக்காவினதும் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப இயங்குபவர்கள் என்ற விமர்சனமும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் சீமானுக்கும் நெடுமாறனுக்கும் இடையே நிழல் யுத்தம். வைகோவுக்கும் கருணாநிதிக்கும் இடையே வெளிப்படையான யுத்தம்.. ஜெயலலிதா மத்திய அரசுக்கு சவால்விடும் யுத்தம்…. இடையில் திருமாவளவனும் பாண்டியனும் மகேந்திரனும் ராமதாஸ்_ம் இதோ நாங்களும் இருக்கிறோம் என்று போர் முரசு கொட்டுகிறார்கள். இவர்களின் உணர்ச்சியூட்டும் பேச்சுகளினால் தமிழக மாணவர்களும் தங்கள் கல்வியை புறக்கணித்துவிட்டு வீதியில் இறங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஒப்பானது இன்றைய மாணவர் கிளர்ச்சி என்று வேறு எண்ணெய் ஊற்றி எரிக்கிறார்கள். அந்த நெருப்பில் சிலர் குளித்து உயிர்களை மாய்க்கிறார்கள்.
சில தமிழக இதழ்கள் தங்களது விற்பனையை அதிகரித்துக்கொள்வதற்கு வாசகவங்கியை பெருக்கிக்கொள்கின்றன. இது அரசியல் கட்சிகள் தங்களது வாக்கு வங்கியை பெருக்குவதற்கு ஒப்பானது.
தங்கள் படங்கள் வெளிநாடுகளில் சந்தையாகவேண்டும் என்பதற்காக உலகநாயகனும் சூப்பர் ஸ்டாரும் தல, தளபதிகளும் மற்றும் நடிகர்களும் உண்ணாவிரதக்காட்சிகளுக்காக கெமராக்களுக்கு முன் வந்து தோன்றுகிறார்கள். பிறகு தங்கள் நடிப்புத்தொழிலுக்குச்செல்கிறாரகள்.
எங்கள் தேசத்தின் ஈழப்போர், இறுதியில் இந்தியாவில், தமிழ்நாட்டில் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நிலைக்குத்தள்ளிவிட்டதைத்தவிர ஈழ மக்களுக்கு எந்தவிடுதலையையோ அவர்களின் அன்றாடப்பிரச்சினைகளுக்கு எந்தவொரு உருப்படியான தீர்வையோ தரவில்லை.
இந்தப்பின்னணிகளுடன் புகலிடத்தில் வாழும் இலங்கைத்தமிழர்கள், பல்வேறு பிரிவினராக பிரிந்துள்ளனர்.
புலிகளை தொடர்ந்தும் ஆதரிப்பவர்கள்.
நாடுகடந்த தமிழ் ஈழம் பேசுபவர்கள்.
நடிகர் சீமானுக்குப்பின்னால் அணிதிரளுபவர்கள்.
சர்வதேச தமிழர்பேரவையின் மூலம் அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கலாம் என நம்புபவர்கள்.
ராஜதந்திரப்போர் நடத்துவதாகச்சொல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளைகளை அமைத்து கூட்டமைப்பு எம்.பி.க்கள் வரும்பொழுது சந்திப்பு விருந்துகளை நடத்துபவர்கள்.
இவர்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்து இலங்கையில் நீடித்த போரில் பாதிக்கப்படட்டவர்களுக்கு எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி ஏதேனும் வழியில் உதவிக்கொண்டிருப்பவர்கள்.
இதில் ஆறாவது தரப்பினர்கள் பக்கம்தான் நான் எப்பொழுதும் நிற்கிறேன். படைப்பாளிகள் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்தான் நிற்கவேண்டும். காலத்துக்குக்காலம் அரசியல் வேடம் புனைபவர்கள் பக்கம் நிற்கமாட்டார்கள். தமிழ்நாட்டின் திராவிட பாரம்பரிய மற்றும் காங்கிரஸ் பாரம்பரிய அரசியலை நன்கு தெரிந்துகொண்டிருப்பவர்களுக்கு அரசியல் வேடம் பற்றியும் தெரியும். பெரியாரின் திராவிடக்கழகத்திலிருந்து பிரிந்த தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க..
