Quantcast
Channel: Noelnadesan's Blog
Viewing all articles
Browse latest Browse all 736

தென்னையும் பனையும் என் எஸ் நடேசன்

$
0
0

2001 யுத்த நிறுத்தம் வந்தபோது எனது பிறந்த இடத்திற்கு செல்ல விரும்பினேன். அக்காலத்தில் எனது புகைப்பட் புலிகளின் ஓமந்தை செக் பொயினடில் இருந்ததாக எனக்கு தகவல்வந்ததும் கற்பனையில் சென்றுவந்ததாக எழுதினேன். இது எனது சொந்தக்கதையல்ல. யாழ்பாணத்தில் வெளியேறியவர்கள் யார் இப்பொழுது இருப்பவர்கள் யார் என்பதும் வெளிநாட்டில் இருப்பவர்களில் 95 வீதமானவர்கள் உண்மையில் மக்களில் அக்கறையில்லாமல் இருப்பதை விளக்குகிறது.IMG_1464

அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு சத்தியனின் குடும்பத்திற்கு விசா கிடைத்து விட்டதால் முழுக்குடும்பத்தினருமே மகிழ்ச்சியில் ஆரவாரித்தனர். சத்தியனின் மனைவி சுமதியின் கால்கள் நிலத்தில் பாவவில்லை. விசா வந்த நாளில் இருந்து இரண்டு பிள்ளைகளின் வாயிலும் அவுஸ்திரேலியா பற்றிய விடயங்களே வந்தன. மெல்பேன், சிட்னி, அடிலைட் என்ற சொற்கள் தெறித்து விழுந்தன. தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்ததன் மூலம் அவுஸ்திரேலிய பூகோள சாத்திரத்திரத்தை சத்தியனின் குடும்பத்தினர் நன்றாக அறிந்து வைத்திருந்தனர். சுமதியின் அண்ணன் சிட்னியில் இருந்து அடிக்கடி அனுப்பும் பாரிசுப்பொருட்களும் அவுஸ்திரேலியாவை
சொர்க்கபுரியாகவே குழந்தைகள் மனதில் நினைக்க வைத்தது.

இலங்கையை விட்டு வெளியேற சுமதி பல வருடங்களாக முயன்று வருகிறாள். சத்தியன் தான் தட்டிக்கழித்த படி இருந்தான். “நாங்கள் இருவரும் வசதியாக வாழ்கிறோம். நுவரேலியாவில் பொ¢ய வீடும் இருக்கிறது. இந்த வாழ்க்கை அவுஸ்திரேலியாவில் எப்படிக் கிடைக்கும்” என்று சுமதியின் வெளிநாட்டு மோகத்தை தண்ணீர் தெளித்து குறைத்துக் கொண்டிருந்தான் சத்தியன்.

கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் இருந்து சத்தியனின் நண்பன் சாந்தன் வந்திருந்தான். 83ம் ஆண்டு கலவரத்தின் பின் சென்று நிரந்தரமாக அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ள சாந்தன் சத்தியனின் விருந்துபசாரத்தில் மனம் மகிழ்ந்தான். 83 இனக்கலவரத்தில் இரண்டு கைக்குழந்தைகளுடன் தேயிலைப் புதர் களின் மறைவில் இரண்டு நாட்கள் இருந்ததனையுமஇ; அட்டைகள். நத்தைகள் மற்றும் முதுகெலும்பற்ற உயிர் இனங்களுடனும் கல்லிடுக்குள் வாழ்ந்த காலத்தை எடுத்துக் கூறினான். சிட்னி நகரின் மேன்மையையும் இயம்பினான். சிட்னி, மெல்பேன் இடங்களில் புதிதாக குட்டி யாழ்ப்பாணங்கள் உருவாகியிருப்பதையும், தமிழ் சமூக விழுமியங்கள் அங்கும் கடைப்பிடிக்கப்படுவதாகவும் ஒரு ஸ்தல புராணம் பாடினான். இவனது பேச்சு சுமதியின் வெளிநாட்டு மோகத்தில் உயர்ரக பெற்றோலை ஊற்றியது போல் இருந்தது. இந்த வெப்பத்தில் சத்தியனும் வாடி விட்டான்.

சத்தியனின் எண்ணமும் மாறியது. இலங்கையில் அரசாங்கங்கள் மாறினாலும் நாட்டின் நிலமையில் பெரிதாக மாற்றம் வருவதில்லை. யாழ்ப்பாணப் பக்கம் போய் இருபது வருடங்களாகி விட்டது. இந்த நிலையில் 83 கலவரம் போல் இனி வராது என உறுதியாக சொல்லமுடியாது. சுமதியின் கோரிக்கை ஏற்கப்பட்டதும் சிட்னியில் இருக்கும் அண்ணன் மிகவிரைவாக செயல்பட்டு ஸ்பொன்சர் படிவம் அனுப்பினான்.

