இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை
கோவை ஞானியுடன் வீதியுலா
முருகபூபதி
பயணநிகழ்ச்சிநிரலின் பிரகாரம் கோயம்புத்தூரில் இரவு இறங்கி,சித்தன் இல்லத்தில் தங்கிவிட்டு மறுநாள் காலை ஞானியைப்பார்க்கப்புறப்பட்டேன். வழித்துணை சித்தன்.
இலக்கிய உலகில் நான் பிரவேசித்த காலப்பகுதியில் எனக்கு இரண்டுபேரின் பெயர்கள் சற்று மயக்கத்தை கொடுக்கும். ஒருவர் பரீக்ஷா ஞாநி. மற்றவர் கோவை ஞானி.
பரீக்ஷா ஞானி நாடக எழுத்தாளராக இயக்குநராக பிற்காலத்தில் பத்திரிகையாளராக எனக்கு அறிமுகமானவர். பல வருடங்களுக்கு முன்னர் அவர் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு வந்தபோது, சுபமங்களா ஆசிரியரிடம் எனது தொலைபேசி இலக்கத்தை பெற்றுவந்து குவிண்ஸ்லாந்து மாநிலத்திலிருந்து தொடர்புகொண்டார். நான் அப்போது “ நீங்கள் பரீக்ஷா ஞாநியா, அல்லது கோவைஞானியா?” என்று கேட்டது தற்போது நினைவுக்கு வருகிறது.
இந்நிலையில் எனக்கும் ஒரு புனைபெயர் இருக்கிறது. ரஸஞானி. இதனை எனக்கு 1980களில் வீரகேசரி வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர் பொன்.ராஜகோபால் சூட்டினார். அந்தப்புனைபெயரில்தான் இலக்கியப்பலகணி பத்திகளை எழுதினேன்.
பரீக்ஷா ஞாநியை அவுஸ்திரேலியாவில் மெல்பனில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் சந்தித்து எழுதிய நேர்காணல் பின்னர் எனது சந்திப்பு நூலில் இடம்பெற்றது.
கோவை ஞானியின் விமர்சனங்களை படித்திருந்தபோதிலும் அவரை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு இந்தப்பயணத்தில்தான் சித்தமானது.
பழனிச்சாமி என்ற இயற்பெயர்கொண்டவர். 1935 ஆம் ஆண்டு கோவையில் பிறந்து அண்ணாமலைப்பல்கலைக்கழகம், சென்னைப்பல்கலைக்கழகம் முதலானவற்றில் உயர்கல்வி கற்று பட்டம்பெற்றவர். ஒரு பல்கலைக்கழக பேராசிரியராகும் தகுதியும் தகைமையுமுள்ள ஞானி, ஒரு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகவே சுமார் முப்பது ஆண்டு காலம் பணியாற்றி, கண்பார்வையை இழந்த காரணத்தினால் தொழிலைத்துறந்தவர். இரண்டு மகன்மார். மனைவி இந்திரா சில மாதங்களுக்கு முன்னர் மறைந்துவிட்டார். ஒரு உதவியாளர் மூலம் தினமும் படிக்கிறார். எழுதுகிறார். வீட்டினுள்ளே அவருக்கு எந்தப்பொருள் எங்கே இருக்கிறது, வாயில் எங்கே இருக்கிறது, குளியலறை, சமையலறை எங்கிருக்கின்றன என்பதையெல்லாம் அடையாளமாக வைத்துக்கொண்டு நடமாடுகிறார். அவருக்கு கண்பார்வை இல்லையென்பதே அவருக்கு ஒரு குறையாக இல்லை. மணக்கண்கள் விழிப்புடனேயே இயங்குகின்றன.
அவரது வீட்டினுள் பிரவேசித்ததும் அவரது மூத்த மகன் வந்து வரவேற்றார். ஞானி வரவேற்பறைக்கு வருகிறார். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அணைத்துக்கொள்கின்றேன்.
