Quantcast
Channel: Noelnadesan's Blog
Viewing all articles
Browse latest Browse all 736

பயணியின் பார்வையில் —04

$
0
0

Rajam-Krishnanபயணியின் பார்வையில் —04
இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை
முதுமை, தனிமை, இயலாமை

முருகபூபதி

வேலூரில் இறங்கும்போது அதிகாலை. தம்பி வீட்டுக்கு ஒரு ஓட்டோவில் வந்து இறங்கியபோது தம்பி மனைவி வாசலில் தண்ணீர் தெளித்துக்கொண்டு என்னை வரவேற்றார்.
“ எழுதுவதுடன் நிற்கமாட்டீர்களா? எழுதுபவர்களையும் தேடி அலையவேண்டுமா?” என்று மச்சாள் கேட்டபோது, “ அப்படி நால்லாக்கேளுங்க…” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தாள் மனைவி.
எனது உடல்நலத்தில் அவர்களுக்கு மிகுந்த அக்கறை.
“ எழுத்தாளர்களின் படைப்புகளை படிப்பதுடன், படித்ததை ஏதாவது இதழில் விமர்சிப்பதுடன் நின்றுவிடவேண்டும். அதற்கும்மேலே அவர்களைத் தேடி அலைந்து சிரமப்படத்தேவையில்லை. அதனால் நீங்கள் பிரச்சினைகளையும் சந்திப்பீர்கள். முரண்பாடுகளினாலும் அவதியுறுவீர்கள்” எனச்சொன்னாள் மனைவி.
“ பிரச்சினைகளும் முரண்பாடுகளும் நிறைந்ததுதானே மனித வாழ்வு. அதற்காக தேடலை நிறுத்திக்கொள்ளமுடியுமா? எங்குதான் பிரச்சினை இல்லை. முரண்பாடுகள் இல்லை. குடும்பங்களுக்குள் கணவன் – மனைவிக்குள் பெற்றோர் – பிள்ளைகளுக்குள் உறவினர், நண்பர்கள் மத்தியில் எல்லாம் நீக்கமற நிறைந்திருப்பது பிரச்சினைகளும் முரண்பாடுகளும்தானே… சந்திப்புகளிலும் அவை தவிர்க்கமுடியாதுதான். ஆனால் அனுபவம் வரவாகிறதே… அதற்காக ஒரு படைப்பாளி, பத்திரிகையாளன் யாத்திரீகனாக அலைந்துகொண்டுதான் இருப்பான்.” என்றேன்.
“ அடுத்து எங்கே பயணம்?” எனக்கேட்டாள் மனைவி.
“ இனியென்ன… அவுஸ்திரேலியா திரும்பும் நாள் நெருங்குகிறது. சென்னைக்குச்சென்று சிலரைப்பார்த்துவிட்டு புறப்படவேண்டியதுதான். வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் உமக்கு ஒருவரைக்காண்பிக்கப்போகின்றேன். அவரை நீர் அவசியம் சந்திக்கவேண்டும். அவர் ஒரு பெண். அவரது படைப்புகளை நான் படித்திருக்கிறேன். நேரிலும் பார்த்திருக்கின்றேன். நீண்டகால சகோதரவாஞ்சை. தமிழகம் வந்தால் அவரைப்பார்க்காமல் திரும்பியதும் இல்லை. 1984 இல் 1990 இல் 2008 இல் தமிழகம் வந்த சந்தர்ப்பங்களில் அவரை அவர் வாழ்ந்த வௌ;வேறு இடங்களில் சந்தித்திருக்கின்றேன். அவரது உபசரிப்பில் அகம்மகிழந்திருக்கின்றேன். 1983 இல் இலங்கையில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய பாரதி நூற்றாண்டு விழாவுக்காகவும் அவரை அழைத்திருக்கின்றோம். அந்தக்காலம் முதல் அவர் எனது அன்புச்சகோதரி. தற்போது அவருக்கு வீடும் இல்லை. நிரந்தர வாழ்விடமும் இல்லை. இலக்கிய உலகில் உச்சத்தில் இருந்தவர். பல விருதுகள் பெற்றவர். இலக்கியப்பயணம் மேற்கொண்டு சில நாடுகளுக்கு சென்று வந்தவர். தனது நாவல்களுக்காக கள ஆய்வு செய்வதற்கு கடல் பிரதேசங்களுக்கும் உப்பளங்களுக்கும் கரிசல் மண்ணுக்கும் அகதி முகாம்களுக்கும் சென்று அந்த மக்களுடன் வாழ்ந்தவர். சுறுசுறுப்பாக இயங்கியவர். அவரது கதைகள் தொலைக்காட்சி நாடகமாக ஒளிபரப்பாகியுள்ளன. அவரது படைப்புகளை ஆய்வு செய்து பட்டங்கள் பெற்றவர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் இருக்கிறார்கள். அயராமல் எழுத்துப்பணியில் ஈடுபட்டவர். இலக்கிய நிகழ்வுகளில் உரைநிகழ்த்தியவர். தற்போது வீடுவாசல் இழந்து அநாதரவாக தனிமையில் ஒரு மருத்துவமனையில் வாடிக்கொண்டிருக்கிறார். அவரைப்பார்க்கப்போகின்றேன்.” எனச்சொன்னதும் மனைவி, “ராஜம் கிருஷ்ணன்தானே…? என்று சட்டென்று சொன்னாள்.
சென்னைக்குச்செல்லும் வழியில் பொரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவலை, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் மூலம் அறிந்திருந்தேன்.