குடியகல்வு வேலையை தடையின்றி நடத்துவதற்கு ஏதுவாக சுமதியும் பிள்ளைகளும் வெள்ளவத்தையில் வாடகை வீட்டுக்கு குடியேறினார்கள். வார இறுதி நாட்களில் சத்தியன் கொழும்பு வருவான்.

அவுஸ்திரேலியவிற்கு குடியேறுவதற்கான படிவத்தை நிரப்பிக் கொடுத்த சிலகாலத்தில் நேர்முகத்தேர்வு வந்து விட்டது. அவுஸ்திரேலிய ஆங்கில உச்சா¢ப்பு காரணமாக நேர்முகதேர்வில் கேட்ட பல கேள்விகள் புரியவில்லை. சில மாதங்களில் மருத்துவ சோதனைப்பத்திரம் வந்து விட்டது. பயந்தபடி ஏதும் நடக்கவில்லை.

இரத்த பா¢சோதனை, எக்ஸ்ரே எல்லாம் எடுத்ததோடு டொக்டர் சத்தியனின் விதையை கூட அழுத்திப் பார்த்தார். இரண்டு குழந்தைகளிற்கு தந்தையானாலும் அவுஸ்திரேலியர்கள் விதையைக் காரணம் காட்டிக் கூட விசாவை மறுப்பார்களா?

ஏதோ எழுவைதீவு முருகன் கருணையால் தடங்கல் இல்லாமல் மல்றிப்பிள் விசா முழுக் குடும்பத்திற்கும் கிடைத்தது.

அந்நிய தேசத்துக்கு நிரந்தரமாக செல்வதற்கு முன்பாக பிறந்த எழுவைதீவை பார்த்துவிட தீர்மானித்து, சுமதியிடம் சொன்ன போது, மதுரையை எரித்த கண்ணகி போல் கோபம் கொண்டாள். உயிர் தப்பி வெளிநாடு செல்வதற்கு எல்லாம் சாரி வந்திருக்கு. இதேவேளையில் ஆமியிட்டயோ, புலியிடமோ போய் பிரச்சனையை விலைக்கு வாங்கி வருவதாக நிற்கிறீர்கள். உங்களுக்கு தலையில் ஏதாவது சரக்கு இருக்கா? என்றாள்.

“இப்போது போர்நிறுத்தத்தால் அமைதி நிலவுகிறது. எந்த பிரச்சனையும் வரமாட்டாது” என சத்தியன் சமாதானம் கூறினான்.
ஒருவழியாக அரைமனத்துடன் சுமதியின் சம்மதத்தையும் பெற்றுக்கொண்டு வடக்கு நோக்கிப் பயணித்தான். ஆமி, புலி அனுமதியுடன் எழுவைதீவு சென்றான். வவனியாவில் இருந்து வழி நெடுக யுத்தத்தின் தழும்புகள் பெரியம்மை வந்த வடுக்கள் போல் ஆழமாக பதிந்திருந்தது.

எழுவைதீவில் உறவினர்கள், பால்யகால நண்பர்கள் எனப்படுபவர்களில் பெரும்பாலானோர் பரதேசம் போய்விட்டார்கள். பிறந்து வளர்ந்த வீட்டுடன் தூரத்து உறிவினர்கள் சிலர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

எழுவைதீவில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் கத்தோலிக்க சமயத்தவர்கள் சுமார் நூறு குடும்பங்களும் அதே அளவான விவசாயம் செய்யாத வேளாளர் குடும்பங்களும் இருந்தன. இவர்களுடன் மேலும் சில குடும்பங்களே அக்காலத்தில் இருந்தன.

சத்தியன் சந்திக்க இருந்தவர்களில் அவனுடன் சிறுபிராயத்தில் படித்த சுந்தரமே முக்கியமானவன். இருவரும் ஓடிவிளையாடாத இடங்களும், கல்லெறியாத மாமரங்களும் ஊரில் இல்லை. மேற்குக் கடற்கரையில் மட்டி எடுத்து, சிறு நண்டு பிடித்து, பனை ஓலையில் எரித்து தின்ற நினைவுகள் இனிமையானவை. சத்தியன் சிறுவனாக இருந்தபோது சுந்தரத்தின் தங்கச்சி லட்சுமியை திருமணம் செய்யக் கூட நினைத்திருந்தான். நல்லகாலம் பாலிய விவாகங்கள் எழுவைதீவில் நடப்பதில்லை.

