இலண்டனில் வதியும்அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அவர்களது கேள்விக்கு எனது பதில்கள்
நடேசன் அவர்களின் நேர்காணல் பல அடிப்படைக் கேள்விகளை எழுப்புகிறது. அதாவது இலங்கையில் ஏற்பட்டுள்ள இன நெருக்கடிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது குறித்த கேள்வியாகும்.
அவரது கேள்வி பதிலில் இவ்வாறான பதில் காணப்படுகிறது.
1. ‘ இலங்கைத் தமிழ்ச் சமூகமாகிய நாங்கள் தற்போது விழுந்திருக்கும் குழியைச் சுற்றிக் கொண்டிருக்காமல் நாம் அதற்குள்ளிருந்து எழும்பி வெளியேற முடியுமா? எனப் பார்க்க வேண்டும். அந்தக் குழியை ஆழமாக தோண்டக் கூடாது….’
அவரது கருத்துப்படி குழியைப் பற்றிக் கவலைப்படாமல் அதிலிருந்து வெளியேறினால் போதும் என்பதே அணுகுமுறையாக உள்ளது. குழி இருக்கும் வரை ஆபத்து தொடர்ந்தும் இருக்கும். எதிர்கால சமூகம் எச் சந்தர்ப்பத்திலும் குழியில் விழ வாய்ப்பு உண்டு. பிரச்சனை தப்பித்துக் கொள்வது அல்ல. குழி தோண்டும் அரசியலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். குழியை ஆழப்படுத்தும் அரசியல் தொடர்ந்து காணப்படுகிறது. இது பற்றி பேசாமல் தப்புவது பற்றி பேசும் அரசியலை பேசுவது சந்தர்ப்ப வாதம்.
பதில்
ஒருவன் சிறிய குழியொன்றில் கால் பதித்தால் வழியில் மற்றவர்கள் எதிர்காலத்தில் விழாமல் நன்னோக்கில் அதை மூடிவிட்டுபோவதற்கு சாத்திய உண்டு. ஆனால் பெரிய கிணற்றிலோ அல்லது அழமான கிடங்கிலோ விழுந்தால் அதை மூடிவிட்டு போவது என அடம்பிடித்தால் அல்லது தான் பார்க்கும் குழிகள் எல்லாவற்றையும் மூடித்தான் தீருவது என நினைத்தால் அவனை சமூகம் சொல்லும் பெயர் முட்டாள் என்பது. ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் சிறிய அங்கம். தனிமனிதனின் சிந்தனையின் ஓட்டு மொத்த சேர்க்கைதான் சமூகத்தின் சிந்தனை ஓட்டமாகும். உயிர் தப்புவதற்கும் வாழுவதற்குமாகவே குழந்தை பிறந்தவுடன் அழுகிறது. இது மனிதனுக்கு மட்டுமல்ல எல்லர உயிரினங்களுக்கும் பொதுவான விதி.
முப்பது வருட அரசியல், முப்பது வருட ஆயுதப் போராட்டம் இலட்சம் உயிர்களைக் குடித்து பெரும்பாலான மக்களை நிர்கதியாக்கியதுடன் பலரை நாட்டைவிட்டு நிரந்தரமாக தள்ளிவிட்டது. உதாரணமாக இந்தக் கேள்வியைக் கேட்பவர், பதில் சொல்லும் என் போன்றவர்கள் சமூகத்தில் இருந்து நிரந்தரமாக வெளித் தள்ளப்பட்டுவிட்டோம். இந்த நிலை எப்படி ஏற்பட்டது? இன்னல்களில் இருந்து மக்கள் தப்பி உயிர் வாழ வேண்டும் என்பது சந்தர்பவாதமென நினைத்தால் அதை பெருமையுடன் ஏற்கத்தயார். நானுறு வருடங்கள் எகிப்தில் அடிமையாக இருந்த யுத மக்களை மோசஸ் செங்கடலை தாண்டி கொண்டு சென்றது அந்த மக்களின் உயிரகளை பாதுகாப்பதற்காகத்தான்.அப்படி இல்லாமல் எகிப்திய அரசர்களை எதிர்க்க சொல்லி இருக்கலாம்.. யுதமக்களுக்கு கடவுளின் துணை இருந்ததாக சொல்லுகிறார்கள். அப்படி இருந்தும் அவர்கள் போராடவில்லை. நாளை போராட இன்று வாழவேண்டும்
2. ‘ எமக்கு இலங்கையில் வாழும் இஸ்லாமிய சகோதரர்களின் வழிமுறைகள் தற்போது பாடமாக இருக்க வேண்டும். அவர்கள் மொழியில் வேறுபட்டும், சமய ரீதியில் எங்களை விட முரண்பாடுகள் அதிகம் கொண்டபோதும் ஆட்சியில் பங்கேற்கிறார்கள். அது எப்படி சாத்தியமாகிறது?…..’