அவருக்கு முன்பாக நானும் சித்தனும் அமர்ந்துகொள்கின்றோம். அவருடைய பெண் உதவியாளர் அப்போது வருகிறார். அவருக்கு எம்மை ஞானி அறிமுகப்படுத்துகிறார்.
புதிய தலைமுறை, வானம்பாடி, நிகழ், பரிமாணம் முதலான சிற்றிதழ்களை நடத்தியவர். தற்போது தமிழ்நேயம் என்ற இதழை வெளியிடுகிறார். தமிழும் இலக்கியமும் அவரது சுவாசக்காற்று. திறனாய்வு, கவிதை, கட்டுரை, தொகுப்பு என ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை இலக்கிய உலகிற்கு வரவாக்கியிருப்பவர். இவற்றுள் திறனாய்வு நூல்கள் 25.
சீரிய சிந்தனையாளர். வாழ்நாள் சாதனையாளர். விருதுகளும் பட்டங்களும் பெற்றிருப்பவர். தானும் இயங்கி மற்றவர்களையும் இயங்கச்செய்பவர். மாக்சீயப்பார்வையில் சங்க இலக்கியம் முதல் நவீன தமிழ் இலக்கியம் வரையில் ஆய்வுசெய்திருப்பவர். மாக்சீயப்பற்றாளர். அதேவேளை தமிழ்த்தேசியத்திலும் ஆழ்ந்த பற்றுள்ளவர். அதனால் அனைத்துதரப்பினராலும் நேசிக்கப்படுகிறார். கவனிப்புக்குள்ளாகின்றார். அவரது கருத்துக்களின் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
1970 களில் நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் புதுக்கவிதை பற்றி பரவலாகப்பேசப்பட்டது. விமர்சிக்கப்பட்டது. அப்பொழுது நேர்த்தியான பதிப்பில் அழகியலோடு வெளியான வானம்பாடி இதழ்ளை படித்தோம். எமக்கு ஞானி, அக்கினிபுத்திரன், மேத்தா, மீரா, புவியரசு, தமிழன்பன், சிற்பி உட்பட பலர் அறிமுகமானார்கள். ஈழத்து கவிஞர்களுக்கு அக்காலப்பகுதியில் ஆதர்சமாக விளங்கியது வானம்பாடி இதழ்கள். அதனைப்பார்த்து ஈழத்திலும் கவிதைக்கென்றே தனி இதழ்களை வெளியிட சில கவிஞர்கள் முன்வந்தனர்.
வானம்பாடி இயக்கம் எதிர்பாராதவிதமாக ஸ்தம்பிதமடைந்தபோது இலங்கையில் பெரிதும் வருந்திய கவிஞர்களை நான் அறிவேன்.
ஞானி, தனது வானம்பாடி அனுபவங்களை விரிவாக, வானம்பாடிகளின் கவிதை இயக்கம்: வரலாறும் படிப்பினைகளும் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். படைப்பாளிகள் இணைந்து இயக்கம் நடத்தி அதன் சார்பாக இதழ் அல்லது மலர் உட்பட வெளியீடுகளை வெளிக்கொணரும்போது ஏற்படுகின்ற கருத்துமுரண்பாடுகள் தன்முனைப்பு செயற்பாடுகள் எவ்வாறெல்லாம் ஒரு நல்ல நோக்கத்தை தவிடுபொடியாக்கிவிடும் என்பதை குறிப்பிட்ட விரிவான நூல் விளக்குகிறது.
முதல் முதலில் அவர் அன்று என்னைச்சந்தித்தவுடன் என்னை அவர் பேட்டிகண்டதுதான் எனக்கு பேராச்சரியம். எதிலும் எழுதுவதற்காக அவர் அவ்வாறு பேட்டி காணவில்லை. எனது எழுத்துக்களைப்படிக்காத முன்பின் அறிமுகமில்லாத என்னைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டினார். எனது பூர்வீகம், பெற்றோர், கல்வி, தொழில், குடும்பம், புலப்பெயர்வு, எழுத்துலகப்பிரவேசம் என எதனையும்விடாமல் கேட்டுத்தெரிந்துகொண்டார். அவரது சில கேள்விகள் நான் எதிர்பார்க்காதவை.