.வீரமணியின் தலைமையை ஏற்காமல் திராவிடக்கழகத்திலிருந்து பிரிந்து தனிக்குழுக்கள் அமைத்தவர்கள்….வைகோவின் தலைமையை விமர்சித்து பிரிந்துசென்று புதிய அமைப்புகள்
உருவாக்கியவர்கள். அகில இந்திய காங்கிரஸிலிருந்து பிரிந்து தமிழ்நாட்டுடன் குறுக்கிக்கொண்ட காமராஜ் காங்கிரஸ் உருவாக்கிய நெடுமாறன் காலப்போக்கில் புலிகளின் பிரதிநிதியாகியது. கேப்டன் விஜய்காந்த்திடமிருந்து பிரிந்தவர்கள் ஜெயலலிதா பக்கம் சாய்ந்தது. எல்லாமே தமிழகத்தின் அரசியல் கூத்துக்களாகத் தொடருகின்றன. இவர்களில் சிலர் பிரபாகரன் மீண்டும் வருவார் தமிழ் ஈழப்போராட்டம் வெடிக்கும், தொடரும் என்று கதையளந்துகொண்டிருக்கிறார்கள்.
ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஏட்டிக்குப்போட்டியாக யார் நாடகம் ஆடியது என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்துகிறார்கள். ஐ.நா. மனித உரிமைப்பேரவை வருடத்துக்கு ஒருமுறை ஊடகங்களுக்கு தீணிபோட்டு செத்தவர்களுக்கு திவசம் செய்துகொண்டிருக்கிறது.
இந்த நாடகங்களைப்பற்றி கிஞ்சித்தும் அலட்டிக்கொள்ளாத வன்னிமக்கள் கிளிநொச்சியில் காத்தவராயன் கூத்தை கண்டுகளித்துக்கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணம் பொன்னாலையில் சித்திரைப்புதுவருடக்கொண்டாட்டத்தில் மாட்டுவண்டில் சவாரிப்போட்டி நடத்துகிறார்கள். நல்லைக்கந்தன் வருடம் தவறாமல் கொடியேறிக்கொண்டிருக்கிறார். மடுத்திருப்பதி யாத்திரை தொடருகிறது.
முல்லைத்தீவுக்குள் இரண்டாவது தடவையாக எனது வாழ்நாளில் பிரவேசித்தமை தொடர்பான இந்தப்பதிவை எழுதும்வேளையில் இந்தப் பொல்லாத ஞாபசக்தி என்னைப்போட்டு பிரட்டியெடுத்தது.
அரசியல்வாதிகளையும் அரசியல் தலைவர்களையும் விட சாதாரண பொதுமக்களும் ஆயுதப்படையினரும் தீர்க்கதரிசனமாக சிந்திக்கிறார்களோ என்றும் யோசிக்கவேண்டியுள்ளது.
அரசியல் தலைவர்களின் பொறுப்பில் இருக்கும் அரசுகளின் கட்டளைப்பிரகாரம்தான் ஆயுதப்படைகள் இயங்குகின்றன. முகாம்களிலிருந்து பயிற்சி எடுத்துக்கொண்டு, சுதந்திர தினம் முதலான அரசகொண்டாட்டங்களின்பொழுதும் வெளிநாட்டுத்தலைவர்கள் வருகைதரும் வேளைகளிலும் துப்பாக்கிகளையும் பூட்ஸ்களையும் பொலிஷ் செய்து, விறைப்பாக நின்று சல்யூட் அடித்தும் அவர்களுக்கு அணிவகுப்பு மரியாதையும் தருபவர்கள், அரசு திடீரென்று போர்ப்பிரகடனம் செய்தவுடன் குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டவுடன் மழை, வெய்யில் பாராமல் காடு, மேடு அலைந்து போராடி செத்து மடிந்துபோகின்றவர்கள். உடல் உறுப்புகளை இழந்து ஊனமுற்றுவிடுபவர்கள். உடல்கள் கூட்டிப்பெருக்கி அள்ளப்பட்டுவிடும் அற்பாயுளுக்கு சொந்தமானவர்கள்.