இன்று முஸ்லீம் மக்கள் அதன் அறுவடையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைவர் அஷ்ரப் அவர்கள் காட்டிய அரசியல் மக்களையும் தன்னுடன் எடுத்துச் செலவதே வழிமுறையாக இருந்தது. ஆனால் அந்த நடைமுறை இன்று கைவிடப்பட்டுள்ளது. சுயநலம், தனிநபர் வாதம், சந்தர்ப்பவாதம் என்பன வழிமுறையாகி உள்ளன. கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் மக்களின் வாக்குகள் ஏமாற்றி பறிக்கப்பட்டுள்ளன. அரசுக்கு எதிராக வீராப்பாக பேசி அந்த மக்களை ஏமாற்றி வாக்குகளை கொள்ளை அடித்தவர்கள் தாம் அரசுடன் இருப்பதை புரிந்துகொண்டுதான் மக்கள் வாக்களித்ததாக புதிய விளக்கம் அளிக்கிறார்கள். முஸ்லீம் காங்கிரஸ் என்ற அமைப்பு மக்களிடமிருந்து விலகிவிட்டதாக உள் கட்சிப் போராட்டம் நடக்கிறது. முஸ்லீம் மக்களின் கலை, கலாச்சாரம், அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய சுயாட்சி நிர்வாகம் தேவை என வாதிடப்படுகிறது. இது எந்த விதத்திலும் தமிழர் கோரிக்கைகளுக்கு குறைந்தது அல்ல. இது கடந்தகால அரசியல் அணுகுமுறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அரசுடன் ஒட்டி உறவாடி அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க முடியாது என்பது தெளிவாகவே உணரப்பட்டுள்ளது.
பதில்
இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து பார்த்தால் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் எனப் பல அளவு கோல்களை உபயோகித்தால் மற்றய சமுகத்தை விட ஏன் சிங்கள சமூகத்தை விட முஸ்லீம் மக்கள் முன்னேற்றமடைந்தது இலங்கைகை்கு சென்று பார்பவர்களுக்கு தெரியும். இணையத்தில் மட்டும் இலங்கையை பார்பவர்களுக்கு அது கஸ்டமான காரியம்.
அஷ்ரப் அவர்களது அபிவிரித்தித் திட்டங்கள் கிழக்கு மாகணத்தில் முஸ்லீம் மக்களுக்கு பெரும்பயனைக் கொடுத்திருக்கிறது.பதியுதீன் மகமுத் அவர்கள் இலங்கை முழுவதும் உள்ள முஸ்லீம் மக்களுக்கு கல்விக் கண்கைளைத் திறந்து வைத்தவர். அதேபோல் கிழக்கு மாகாணமக்கள் எக்காலத்திலும் மறக்க முடியாத மனிதர் அஷ்ரப்.
மேல் மாகாணத்தை தவிர வேறு எந்த மாகாணத்தில் இரண்டு பல்களைக்கழகங்ககள் உள்ளது.? எங்கே இரண்டு பெரிய துறைமுகங்கள் உள்ளது? எவ்வளவு காணிகள் அவர் காலத்தில் முஸ்லீம் மக்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் கிடைத்திருக்கிறது தெரியுமா? ஒரு வகையில் பார்த்தால் புத்தசமய குருமாருக்கும் ஆத்திர மூட்டியவிடயங்கள் அம்பாறையில் நடந்த காணி விடயம்தான் தொடக்கப் புள்ளி..