இறை நம்பிக்கை இருக்கிறதா? தமிழ்த்தேசியம் குறித்த சிந்தனை என்ன? ஈழப்போராட்டத்துக்கு ஆதரவா? எழுதியிருக்கும் படைப்புகள்? தற்போது இலங்கையில் என்ன நடக்கிறது? தொடர்ந்தும் புகலிட நாட்டில்தானா எதிர்காலம்?
அவரது கேள்விகள் கூர்மையானவை. என்னைப்பற்றி முழுமையாக தெரிந்துகொண்டதன் பின்பே எதுபற்றியும் பேசுவதற்கு அவர் தயாராக இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளமுடிந்தது.
இலங்கையில் எமது முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பான பணிகளை நாம் ஆரம்பித்தவேளையில் அதனை எதிர்த்து குரல் எழுப்பியவர்களில் கோவைஞானியும் ஒருவர். கோவை ஞானிக்கிருந்த பின்புலம் நாம் அறிந்ததே. எமது நிலைப்பாடுகளை அவருக்கு விளங்கப்படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தந்தவர்கள் தமிழ்நாட்டில் யுகமாயினி சித்தன். மற்றவர் லண்டனில் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். ஏற்கனவே ஞானிக்கும் ராஜேஸ்வரிக்கும் இடையே ஆரோக்கியமான இலக்கிய புரிந்துணர்வு இருந்தது. சித்தனும் ராஜேஸ்வரியும் கொழும்பில் மாநாட்டு இணைப்பாளர் டொக்டர் ஞானசேகரனுக்கு ஞானியின் தொலைபேசி இலக்கம் தந்து உரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தார்கள். பொன்னீலன், தி.க.சி, ராமகிருஷ்ணன், ஜெயமோகன் உட்பட சில இதழ்களின் ஆசிரிய பீடத்துடன் நான் தொடர்புகொண்டு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தபோது, நண்பர் நடேசன் தீராநதி ஆசிரியர் மணிகண்டனுடன் தொடர்பு கொண்டு எமது தரப்பு நியாயங்களையும் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
ஞானியுடன் ஞானசேகரன் உரையாடியபின்பு ஞானி எழுதிய கடிதம் முக்கியமானது. அவர் கொழும்பு மாநாடு தொடர்பாக தமிழகத்தில் கையெழுத்து வேட்டைகளில் இறங்கி பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டவர்களிடம் அவற்றை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஞானியின் இந்தச்செயற்பாடு பெரியதிருப்பத்தை ஏற்படுத்தாதுபோனாலும் பொய்ப்பிரசாரங்கள் சற்று தணிந்தது.
மாநாடும் திட்டமிட்டவாறு முடிந்தது. ஆனால் ஞானி எமக்கு ஆதரவு தந்தமையால் கடும் கண்டனத்துக்குள்ளாக்கப்பட்டார்.
மாநாட்டிற்கு இலங்கை அரசின் ஆதரவு இல்லை. எந்த ஒரு அமைச்சருக்கும் அழைப்பில்லை. அரசியல்வாதிகளின் பிரவேசம் இல்லை. பொன்னாடை, பூமாலை இல்லை. இனி என்ன சொல்கிறீர்கள் என்று ஞானி கேட்டதற்கு எதிர்வினையாற்றிய பக்கமிருந்து மௌனம்தான் பதிலாகியிருக்கிறது.