இம்முறை முல்லைத்தீவுக்குச்.செல்லும்போது கெடுபிடிகள் இல்லை.
ஆனால் 2011 ஜனவரியில் சென்றவேளையில் கிட்டிய அனுபவம்தான் படையினரின் தீர்க்கதரிசனம் பற்றி சொல்லவைக்கிறது.
அப்பொழுது ஏ9 பாதையில் யாழ்ப்பாணம் செல்வதற்கு கொழும்பில் காலிமுகத்திடலுக்கு முன்பாக அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தில் அனுமதி எடுக்கவேண்டும்.(அதனை தாண்டிக்குளம் சோதனைச்சாவடியில் காண்பித்தால்தான் வடக்கு நோக்கிய பயணத்தை தொடரமுடியும். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. தற்பொழுது வெளிநாட்டினர் தமது கடவுச்சீட்டின் போட்டோ பிரதி கொடுத்தால் சரி. பயணிக்கலாம்.
2011 பயணத்தில் நான் வைத்திருந்தது யாழ்ப்பாணத்திற்கான M.O.D. Clearance அதனையே முல்லைத்தீவுக்குள் பயணிப்பதற்கும் பயன்படுத்தலாம் என நம்பியிருந்தேன். வவுனியாவிலிருந்து ஒட்டுசுட்டான் மார்க்கமாக அன்று முல்லைத்தீவுக்கு வந்தபோது நல்ல மழை. வீதிகளும் பள்ளமும் திட்டியாகவும் இருந்தன.
முல்லைத்தீவு எல்லையை நெருங்கிவிட்டோம். ஒரு சோதனைச்சாவடிக்கு முன்பாக சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டு தனது லசைன்ஸ் மற்றும் அந்தப்பிரதேசத்திற்கு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் ஆகியனவற்றை காண்பித்து, வாகன இலக்கத்தை பதிவுசெய்துவிட்டு வருவதற்குச்சென்றார்.
அங்கு கடமையிலிருந்த இராணுவ அதிகாரி என்னை அழைத்தார். கைவசம் வைத்திருந்த M.O.D. Clearance யையும் எனதும் மனைவியினதும் கடவுச்சீட்டுகளையும் காண்பித்தேன்.
“ ஓ… அவுஸ்திரேலியாவா..? சேர்…உங்களது M.O.D. Clearance அனுமதிப்பத்திரம் யாழ்ப்பாணத்திற்கு மாத்திரம்தான் உதவும். நீங்கள் வைத்திருக்கும் பத்திரம் முல்லைத்தீவுக்கு சரிவராது. அதற்கு பிரத்தியேகமாக எடுக்கவேண்டும். நீங்கள் திரும்பிச்செல்லுங்கள்.” என்று ஆங்கிலத்தில் சொன்னார்.
மறுநாள் தைப்பொங்கல். முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவர்களை பார்க்கவேண்டும். அவர்களைப்பார்த்துவிட்டு மாங்குளம் வழியாக யாழ்ப்பாணம் செல்லவேண்டும். என்ன செய்வது என யோசித்தேன்.
வற்றாப்பளை அம்மன்தான் மனக்கண்ணில் தோன்றினாள்.
எனக்கு சிங்களத்தில் பேசத்தெரிந்தமையால் முகத்தில் புன்முறுவலை வரவழைத்துக்கொண்டு, “ சேர்… நாங்கள் கோயிலுக்கு வந்திருக்கின்றோம். நாளை எங்களது தைப்பொங்கல். அந்த அம்மன் விசேடமான சக்திவாய்ந்தவர். கோயில் தரிசனம் முடித்துவிட்டு அப்படியே திரும்பிவிடுவோம்.” என்று சிங்களத்தில் சொன்னேன்.