தற்போதய கிழக்குமாகாண. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்மைப்மைப்பு அரசியலில் சாதாரணமாக நடப்பவை தான். என்னைப் பொறுத்தவரை கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் ஐக்கிய முன்னணி செய்தது அவர்களைப் பொறுத்தவரை இராஜதந்திரம். நான் கிழக்கு மாகாணத் தமிழனாக இருந்தால் எனது பங்கையும் சேர்த்து அவர்கள் அனுபவிக்கிறார்கள் எனக் கவலைப்படுவேன். அதே நேரத்தில் அதற்கு மாற்றாகாக அரசில் திட்டம் வைக்க முடியாத முட்டாள் தமிழ்த் தலைவர்கள் இருக்கும் வரையும் அதுதான் தலைவிதி என மனத்துக்குள் சபித்துக்கொள்வேன்.
இலங்கையின் தென்பாகத்தில் முஸ்லீம்கள் தங்கள் கலை கலாச்சாரத்தை பாதுகாத்து வாழுகிறார்கள் எனும்போது அவர்கள் அடர்ந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் அதைப் பாதுகாக்க சுயாட்சி வேண்டும் என்பது இலங்கையைபற்றி அடிப்படை அறிவில்லாத கேள்வி.
3. ‘ அஷ்ரப், தொண்டமான் சாதித்தது அதிகம்….’
மலையக மக்களின் தலைமைக்குள் காணப்படும் தற்போதைய முரண்பாடுகள் எங்கிருந்து உற்பத்தியாகின்றன? தொண்டமான் அவர்கள் தனது அரசியலைக் காப்பாற்ற சிங்கள மக்களிலிருந்தும், தமிழ் மக்களிலிருந்தும் அந்த மக்களைப் பிரித்து அந்த அரசியலை நடத்தினார். இன்று மலையக மக்கள் சிங்கள இனவாத அரசியல் கட்சிகளின் பின்னால் செல்கிறார்கள். தனி மனிதர்களின் ஆழுமை ஒரு சிலகாலம்தான் சாத்தியமாகலாம். இதுவே அஷ்ரவ், தொண்டமான் ஆகியோரின் வரலாறாக உள்ளது. சரியான அரசியல் கட்டுமானம, கொள்கைகள்; இல்லையாயின் விளைவுகள் பாரதூரமானவையாக மாறும் என்பதை இவை உணர்த்துகின்றன.
பதில்
இலங்கையில் எல்லா சமூகங்களும் பிரிந்தான் அரசியலில் இருக்கிறார்கள் சிங்களவர்களில் இருபதுக்கு மேற்பட்டகட்சிகள் உள்ளது. அதில் பதினெட்டு கட்சிகள் ஆட்சியல் அரசாங்கத்தோடு இணைந்திருக்கிறார்கள். அது ஜனநாயகம். மக்கள் செம்மறியாடுகள் போல் அல்ல வெவ்வேறாக சிந்திப்பவர்கள். மேலும் இலங்கை யாப்பில் பல கட்சிகளுக்கு இடம் உள்ளது. இது ஒரு நல்ல விடயமாகவே கருதுகிறேன் மேலும் எல்லோரும் ஒன்றாக சிந்திக்கவேண்டும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என சிந்தித்தால் அதை நடைமுறைப்படுத்த ஹிட்லர் ஸ்ராலின் மாவோ போல் மில்லியன் கணக்கிலோ பிரபாகரன் போல் ஆயிரக்கணக்கிலோ கொலைகளை செய்ய வேண்டும்.