அவரது வீட்டினுள்ளிருந்து உரையாடிக்கொண்டிருந்தோம். சற்று புழுக்கமாக இருந்தது. “வெளியிலிருந்து பேசுவோமா?” எனக்கேட்டார். நானும் சித்தனும் ஆசனங்களை எடுத்துக்கொண்டு முற்றத்திற்கு வந்தோம். அவர் அடையாளம்வைத்து நடந்துவந்து வாசலில் அமர்ந்துகொண்டார்.
“ தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகும் தருணத்திலே இலங்கையிலும் திரையிடப்படுகிறது. ஆனால் தமிழகத்தயாரிப்புக்கான காட்சிகளை ஒரு இயக்குநர் இலங்கையில் படமாக்கச்சென்றால் உடனே அதற்கு எதிர்ப்பு கிளம்பிவிடுகிறது. தினமும் சென்னை விமான நிலையத்திற்கு சென்று பாருங்கள் எத்தனை உல்லாசப்பயணிகள், வர்த்தகர்கள் தமிழகத்திலிருந்து புறப்படுகிறார்கள். அதற்கு மட்டும் ஏன் எதிர்ப்பு இல்லை. சோதிடர்கள் முதற்கொண்டு சாமியார்கள் மற்றும் பிரசங்கிகள் போய்வருகிறார்கள். ஆனால் ஒரு படைப்பாளி ஒரு சந்திப்புக்கு அல்லது மாநாட்டுக்கு புறப்பட்டவுடன் எதிர்வினை தொடங்கிவிடுகிறதே?” என்று ஞானியிடம் கேட்டேன்.
“ இலங்கையில் தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் வரையில் இங்கு இப்படித்தான் இருக்கும்.” என்றார் ஞானி.
“….அதுவரையில் அங்கிருக்கும் எழுத்தாளர்கள் தமிழக எழுத்தாளர்களுடன் ஒன்றுகூட முடியாதா? ஆசிரியர்கள், மருத்துவர்கள், சட்டத்தரணிகள் காலத்துக்குக் காலம் தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள புதிய கல்வித்திட்டங்கள், புதிய மருத்துவக்கண்டுபிடிப்புகள், சட்ட நுணுக்கங்கள் பற்றியெல்லாம் தெரிந்துகொள்வதற்கு மாநாடுகளில் ஒன்றுகூடுவதுபோன்று எழுத்தாளர்களும் சந்தித்து கருத்துப்பரிவர்தனையில் ஈடுபடமுடியாதா?” எனக்கேட்டேன்.
“ நீங்கள் என்ன சொன்னாலும் தமிழகத்தில் இதுவிடயத்தில் எந்தமாற்றமும் நடக்கப்போவதில்லை. நீங்கள் உங்கள் பாட்டுக்கு செய்யுங்கள் இங்கிருந்து வரக்கூடியவர்கள் வரட்டும்.” என்றார்.
நான் தமிழகத்தில் நின்ற பெப்ரவரி மாதத்தில்தான் இலங்கை ஜனாதிபதியின் திருப்பதி விஜயமும் இடம்பெற்றது. வை.கோ. டில்லிக்கு தனது ஆதரவாளர்களுடன் கண்டனப்பேரணி நடத்த புறப்பட்டார். கலைஞர் தமது டெசோ அமைப்பைக்கூட்டி கண்டனம் தெரிவித்தார். திருமாவளவன், சீமான், நெடுமாறன், பாண்டியன் முதலானோர் கண்டனக்கூட்டங்களும் பேரணிகளும் நடத்தினர். சில ரயில் நிலையங்களில் மறியல் போராட்டம் நடந்தது.
இந்த இலட்சணத்தில் இலங்கை – தமிழக இலக்கிய உறவு, சந்திப்பு, மாநாடு பற்றி நாம் பேசிக்கொண்டிருந்தோம்.