“ அப்படியென்றால் நீங்கள் இந்து சமயம். தமிழர். நாம் பௌத்தர். சிங்களம். எங்களுக்கும் வற்றாப்பளை அம்மனில் பக்தியிருக்கிறது. நாங்கள் கதரகமதெய்யோவையும் (முருகன்) கணதெய்யோவையும் (பிள்ளையார்) ஈஸ்வர தெய்யோவையும் (சிவன்) காளியம்மாவையும் (காளி அம்மன்) வணங்குபவர்கள். நீங்கள் வெளிநாட்டவர். எங்களுக்கு வெளிநாட்டவர்கள் குறித்து சில விசேட விதிமுறைகள் இருக்கின்றன. அவர்கள் வந்து திரும்பிச்சென்று இங்குள்ள நிலைமைகளை வெளிநாடுகளில் எப்படி சொல்வார்கள் என்பது தெரியாதுவிட்டாலும், அவர்கள் தொடர்பாகவும் அவர்களின் பாதுகாப்பு குறித்தும் நாம் விசேட கரிசனை எடுக்கவேண்டியிருக்கிறது,” என்று அந்த அதிகாரி சொல்லிக்கொண்டிருந்தவேளையில், அந்த வீதியில் இரண்டு ட்ரக்வண்டிகள் நிறைந்து பல ஆயுதப்படையினர் வந்தனர். அந்த ட்ரக்வண்டிகள் நிறுத்தப்பட்டன,
அவை இரண்டும் எங்கே இருந்து வருகின்றன? எங்கே செல்கின்றன? யாருடைய உத்தரவில் அந்தப்படையினர் புறப்பட்டார்கள் முதலான விபரங்களை எடுத்துவருமாறு ஒரு இராணுவ ஊழியரை அனுப்பினார் அந்த அதிகாரி. அதன்பிறகு மீண்டும் எனது முகத்தைப்பார்த்து உரையாடினார்.
“ பாருங்கள்… நாம் எங்கள் இராணுவவீரர்களின் நடமாட்டங்களையும் தெரிந்துவைத்திருக்க விரும்புகின்றோம். அவர்களையும் கண்காணிக்கின்றோம். பதிவுசெய்கின்றோம். சிலர் படையிலிருந்து ஓடி மறைந்துவிடுவார்கள். அதனால்தான் இந்த முன்னெச்சரிக்கை. இந்தப்பிரதேசம் போர் முடிந்த இடம். எவர் வந்தாலும் தீவிரமாக விசாரித்துவிட்டுத்தான் அனுப்புவோம். அதனால்தான் உங்களை அனுமதிக்க யோசிக்கின்றேன்.” என்றார்.
“ எமக்கு விளங்குகிறது. முல்லைத்தீவுக்கு செல்வதற்கு பிரத்தியேக அனுமதிப்பத்திரம் நடைமுறையில் இருக்கிறது என்பது தெரிந்திருந்தால் கொழும்பில் வாங்கியிருப்பேன். யாழ்ப்பாணத்திற்கான அனுதிப் பத்திரத்துடன் செல்லலாம் என்று நம்பி வந்துவிட்டோம் எல்லாம் ஏ9 பாதைக்குள்தான் வருகிறது என நம்பிவிட்டேன். நீண்டகாலம் அவுஸ்திரேலியாவிலிருந்தமையால் இந்த வீதிகள் பற்றி எனக்கு போதிய அனுபவம் இல்லை” என்றேன்.
“ புரிகிறது. நாளை உங்களுக்குப் பொங்கல். வருகிறீர்கள். பொங்கல் கொண்டாடுகிறீர்கள். போய்விடுவீர்கள். எங்களைப்பாருங்கள். விரைவில் எங்களுக்கு சித்திரைப்புதுவருடம் வருகிறது. ஆனால் நாம் நினைத்தவாறு தென்னிலங்கையில் எமது குடும்பத்துடன் பண்டிகை கொண்டாட முடியாமல் இந்தக்காட்டில் பாம்புகளுக்கும் விஷ ஜந்துகளுக்கும் மத்தியில் மழை, குளிருடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.’’ என்று செல்லிவிட்டு, எனதும் மனைவியனதும் கடவுச்சீட்டுகளை மீண்டும் உற்றுப்பார்த்தவாறு புண்ணியம் செய்தவர்கள்” என்று சொல்லி பெருமூச்சுவிட்டார்.