ஆக மொத்தத்தில் கொலையின்மூலம்தான் ஒற்றுமையைக் காணலாம்
தொண்டமானைப்பற்றி சொல்ல முதல் ஒன்று சொல்கிறேன். இப்பொழுது கொழும்பில மத்தியதர வேலைகளுக்கு தமிழ் தெரிந்த ஒருவர் தேவை என விளம்பரம் பண்ணினால் கம்பியுட்டர் வேலையில் இருந்து பியோன் வரையும் வந்து நிற்பவர்கள் மலையக இளைஞர்களே. வடமாகாணத்தோ கிழக்கு மாகணத்து இளைஞர்கள் அல்ல. காரணம் வட -கிழக்கு மாகாணத்தவர்களுக்கு ஆங்கிலமோ சிங்களமோ ஒரு வார்த்தை பேசத்தெரியாது. எமது தமிழ் தலைவர்கள் புண்ணியத்தில்
மலையக இளைஞர்கள் இந்த நிலைக்கு வர காரணம் தொண்டமானே யாகும். அந்த மனிதரால் ஏற்றிவைத்த ஒளி பல இளைஞர்களை உருவாக்கியுள்ளது. எனக்கு மலையக மக்களில் இப்பொழுது மிகவும் நம்பிக்கையுள்ளது.
இலங்கை அரசியலமைப்பு எப்படியும் தனிக்கட்சி பலமாக வராத படி உருவாக்கப்பட்டிருப்பதால் கூட்டு அரசாங்கத்தையே உருவாக்கும். இதில் மலையக கட்சிகள் இஸ்லாமிய கட்சிகள் பேரம் பேசுகிறார்கள். இந்த பேரத்தில தனிமனித பலவீனங்கள் எக்காலத்திலும் தொடரும். அது மனித இயற்கை. இவர்களை இனம் காண்பது மக்களது கடமை. தொண்டமான் அஷ்ரப் போன்றவர்கள் மாதிரி அவரது வாரிசுகள் அல்லது பின்னால் வந்தவர்கள் இருக்கவேண்டும் என எதிர்பார்ததால் காந்தி மண்டேலாவிலும் இகழ்ச்சி சொல்ல வேண்டும்.
4. ‘தற்போது 21 அரசியல் கட்சிகளைச் சேர்த்துத்தான் இலங்கை அரசு அமைந்துள்ளது. இதன் மூலம் பலரது சம்மதத்துடன்தான் அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்படுகின்றன….’
அதனைப் படிக்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. அரசில் ஒழுங்கு முறையில் செயற்படும் கட்சிகள் இருப்பதான தோற்றத்தையும், அக் கட்சிகள் பிரச்சனைகளை தத்தமக்குள் விவாதித்து ஜனநாயக அடிப்படையில் முடிவு செய்வது போன்ற தோற்றப்பாட்டை நடேசன் தர முயற்சிக்கிறார். இக் கட்சிகள் எவ்வாறு தோற்றம் பெற்றன? போர்க் காலத்தில் இக் கட்சிகளின் நிலைப்பாடு எவ்வாறு இருந்தது? இக் கட்சிகளின் ஜனநாயகத் தன்மை என்ன? நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து இக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? ஓர் அரசு என்ற வகையில் இக் கட்சிகளை ஒரு சேர வைப்பதற்கான ஒன்றிணைக்கும் பொதுக் கொள்கை என்ன? என்ற பல கேளிவிகளை எழுப்பினால் கூட்டணி என்பதன் அர்த்தம் புரிந்துவிடும். ஊழல், லஞ்சம், உறவு என்பதே இக் கூட்டணியின் மைய உடன்பாடாகும். இதனைப் போய் கூட்டணி எனச் சொல்வது வருத்தமாக இருக்கிறது.’
பதில்
இருபத்திரெண்டு கட்சிகள் சேர்ந்து உருவாகிய அரசாங்கம் தற்போதய அரசாங்கம். இதை வேறு ஒரு பெயரால் தமிழில் அழைக்க விரும்பினால் எனக்கு எதிர்ப்பு இல்லை.கம்யுனிஸ கட்சி சமசமாஜக்கட்சி மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து போனவர்கள் என இடதுசாரிகளும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து சென்றவர்கள் பல வலதுசாரிகளும் தமிழ் முஸ்லீம் கடசிகள் சேர்ந்திருப்பது கூட்டணி இல்லையா?