சத்தியன் ஐந்தாம் வகுப்புக்கு மேலே படிக்க உத்தேசித்து வள்ளமேறி யாழ்ப்பாணம் சென்றான். சுந்தரம் ஐந்தாம் வகுப்புடன் கல்வியில் பூரணத்தவம் பெற்று தந்தைக்கு தொழில் உதவி செய்ய முடிவு செய்து விட்டான். விடுமுறை நாட்களில் அவர்கள் நட்பு சிலஆண்டுகள் தொடர்ந்தன. ஏழுவைதீவை நோக்கி மோட்டார் படகு செல்லும்போது சத்தியனின் மனதில் இளம் வயது நினைவுகள் குமிழி இட்டன.

சிறுவயதில் சுந்தரத்துடன் இரவுபகலாக திரிந்தபொழுது சத்தியனின் அம்மா நீ சுந்தரத்தின் எச்சிப்பாலை குடித்ததால் தான் இப்படி அவனோடு அலைகிறாய் என்றார். சத்தியனுக்கு விடயம் உடனடியாக பூரியவில்லை. மீண்டும் தாயாரிடம் கேட்டபோது நீ குத்தியனாக இருந்ததால் எனக்கு பால் தரக்கட்டாது வேலம்மாள் தான் சுந்தரத்தின் மிகுதிப்பாலை எனக்கு தந்தாள் என்றார் சிரித்தபடி.

வேலம்மாள் நல்ல உயரம். மழையில் நனைந்த கருங்கல்லுச்சிலை போன்ற உடல்வாகு அள்ளி சொருகிய கொண்டையும் மேல்சட்டை இல்லாத மாரிர்பகமும் நினைவில் நிற்கும். ஒருநாள் வேலம்மாள் உரலில் மாவிடித்து கொண்டிருக்கும்போது சத்தியனின் தாயார் மாவை உரல் வாயில் தள்ளிக்கொண்டு நின்றார். ஆடிக்கொண்டிருந்த பாரியமுலைகளை வைத்தகண்ணால் இரண்டங்கெட்டான் வயதில் சத்தியன் பார்த்துக் கொண்டிருந்தான். ”என்னடா முலைப்பாலை குடிக்கிற நினைப்பு இன்னம் இருக்கா படுவா ராஸ்கல்” சிரித்துக் கொண்டே கேட்டாள் வேலம்மாள். அம்மா திரும்பிப் பார்ப்பதற்கு முன்பு மின்னலென மறைந்தான் சத்தியன். அந்த இடத்தை விட்டு, அன்றில் இருந்து வேலம்மாள் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்துக் கொண்டான்.

ஒருநாள் மாலை நேரம் பனையில் இறக்கிய கள்ளை பெரிய முட்டியில் ஊற்றிவிட்டு மீண்டும் மற்றொரு மரத்தில் ஏறினார் சுந்தரத்தின் தகப்பனார். கடற்கரை வழியே வந்து கொண்டிருந்தவர்கள் மண்பானையில் சிரட்டையை விட்டு கள் குடித்தார்கள். குடித்த நாளிள் இனிய நினைவாக கடற்கரையில் தேங்காய் ஒன்றையும், பனங்கொட்டையொன்றையும் புதைத்து விட்டார்கள். சில காலத்தின் பின் பாடசாலை விடுமுறையில் சென்ற சத்தியனுக்கு தாங்கள் புதைத்தவை தென்னம்பிள்ளையாகவும் வடலியாகவும் முளைவிட்டதை இட்டு பாரிய சந்தோசம்.

காலச்சக்கரத்தின் கடின ஓட்டத்தில் சுந்தரத்தின் தாய் தந்தையர் இறந்து விட்டனர் என சத்தியன் நுவரெலியாவில் இருந்தபோது கேள்விப்பட்டான். கொலைகளையும் மற்றும் வன்செயல்களையும் கேட்டு மரத்துப்போனதால் இயற்கையாக இறந்தவர்களுக்காகவும் கண்ணீர் விடுவதற்குகூட முடியாமல் போய்விடுகிறது. மரணங்கள் இலங்கைத்தமிழர் வாழ்வில் சிறுசம்பவம் போல முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது.

* * * * * *
மோட்டார் படகு எழுவைதீவு கரையை அடைந்தது. கிழக்கு கரையில் நடந்து நேரே சுந்தரத்தின் வீட்டுப்பக்கம் சென்றான். சுந்தரத்தின் குடிசையில் மாற்றமில்லை. புதிய பனை ஓலையால் வேயப்பட்டு இருந்தது.