போருக்குப்பின்னர் தற்போதைய ஈழத்து இலக்கிய உலகம் பற்றி தெரிந்துகொள்வதில் ஞானி பெரிதும் ஆர்வம்காட்டினார். கருணாகரன், நிலாந்தன், யோ.கர்ணன், ராகவன் ஆகியோரது அண்மைக்கால எழுத்துக்கள் பற்றி குறிப்பிட்டேன். அவர்களின் படைப்புகள் தனக்கு கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த ஆண்டு இறுதிக்குள் யாழ்ப்பாணத்தில் இலக்கிய சந்திப்பு நடக்கவிருக்கும் தகவலையும் சொன்னேன்.
மதியமானது. நானும் சித்தனும் வெளியே மதியபோசனத்துக்காக புறப்பட்டோம். அன்று இரவுதான் வேலூருக்கு புறப்படவிருந்தேன். அதனால் இரவு 7 மணிவரையில் தன்னுடன் இருக்கலாம் என்று ஞானி சொன்னார். மதிய உணவின்பின்பு என்னை உறங்கச்சொல்லிவிட்டு, (இரவுப்பயணம் என்பதானல்) சித்தனுடன் வாசல்படியிலிருந்துகொண்டே உரையாடலைத்தொடர்ந்தார். வாசல்படி என்றவுடன் ஒரு விடயத்தை குறிப்பிடவிரும்புகின்றேன்.
சின்னவயதில் எங்கள் வீட்டில் எங்கள் பாட்டி எங்களை வாசல்படியில் அமருவதற்கு அனுமதிக்கமாட்டார். அப்படி அமருவது வீட்டுக்கு தரித்திரம் என்பது அவர்களின் (மூட) நம்பிக்கை.
தமிழறிஞர் ஞானி படைப்பும் பார்வையும் என்ற நூலின் பின்புற அட்டை வித்தியாசமானது. ஞானி அந்த வீட்டுவாசல்படியில் அமர்ந்து வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார். அருகே அவரது நூல்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கினறன. நேர்தியாக வடிவமைக்கப்ட்ட அந்த நூலை தொகுத்திருப்பவர்கள் கு. முத்துக்குமார், க. அறிவன், க. சவகர். ஞானியைப்பற்றிய சிறந்த அறிமுகத்தை இந்த நூல் தருகிறது.
சென்னையிலிருந்து வெளியாகும் தளம் முதலாவது இதழ் சி.சு. செல்லப்பா நூற்றாண்டு சிறப்பிதழாக வந்திருந்தது. சித்தன், ஞானிக்கும் ஒரு பிரதி கொண்டுவந்திருந்தார். சித்தன் அதன் ஆசிரியத்தலையங்கம் உட்பட சில படைப்புகளை அவருக்கு வாசித்துக்காட்டினார். கண்பார்வையற்றபோதிலும் அவரது தேடல் குன்றவில்லை.
நான் கோழித்தூக்கம்போட்டு எழுந்துவந்ததும் எனது படைப்புகள் பற்றி கேட்டார். எனது பறவைகள் நாவலின் கதைச்சுருக்கத்தை கேட்டறிந்தார். சில சிறுகதைகளின் சுருக்கத்தையும் சொன்னேன்.
அவுஸ்திரேலியா திரும்பியதும் எனது நூல்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டார். மாலை ஐந்து மணியாகியது.
“ஒரு நடை நடந்துவிட்டுவருவோமா?” என்று சொல்லிக்கொண்டு எழுந்து எனது கரம்பற்றிக்கொண்டார். சுமார் ஒன்றரை மணிநேரம் அவரது வீட்டுக்கு அயலில் அவர் சொன்ன வீதிப்பக்கமெல்லாம் சென்றோம். அவரது மணக்கண்களில் சந்திகள் தெரிகிறது, கடைகள் அமைந்துள்ள இடம் தெரிகிறது. கலைஞர் கோவையில் செம்மொழி மாநாடு நடத்தியவேளையில் அந்தப்பிரதேசத்தில் அமைத்த பூங்கா தெரிகிறது. நான் அவர் கரம்பற்றியிருந்தேன். எனக்கும் சித்தனுக்கும் அவர்தான் வழிகாட்டினார்.