இலங்கைக்கு ராஜம்கிருஷ்ணன் 1983 தொடக்கத்தில் பாரதிநூற்றாண்டு விழாக்களுக்காக பாரதி இயல் ஆய்வாளர்கள் சிதம்பர ரகுநாதன் மற்றும் பேராசிரியர் ராமகிருஷ்ணன் சகிதம் அழைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது முதல் நான் நேசம் பாராட்டும் இலக்கியவாதி அவர். இலங்கையில் 1983 இனக்கலவரத்தையடுத்து மண்டபம் முகாமில் தஞ்சமடைந்த ஈழத்து அகதிகளை நேரில் சந்தித்து அவர்களின் அவல வாழ்வை தனது மாணிக்ககங்கை நாவலில் பதிவுசெய்திருந்தார். அந்த நூலின் முன்னுரையில் எனது பெயரையும் அவர் குறிப்பிட்டது நான் எதிர்பாராதது.
ஒரு பிராமணக்குடும்பத்தில் பிறந்தவர். ஆசாரம் பார்க்கும் மரபார்ந்த சமூகத்தில் பிறந்த இவர் மீன்கவிச்சி வாசம் நிறைந்த மக்கள் வாழும் கடலோரக்கிராமங்களுக்குச்சென்று அம்மக்களுடன் வாழ்ந்து அலைவாய்க்கரையில் நாவல் படைத்தார். உப்பளத்தொழிலாளர் வாழ்வைப்பிரதிபளிக்கும் கரிப்புமணிகள் படைத்தார். இந்நாவல் தொலைக்காட்சி நாடகமாகியது. விவசாயமக்களைப்பற்றி அவர் எழுதிய புதினம் சேற்றில் மனிதர்கள். பாரதி பற்றியும் நூல் எழுதியவர்.
ராஜம்கிருஷ்ணனின் கணவர் ஒரு பொறியிலாளர். குழந்தைகள் இல்லை. கணவருடன் அவர் தாம்பரத்தில் வசித்தபோது 1984 இல் நான்காவது பரிமாணம் நவம் ( தெணியான் தம்பி – தற்போது கனடாவில்) எனது மனைவியின் தம்பி கவிஞர் காவ்யன் ( தற்போது சிங்கப்பூரில்) ஆகியோருடன் சென்றிருக்கின்றேன்.
1990 இல் எனது குழந்தைகளுடன் அவரைப்பார்க்கச்சென்றேன்.
அவரது கணவர் மறைந்தபின்பு தனிமரமானார். பூர்வீக சொத்து மற்றும் வீட்டை இழந்தார். எஞ்சிய பணத்தை ஒருவரை நம்பி துழiவெ யுஉஉழரவெ இல் வங்கியில் வைப்புச்செய்துவிட்டு நீலாங்கரைப்பக்கமாக ஒதுங்கிவாழ்ந்தார். நோயுற்றார். உதவிக்கு ஒரு ஒற்றைக்கண்பார்வையுள்ள முதியபெண்ணை வைத்துக்கொண்டார். 2009 தொடக்கத்தில் ராஜம்கிருஷ்ணனை அந்த நீலாங்கரைவீட்டிலேயே சந்தித்தேன்.
அப்பொழுது அவர் சொன்ன சுவாரஸ்யமான சம்பவம் நினைவில் தங்கியிருக்கிறது. அவரது ஒரு கதையை தொலைக்காட்சி நாடகமாக்க விரும்பினார் நடிகை ரேவதி. அது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்காக தொலைபேசியில் தொடர்புகொண்டார். அப்பொழுது ராஜம்கிருஷ்ணன் ஆழ்ந்த உறக்கம்.
தொலைபேசியை எடுத்தவர் அங்கிருந்த முதியபெண். மறுமுனையில் ரேவதி. “ அம்மாவுடன் பேச வேண்டும். ரேவதி என்று சொல்லுங்கள்” எனச்சொன்னதும், “ ரேவதியாவது கீவதியாவது…அம்மா இப்போ நித்திரை. எழுப்பமுடியாது. போனை வை…”
ரேவதி அதிரவில்லை. உடனே புறப்பட்டு நீலாங்கரைக்கு வந்து ராஜம்கிருஷ்ணனின் சுகநலம் விசாரித்துவிட்டு அந்த முதியபெண்ணிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். நான் போயிருந்தபோது இந்தச்சம்பவத்தை சொல்லி பெருங்குரலெடுத்துச்சிரித்தார் ராஜம் கிருஷ்ணன். அவருடன் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவதும் தெரியாது. கலகலப்பானவர். தமிழகத்தின் பல முன்னணி பெண் எழுத்தாளர்களுடன் நெருக்கமான உறவை பேணியவர். அம்பை, திலகவதி, தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் ஆகியோர் அவரை அவ்வப்போது நேரில் சென்று பார்த்தவர்கள்.
திடீரென்று நோய்வாய்ப்பட்டார் வங்கியில் வைப்பிலிருந்த பணத்தை அந்த நபர் கையாடியதையடுத்து நிராதரவானார். படுக்கையில் நிரந்தரமானபோது அவரிடமிருந்தது. முதுமை, தனிமை, இயலாமை.
குறிப்பிட்ட நபரை சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க சில படைப்பாளிகள் முனைந்தபோது “ வேண்டாம் அவனை மன்னித்துவிடுங்கள்” என்று பெருந்தன்மை பேசியவர். இறுதியாக கலைஞர் ஆட்சியிலிருந்தவேளையில் அவருக்கு உதவிப்பணம் கிடைக்க சில படைப்பாளிகள் ஏற்பாடு செய்தனர். தற்போது சென்னை பொரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவக்கண்காணிப்பாளர் டொக்டர் மல்லிகேசனின் நேரடிக்கவனிப்பில் மருத்துவமனைக்கட்டிலில் முடங்கியிருக்கிறார்.