இலங்கை அரசாங்கம் தனக்கெதிராக போர்தொடுத்தவர்களை அழித்தது புதிது அல்ல 71ல் சிங்கள இளைஞரகளது கிளர்சியை அழித்த போதும் கூட்டணி அரசாங்கம்தான் இலங்கையில் இருந்தது. அந்த கட்சிகளின் தோற்றம் கொள்கை பற்றி நான் பதில் கொடுக்க கடமைப்பட்டவன் அல்ல.
ஆனால் இந்தியாவில் டெல்லியில் கூட்டணிபோல் இலங்கையிலும் இருக்கு என்பதுதான் எனது வாதம். அங்கு லஞ்சம் இல்லையா? நண்பர்கள் இலண்டனில் இருந்து கொண்டு அதே கண்ணால் இலங்கையை பார்தால் அப்படித்தான் தெரியும். ஐஸ்வரியா ராயை பார்த்து விட்டு நம்வீட்டிலும் அப்படி தேடமுடியாது நண்பர்களே.
5. ‘ ஜனநாயகம் என வாய் கிழியக் கத்துவதை விட அதில் உள்ள நுட்பங்களை மக்கள் நன்மைக்காக பாவிக்கத் தெரிய வேண்டும்….’
ஜனநாயகம் பற்றி இவ்வாறு கூறுவார்கள். Majority have their way and minority have their say எனக் கூறுவார்கள். ஜனநாயத்தின் நுட்பங்களை இன்றைய அரசு எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அரசியல் அமைப்பினை தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் எவ்வாறெல்லாம் மாற்றி சர்வாதிகாரத்தை நோக்கி எடுத்துச் செல்லப்படுகிறது என்பதனை நன்கு பாருங்கள்.நடேசன் இவைகுறித்து என்ன செல்ல விரும்புகிறார் என அறிய ஆவலாக உள்ளேன்.
சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை ஆள்வது சர்வாதிகாரம் என்பதால் பெருபான்மையினர் ஆள்வதே ஜனநாயகம். இதை எவரும் எதிர்க்க முடியாது. இலங்கையில் பெரும்பான்மை இனம் இரண்டாக பிரிந்து ஆழும்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் கடந்த அறுபது வருடமாக ஆள்கிறார்கள் என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும். தற்போதய அரசுக்கு முன்பு இருந்த அரசுகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஜெயவர்த்தனாவைத் தவிர வைத்திருக்கவில்லைத்தானே. அப்பொழுது எமது அரசியல் வாதிகள் என்ன செய்தார்கள்? இப்பொழுது இராஜபக்சாதான் பிரச்சனை என சொல்பவர்கள் முன்பும் நீங்கள் ஒரு துரும்பையும் அசைக்கவில்லைத்தானே.
தற்போதய காலத்தில் கூட சிறுபான்மையினரின் உதவி இல்லாமல் அரசியல் அமைப்பை மாற்ற முடியாதுதனே? அதனால்த்தான் எதிர்த்து நின்ற முஸ்லீம் ஐக்கிய முன்னணிக்கட்சி அரசாங்கத்தினருடன் சேர்ந்தது.
தமிழர் அரசியல் தலைவர்கள் மலட்டு அரசியல் சிந்தனையுடன் மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டிருந்தாலும் தமிழ்தேசியம் என்ற பினத்துடன் கடந்த 60 வருடங்களாக குடும்பம் நடத்தி வருகிறார்கள். அதனால்தான் எந்தப்பலனும் கிடைக்கவில்லை.
அரசியல் என்பது ஆயுதம் அற்ற போர் இங்கே அறிவு இராஜதந்திரம் வேண்டும். தமிழ்நாட்டு திராவிட அரசியல்வாதிகளை நான் உதாரண புரு’சர்களாக நினைப்பதில்லை. ஆனாலும் அக்காலத்தில் வடக்கு வாழுகிறது தெற்கு தேய்கிறது என ஒப்பாரி வைத்தவர்கள் கடந்த பதினைந்து வருடமாக மத்திய அரசியலில் பங்கேற்று தென்மானிலங்களை முன்னேற்றி இருக்கிறார்கள். இப்பொழுது அவர்கள் தெற்கு வடக்கு கோஷம் போடுவதில்லைத்தானே?
