முன்னுரை
கோழிகள் ஒன்றுடன் ஒன்று கொத்தி யார் இந்த கூட்டத்தில் முக்கியமானவர் என்பதை நிலைநாட்டும். அதை பெக்கிங் ஓடர் (Pecking Order) என்போம். ஆனால், உணவில் உப்புக் குறைந்த போது அவை ஒன்றை ஒன்று கொத்திக் காயப்படுத்தும். அதை கனிபலிசம் (Cannibalism) என்போம். இரண்டும் வேறு வேறானவை
தமிழ் இலக்கியப்பரப்பில் நாவல்களுக்கான வெளி கத்தாளைச் சாற்றைத் தடவியது போன்ற தரை. வழுக்கிக் கொண்டு செல்லக் கூடியது. சிறுகதை, கவிதை போன்றவற்றில் அந்தச் சிக்கல் இல்லை. கவிஞர்கள் சிறுகதையாளர் அல்லது கவிதைகள், சிறுகதைகள் என தீர்க்கமான இடம் உள்ளது. எந்தக் கவிதையையும் கவிதை இல்லை அல்லது சிறுகதை இல்லை எனச் சொல்லப்படுவது கிடையாது.
நாவல்களில் இது நாவலே கிடையாது எனத் துணிந்து சொல்லப்படுகிறது. க. நா. சுப்பிரமணியம் நான் அக்காலத்தில் வாசித்த கல்கி, அகிலனது நாவல்களை எல்லாம் நாவல் இல்லை என்று சொன்னார். அதன் பின்பு அதை ஜெயமோகன் போன்றவர்கள் வழி மொழிந்தார்கள். இதே போல் நான் சிறந்தது என நினைத்தவற்றை பலர் இது நாவல் இல்லை எனச் சொன்னார்கள். சமீபத்தில் எஸ். ராமகிருஸ்ணன் வெங்கடேசனின் காவற்கோட்டையைக் குதறினார். இப்படியான வாதப்பிரதிவாதங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இலங்கையைச் சேர்ந்தவர்களிடமும் உள்ளது.
விமல் குழந்தைவேலின் கசகரணம் கிழக்கு மாணத்தில் இருந்து வந்த நாவல். அதை வெளி வந்த சில காலங்களிலே சோபாசக்தி தகவல் தொகுப்பு என்றார். நான் எழுதிய வண்ணாத்திக்குளம், உன்னையே மையல் கொண்டு இரண்டையும் மேலோட்மான எழுத்துகள் என மெல்பேனில் ஒருவர் கூறினார். கனடாவில் ஒரு பெண்மணி அதன் அறிமுக நாளிலே தட்டையான எழுத்துகள் என வர்ணித்தார்.
வண்ணாத்திக்குளத்தை எழுதும்போது காதல் நாவல் எழுதுவதற்கு நான் முயற்சிக்கவில்லை. 80 – 83 வரை இலங்கையில் இருந்த காலத்தை வெளிக் கொண்டுவரவே எழுதினேன். ஆங்கிலத்தில் அந்தப் புத்தகம் வந்த போது திருமதி ராணி எலியேசர் ஒரு ஆயிரம் டாலரைத் தந்து நூறு புத்தகங்களை வாங்கித் தனது நண்பர்களுக்கு தமிழ் – சிங்கள முரண்பாட்டைப் புரிந்து கொள்ள உதவும் என அனுப்பிய போது எழுத்தாளனாக எனது நோக்கம் நிறைவேறியது என மகிழ்ந்தேன். அதேபோல் உன்னையே மயல்கொண்டு இலங்கைப் போரில் மனரீதியாக பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் கதையைச் சொல்லவே எழுதினேன் தமிழ்நெற் 83 கலவரத்தை சித்தரிக்கும் நாவலாக எழுதியது. இதன்மூலம் நான் நினைத்த விடயம் நிறைவேறியது. மேலும் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு பகன என்ற சிங்களப் பத்திரிகையில் தொடராக வந்தது.
இப்படியான நிலையில் தமிழ் இலக்கிய பரப்பில் மீணடும் ஒரு நாவல் எழுத வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
என்ன செய்வது? எனது ஆன்மாவுக்காக எழுதுவது என்று வந்தால் மற்றவர்களைப் பற்றி கவலைப்படமுடியாது.
நான் வேலை செய்த மிருக வைத்தியசாலையின் பின்னணியில் ஒரு நாவலை எழுத வேண்டுமென்ற எனது ஆவலை நிறைவேற்ற கடந்த மூன்று வருடங்களாக முயன்று அசோகனின் வைத்தியசாலை என்ற பெயரில் அதை எழுதினேன். நாவலைப் புத்தகமாக்கி வெளியிட்டு இது நாவலில்லை என்று சொல்லப்படுவதிலும் பார்க்க தற்போது வசதியாக இணையத்தில் பிரசுரிப்பது நல்லது என முடிவு செய்துள்ளேன்.
நான் சார்ந்த மிருக வைத்தியத்துறை தமிழர்களுக்குப் புதியது. அதைவிட இலக்கியத்தில் மருந்துக்கும் கிடையாது. இதற்கு முக்கிய காரணம் விஞ்ஞானம் படித்தவர்கள் தமிழில் எழுதுவது குறைவு. எழுதினாலும் தாங்கள் சார்ந்த துறையைப்பற்றி எழுதுவதில்லை. தமிழ் எழுத்துகள் இலக்கியத்திற்கு அப்பால் சென்று மருத்துவம், பொறியியல் என்று செல்லும்போதுதான் தமிழ் செழிக்கும்.
எனது நாவல் நான் வேலை செய்யும் வைத்தியசாலை என்ற தளத்தில் இருந்தாலும் முற்றிலும் புனைவானது. மெல்மேன் நகரத்தில் நடப்பதால் சில விடயங்கள் உண்மை போல் தெரிந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. இங்கு கதை சொல்லியைத் தவிர மற்றவர்கள் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள். சில விடயங்கள் கலாசார அதிர்வுகளை தரக்கூடியவை. புலம் பெயர்ந்த எமது சூழ்நிலையில் நான் கண்டதை, புரிந்ததைத்தானே எழுதமுடியும்.
அசோகனினின் வைத்தியசாலை எனது தளத்திலும்(noelnadesan.com) பதிவுகளிலும்(pathivugal) வர இருக்கிறது.