வேலூரிலிருந்து சென்னைக்கு வரும்வழியில் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு மனைவியுடன் சென்றேன். மருத்துவர் மல்லிகேசனை முதலில் சந்தித்தேன். அவருக்கு அங்கு உயர்ந்த மரியாதை. பாதுகாவல் கடமையிலிருந்தவர்கள் அவரது அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றார்கள்.
என்னை அறிமுகப்படுத்தியதும் அவர் ஏற இறங்கப்பார்த்தார். அவுஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கின்றேன் எனச்சொன்னதும், இந்தியரா, இலங்கையரா? எனக்கேட்டார்.
“ இலங்கைத்தமிழன்” என்றேன். அவரது முகத்தில் புன்முறுவல். அருகிலிருந்த அவரது செயலாளர் (பெண்) எம்மை வியப்புடன் பார்த்தார். மருத்துவரிடம் புன்முறுவல் அப+ர்வமாகத்தான் வரும்போலத்தெரிந்தது. அவர் எழுந்துசென்று ஒரு காகிதத்தை போட்டோ இயந்திரத்தில் வைத்து இரண்டு பிரதிகள் எடுத்து வந்து எம்மிடம் நீட்டினார். அவர் எழுந்தபோது அந்த செயலாளரும் எழுந்து நின்றார். அவ்வளவு மரியாதை.
குறிப்பிட்ட பிரதியில் ஒரு கவிதை, இந்திராகாந்தியின் குடும்பத்தை கடுமையாக விமர்சிக்கும் ஒரு கவிதை. இலங்கை – இந்திய உறவு பற்றி அவருடன் ஒரு உரையாடலை தொடக்கியிருக்கலாம். ஆனால் எனக்கு ராஜம்கிருஷ்ணனை நேரில் பார்ப்பதற்கான அவரது அனுமதிதான் முக்கியமாகப்பட்டது.
வெளியே காரில் எனது தம்பியின் பிள்ளைகள். சென்னைவரையில் அவர்கள் வருகிறார்கள். இரவாவதற்கு முன்னர் அவர்களை திருப்பி அனுப்பவேண்டும். எனது அவசரத்தை சொன்னேன்.
அவர் எதுவும் சொல்லவில்லை. தொலைபேசி எடுத்து யாருடனோ பேசினார். சில நிமிடங்களில் ஒரு தாதி வந்து எம்மை அழைத்துச்சென்றார்.
“ பாட்டியை பார்க்க வந்தீங்களா…. தற்போது பார்வையாளர் நேரம் இல்லை. சுப்ரீண்டன் சொல்வதனால் அழைத்துப்போகின்றேன்.” என்றார் அந்தத்தாதி;.
எங்களுக்கெல்லாம் ஒரு படைப்பாளியாகத்தெரிந்த, வாழ்ந்த ராஜம்கிருஷ்ணன் அந்த மருத்துவமனையில் தாதிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பாட்டியாக இருக்கிறார்.
அந்த வோர்டில் படுத்திருந்த பெண்கள் மற்றும் பணியிலிருந்த தாதிமார் எம்மை விநோதமாக பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மிகவும் கூச்சமாகவும் இருந்தது.
“ அதோ… நீங்கள் தேடிவந்த பாட்டி…” என்று சொல்லி கைகாட்டிவிட்டு அந்த தாதி மறைந்தார்.