சுந்தரம் வெளியே வந்தான். இருவரும் ஒரே வயதாலும் சுந்தரம் பத்துவயதில் மூத்தவன் போல தெரிந்தான்.
“எப்படி சுந்தரம், என்னைத் தெரிகிறதா?” சத்தியன்
“தெரியாமலா? இப்பொழுதுதான் வழி தொ¢ந்திருக்கு” சுந்தரம்
பொய்யான ஆத்திரத்துடன் வரவேற்றான்.
“குடும்பம் எப்படி?”
“இரண்டு பிள்ளைகள்” என கூறியபோது சுந்தரத்தின் மனைவி வெளியே வந்தாள்.
கையில் இருந்த பார்சலை சுந்தரத்தின் மனைவியிடம் கொடுத்துவிட்டு சத்தியன் சுந்தரத்தோடு மேற்கு நோக்கி கற்பாதையூடாக நடந்தார்கள். சில நிமிடங்களில் சத்தியனின் வீடு வந்தது. வீடு சிதிலமடைந்து பாழ்மண்டபம் போல காட்சி அளித்தது. ஓட்டுக்கூரை ஒருகாலத்தில் இருந்ததற்கு அடையாளமாக சில ஓடுகள் இருந்தன. வீட்டு ஒரு மூலையில் ஆலமரம் முளைத்து ஆளுயரத்தில் நின்றது. இரும்பு கேட்டுகள் துருப்பிடித்து இருந்தாலும் இன்னும் உறுதியாக இருந்தது.

பிறந்து வளர்ந்த வீடு பாழடைந்து இருப்பது சத்தியனின் மனத்துக்கு கஸ்டமாக இருந்தது. மீண்டும் கடற்கரையை நோக்கி நடந்தார்கள்.

மனிதர்கள் கட்டிய கட்டடங்கள் மட்டும் காலத்தால் சிதிலமாக்கப் பட்டுள்ளது. கடலும் கரையும் அன்று போலவே இருந்தன. ஊரைச்சுற்றி காரிய நிறத்தில் காவற்காரனைப் போல உருவிய வாளுடன் பனைமரங்களும் இடைக்கிடையே அரிதாரம் பூசி யாரையோ எதிர்பார்த்து காத்துக் கிடப்பது போல், கடலை நோக்கி வளைந்து இளனியையும் தேங்காயுமாக பல்லிளிக்கும் தென்னை மரங்கள், மணற்பரப்பில் கிச்சு முச்சு காட்டி விளையாடும் கடல்நீர் அலைகள், ஈரமண்ணில் ஒதுங்கி அலங்கரிக்கும் சோகிகள், காய்ந்த மணல் திட்டிகளில் தோட்டக்காரனுக்கு வேலை வைக்காமல் தானாகவே முளைத்த கற்றாளை, முள்ளி செடிகள். இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த தோற்றத்தை அப்பவே கொடுத்தன.

சத்தியனை தொடர்ந்து மெளனமாக வந்தான் சுந்தரம்.

கடல் உள்வாங்கி வந்த ஒரு இடத்தில் பனைவடலிகள் கூட்டத்தில் ஒரு தென்னைமரம் நின்றது. கடலுக்கு மேல் வளைந்து நின்றது.
“சத்தியன், இதுதான் நீ நட்ட தென்னை மரம்” என்றான் சுந்தரம்.
“சரி தேங்காயை எல்லாம் யாரு எடுக்கிறது.”
“கடலுக்குள் விழும்”
“உனது பனைமரம் எது?”
“இதோஇந்த வடலிக்கூட்டதிற்குள் நிற்கும் பனைமரம்” என்றான்.
“அதெப்படி இத்தனை வடலிகள் முளைத்திருக்கு” என்றான் சத்தியன் ஆச்சா¢யத்தில்.
“மாடு சூப்பியபின் பனங்கொட்டைகள் எடுப்பாரில்லாமல் முளைத்திருக்கு. முன்னர்போல் யாரும் பனம்பாத்தி போடுவதில்லை” என்றான் சுந்தரம்.
அந்த இடத்தில் சிறிதுநேரம் அசையாமல் நின்றுவிட்டு தென்னைமரத்தின் அடியில் சாய்ந்தான்
அவுஸ்திரேலிய மல்றிப்பிள் என்றி விசாவுக்கும், இந்த தென்னை மரத்துக்கும் ஒற்றுமை தொ¢ந்தது.

சிலநிமிட நேரத்தின் பின் படகுத்துறையை அடைந்தனர். சத்தியன் “இனி எப்ப இங்காலே வருவாய்” என்றான் சுந்தரம்.
“வரும்போது உனக்கு தகவல் தருவேன்” எனக்கூறிக்கொண்டு படகில் ஏறினான் சத்தியன்.

கரையில் சுந்தரத்தை பார்த்து கைகாட்டி விட்டு அவனால் உருவாக்கப்பட்ட பனங்கூடல்களையும் பார்த்து கையை அசைத்தான். மோட்டார் வள்ளம் புறப்பட்டது.



Viewing all articles
Browse latest Browse all 736

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!