88ம் ஆண்டில் பயோடெக்னோலஜி சிட்னி நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது பாலில் உள்ள புரதத்தை எப்படி அதிகரிப்பதென ஒரு செமினார் நடந்தது – பசுவின் உணவில் சில மாற்றங்களையும் செய்து புரதத்தைக் கூட்டுவது என்பதே. அதில் நான் பங்குபற்றினேன். அப்பொழுது எனது ஜெனரிக் பேராசிரியர் ( Genetic Professor) அதைப் பகிஸ்கரித்ததோடு, எனக்குச் சொன்னார். .
‘பாலில் இருந்து புரதத்தை உருவாக்குவதைவிட பக்டீரியாவின் பரம்பரை அலகை மாற்றி அதிக புரதத்தை இன்னமும் சிலகாலத்தில் பெறலாம்.’
அக்காலத்தில் அவரது கூற்றில் உண்மையைப்புரிந்தாலும் இன்னமும் இன்சுலின் போன்ற மருந்து வகையைவிட பெருமளவில் உணவுகள் பக்ரீயாவினால் உருவாக்க முடியவில்லை. தாவரங்களில் சில மாற்றங்கள் செய்து அதிக அளவு உணவு பெற்றாலும் அவற்றின் நுகர்வுக்கு எதிர்ப்பு அதிகமாகவுள்ளது.
இப்படியான நிலையின் உணவின் புரதத்திற்கு மட்டுமல்ல உணவின் உருசிக்கும் பெரும்பாலான மக்கள் மிருகங்களையும் மீனையும் நம்பியிருக்கிறார்கள். சமுத்திரத்திரங்களில் மீன்கள் குறைந்துவிட்டன. பல நாடுகள் மீன்களை வளர்கிறார்கள். அதேபோல் உணவு மிருகங்களான மாடு, ஆடு, கோழி என்பன தொடர்ச்சியாக வளர்த்து உண்ணப்படுகிறது.
உணவு மிருகங்களை மனிதன் தனது செல்வமாக நினைத்த ஒருகாலத்திலே மதங்கள் உருவாகின பாலைவன மதங்கள் தங்களது சிறந்த மிருகங்களை இறைவனுக்குப்படைத்து தங்கள் நம்பிக்கையை வலியுறுத்தினார்கள். அதுபோல் கிழக்கத்திய மதங்களும் ஆநிரைகள் மற்று ஆடுகளைத் தங்கள் செல்வங்களாகப் பார்த்தார்கள். இந்தச் செல்வமாக பார்த்தலின் விளைவே மிருகங்களைப் பலியிடுதல். முக்கியமாகச் சிறு தெய்வ வழிபாடுகளில் இடம்பெறுகிறது. சிவனுக்கோ, கிருஸ்ணருக்கோ எவரும் மிருகங்களைப் பலியிடுவதில்லை சிறுதெய்வமாக மற்றும் குலதெய்வமாக வந்த தெய்வங்களுக்கு இந்தப்பலியீடு நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து வந்தவை
மிருகங்களைப் பலியிடும் முறையால் இறைச்சி கெட்டுவிடும் என்பதாலேயே மாடுகளை தலையில் அடித்து மயக்கப்படும். பன்றி, செம்மறிகளை மின்சாரத்தாலும் மயக்கிறார்கள். இதனால் இறைச்சி இறுகாது. அதிக காலம் வைத்திருக்க முடியும். இறைச்சி வெட்டுமிடம் சுத்தமாக இருத்தல் வேண்டும். நமது நாடுகளில் கொல்வதற்கு முன்பாக மிருகங்களையும் ,அதன்பின்பாக இறைச்சியையும் வைத்தியரால் பரிசோதிக்கவேண்டும் என்றமுறை பலகாலமாக நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் கோயில்களில் வேள்வியைத் தடுப்பது ஒரு தேவையான விடயமாகும் கோயில்களில் மிருகங்களின் கழுத்தை அறுத்து அதை ஒரு சடங்காக செய்வது பாரம்பரிய விடயம் என்றாலும் பல விடயங்களை நாம் தவிர்த்து வருகிறோம். மேலத்தேய மருத்துவத்தை ஏற்றோம். உடையை அணிகிறோம். வேகமான வாகனங்களில் பயணிக்கிறோம்.
இதை எல்லோரும் செய்யும்போது கிடாயையும் சேவலையும் மட்டும் கோயிலில் வெட்டுவோம் என்பது என்ன நியாயம்?
உயிர்க்கொலை என்ற நியைில் நான் பார்க்கவில்லை. உயிர் என்பது ஒரு கலகிருமிக்கும் மனிதருக்கும் பொதுவானது. இங்கே கொலை மறுத்தல் மைக்கிறஸ்கோப் அற்ற காலத்தில் நியாயமானது. தற்போது அரசாங்கங்களுக்கு மனிதரைக்கொல்ல உரிமை அளித்துள்ளோம்.பயங்கரவாதிகளும் அந்த உரிமையை எடுத்துக்கொண்ட உலகத்தில் தற்பொழுது வாழ்கிறோம்
இங்கு எனது விடயத்தில் மிருகவதையே முக்கியமானது. நிட்சயமாக ஆட்டைதரதர வென இழுப்பதும் அதை பலர் முன்னிலையில் வெட்டுவதும் வதைப்பதற்கு சமனானது. விஞ்ஞானரீதியில் இறைச்சியில் மாற்றம் ஏற்பட்டு கடினமாகவும், அசுத்தமாகவும் இருக்கும். அந்த வகையில் தடைசெய்தது நல்லவிடயம்.
சுத்தமான இறைச்சி வெட்டுமிடங்கள் இலங்கையில் இன்னமும் அதிகமில்லை. அத்துடன் சுத்தமாக இறைச்சி, மீன் விற்றாகப்படுவதுமில்லை. நல்லவேளையாகக் கறியை கொதிக்க வைப்பதாலும் எண்ணெய்யில் பொரிக்க வைப்பதாலும் பிரச்சனை குறைவு. யப்பானியர் கொரியா மாதிரி மீன் உண்டாலோ ஐரோப்பியர் மாதிரி வெளிப்பக்கம் மட்டும் சமைத்து இறைச்சியை உண்பதானால் நாம் கைலாசம் போயிருப்போம்.