ஒரு மூலையில் கட்டிலில் மறுபுறம் திரும்பி ஒருக்களித்து படுத்திருந்த ராஜம்கிருஷ்ணன் அருகில் சென்றோம்.
“ அம்மா…” என்றேன்.
“ யாரு…” முகத்தை திருப்பினார்கள். நாம் முன்பு பார்த்த செந்தளிப்பான அந்த முகம் எங்கே? மீண்டும் “யாரு…?”
“முருகபூபதி அம்மா…”
அவரது முகம் ஆச்சரியத்தினால் பிரகாசமானது. படுக்கையிலிருந்து எழ முயற்சித்தார்.
“ முடியiலை…எல்லாம் மாறிவிட்டது, எல்லாம் மாறிவிட்டது…” என்று அரற்றினார். பிள்ளைகளை விசாரித்தார். திடீரென்று விம்மி வெடித்து அழுதார். கரம்பற்றி தேறுதல் சொன்னேன்.
எனதும் மனைவியினதும் முகங்களை ஊடுருவிப்பார்த்தார். “ ஞாபகம் இருக்கு…இருக்கு. பார்க்க வந்தது சந்தோஷம். செத்துப்போயிடலாம். ஏன் இருக்கோணும்… எல்லாம் மாறிட்டுது… ஆட்கள் மாறிட்டாங்க…”
எனது மனைவி கைகளை பிசைந்துகொண்டு நின்றாள். நான் ராஜம்கிருஷ்ணனின் கரம்பற்றி தேறுதல் வார்த்தைகளையே சொல்லிக்கொண்டிருந்தேன். அவரது துயரத்தில் தேறுதல் வார்த்தைகளின் ஊடாக மாத்திரமே பங்குகொள்ளமுடியும்.
“ அம்மா உங்களுக்கு என்னவேண்டும்?”
“ எதுவும் வேண்டாம்.. இங்கே…எல்லாரும் நல்லா பார்க்கிறாhங்க… “
“ யாரும் சமீபத்தில் பார்க்க வந்தாங்களா?”
அவரிடமிருந்து விம்மல்தான் பதிலாக வந்தது. முதுமை, தனிமை, இயலாமை என்பவைதான் தற்போது அவரிடமிருக்கும் சொந்தங்கள்.
தனது தம்பிமார் வெளியூரில் எனச்சொன்னார். வருகிறார்களா? எனக்கேட்டேன். கண்ணீர்தான் அதற்கும் பதில்.
மீண்டும் மீண்டும் தேறுதல் வார்த்தைகள்தான் என்னிடமிருந்து வெளிப்பட்டன. அதற்கும் புதிய சொற்களை தேடவேண்டிய இயலமை என்னைச்சூழ்ந்தபோது அவரது தலையை தடவிவிட்டு விடைபெற்றேன். அவரைப்பார்க்கச்செல்லும்போதிருந்த ஆர்வம் மறைந்து நெஞ்சில் பெரிய பாரம் ஏறியதுபோன்ற உணர்வுடன் அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வந்தேன்.
எதிர்காலத்தில் நானும் பலரும் சந்திக்கப்போகின்ற முதுமை முன்னே வந்து பயமுறுத்துகிறது.
எழுத்தாளர்களின் படைப்புகளை படிப்பதுடன் மாத்திரம் நின்றுவிட்டால்…….?
இல்லை. சந்திக்கவேண்டும். அப்போதுதான் உலகம் தெரியும் தெளிவும் பிறக்கும்.

(பயணங்கள் தொடரும்)



Viewing all articles
Browse latest Browse all 736

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!