இந்திய சாகித்திய விருதுகள் பற்றி அவருக்கிருந்த கடுமையான விமரசனங்களை சொன்னார். ஏற்கனவே மதுரையில் தமிழாரய்ச்சி மாநாடு நடந்தபோது இலக்கு அமைப்பினால் அவர் கண்டனங்கள் தெரிவித்தவர். செம்மொழி மாநாட்டையும் அவர் விட்டுவைக்கவில்லை. அதனால் புலனாய்வுப்பிரிவினர் அவரிடத்தில் ஒரு கண்வைத்திருக்கின்றனர். சுவாரஸ்யமாக அந்தத்தகவல்களைச்சொன்னார். எஸ்.வி.ராஜதுரை, ஜி.நாகராஜன், ஜெயமோகன், நுஃமான், பற்றியெல்லாம் மிகுந்த மரியாதையுடன் குறிப்பிட்டார்.
எனக்கு அந்த வீதியுலா முற்றிலும் வித்தியாசமான அனுபவம். வீட்டிலிருந்து, கடற்கரையிலிருந்து, உணவு விடுதியிலிருந்து, ரயில், பஸ் பயணங்களில் இலக்கியம் பேசியிருக்கிறோம்.
ஞானியுடன் அப்படி அவரது கரம்பற்றிக்கொண்டு வீதியோரமாக சுமார் ஒன்றரை மணிநேரம் இலக்கியம்பேசிக்கொண்டு உலாவச்சென்றது எனது வாழ்வில் முதல் அனுபவம்.
ஒரு சந்தியில் சற்று நின்று, “ முருகபூபதி காலையிலிருந்து உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். உங்களிடம் எழுத்தாளர்களுக்கே உரித்தான மேட்டிமைத்தனத்தை காண முடியவில்லையே…” என்றார்.
“நான் இப்பொழுதும் வாசகன்தான் ஐயா” என்றேன்.
அவர் பெருங்கடல். நான் கரையில் நின்று வியக்கின்றேன்.
இரவு சித்தன் என்னை பஸ்நிலையத்தில் இறக்கிவிட்டு விடைபெற்றார். வேலூர் செல்லும் பஸ் வருவதற்கு ஒருமணிநேரம் இருந்தது. ஞானியுடன் கழித்த பொழுதை அசைபோட்டுக்கொண்டிருந்தபோது கவிஞர் அக்கினிபுத்திரன் தனது மனைவியுடன் என்னைத்தேடிக்கொண்டு அங்கு வந்தார். அவருடன் இலக்கிய உரையாடல் தொடர்ந்தது. எனது கடிதங்கள் தொகுப்பில் அக்கினிபுத்திரனின் ஒரு கடிதமும் இடம்பெற்றுள்ளது.
“தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள் ஒவ்வொரு திசையில் இருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து வரும் உங்களைப்போன்றவர்கள் அவர்களை சந்திப்பதாயின் சில நாட்கள் போதாது சில மாதங்கள் வேண்டும்.” என்றார். அக்கினிபுத்திரன்.
“ஜெயமோகனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, அவர் திருவனந்தபுரத்தில் ஒரு திரைப்படவேலையாக இருந்தார். அவரும் நீங்கள் சொன்னதைத்தான் சொன்னார். ஆமோதிக்கவேண்டிய கூற்று. எனினும் சில நிமிடங்களாவது சந்திக்கமுடிந்தவர்களுடன் உரையாடுவது மனதுக்கு நிறைவானது” என்றேன்.
மீண்டும் வரும்போது தங்களுடன் தங்கிச்செல்லும் வகையில் நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்துகொள்ளுமாறு கூறிவிட்டு அக்கினிபுத்திரன் தம்பதியர் விடைபெற்றனர்.
நான் வேலூர் புறப்படும் பஸ்ஸில் ஏறினேன். அப்போது இரவு பதினொரு மணி.
(பயணங்கள் தொடரும்)