“ அவுஸ்திரேலியா நல்ல நாடு அல்லவா?” என்றார்.
“ ஏன்…எமது தாயகம் இலங்கையும் நல்ல நாடுதானே…?” என்றேன்.
“ ஆமாம் நல்ல நாடுதான். ஆனால் இந்த அரசியல்வாதிகளும் இயக்கங்களும் சேர்ந்து நாசம்செய்துவிட்டார்கள். அரசினதும் தலைவர்களினதும் கட்டளைக்கு நாம் பணியவேண்டும். இயக்கத்தின் தலைமையின் கட்டளைக்கு கிழே இருப்பவர்கள் பணியவேண்டும். இறுதியில் என்ன நடந்தது? அழிவுதான். எல்லாப்பக்கமும் அழிவுதான். தேவையற்ற போர். நீங்கள் தமிழர், நாம் சிங்களவர். இரண்டு தலைமைகளுக்கும் தெரியாமல் இந்தப்பிரதேசத்தில் ஒருவிடயம் அமைதியாக நடந்துகொண்டிருக்கிறது. யாரும் கண்டுகொள்வதில்லை. தெரியுமா?” எனக்கேட்டார்.
“ தெரியாது…சொல்லுங்கள்…?”
“ ஐநூறு போராகச்சென்றவர்கள் ஐயாயிரம் பேராகத் திரும்பியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எங்கள் இனத்தவரும் அல்ல உங்கள் இனத்தவரும் அல்ல.”
அவர் யாரை குறிப்பிடுகிறார் என்பது பரிந்துவிட்டது.
“இந்த நாட்டில் எவரும் எங்கும் வாழலாம்தானே? அதனால் தேசிய ஒற்றுமை உருவாகும்தானே…?” என்றேன்.
“ நீங்கள் ஒரு பல்தேசிய கலாசார நாட்டிலிருந்து வருவதானல் அப்படிச்சொல்கிறீர்கள். ஆனால் நாம் அப்படி நினைக்கவில்லை.” என்று அவர் சொன்னதும் நான் சற்று ஆச்சரியப்பட்டேன்.
ஓரளவாவது உலகம் தெரிந்த அதிகாரியாக அவர் தோற்றம் காட்டினார்.
சில கணங்கள் அவர்பக்கம் ஆழ்ந்த மௌனம்.
பின்னர் சொன்னார், “ விரைவில் இந்த நாடு இன்னுமொரு பிரச்சினைக்கு முகம்கொடுக்கப்போகிறது, ஆனால் முத்தரப்பு தலைமைகள் எதுவும் தெரியாமல் இருக்கிறார்கள். நாங்கள் களத்தில் – காட்டில் இருக்கிறோம். அவர்கள் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருக்கிறார்கள். சரி…நீங்கள் கோயிலுக்குப்போவதற்காக வந்திருப்பதனால் அனுமதிக்கின்றேன். அங்கே எங்கள் இராணுவத்தினரும் வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள் போய் பாருங்கள்” எனச்சொல்லிவிட்டு கையை பற்றி குழுக்கி தைப்பொங்கல் வாழ்த்துச்சொன்னார்.
‘வற்றாப்பளை அம்மனுக்கு அரோகரா’ என்று மனதுக்குள் பிரார்த்தித்தேன்.
இம்முறை அதே பாதையால் பயணித்தபொழுது அந்த சோதனைச்சாவடியை காணமுடியவில்லை.
அந்தப்பெயர் தெரியாத இராணுவ அதிகாரி தற்பொழுது எங்கு கடமையில் இருக்கிறார் என்பதும் தெரியாது,
ஆனால் அன்று அவர் சொன்ன தீர்க்கதரிசனத்தை இரண்டு ஆண்டுகளின் பின்னர் தற்பொழுது ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் தெரிந்துகொள்கின்றேன்.
முல்லைத்தீவை அடையும்போது மாலை ஐந்து மணி.
(பயணங்கள் தொடரும்)
