நடேசன்
திருமதி ராணி இலியேஸருடனான சந்திப்பு தற்செயலானது. அவரை சில சந்தர்ப்பங்களில் சந்தித்திருந்தாலும், அந்த நட்பு, நெஞ்சோடு உறவாடியது. என்னை மனமார வாழ்த்தியும் கண்டித்தும் இருப்பவர்கள் ஓரிருவர் மட்டுமே. அதில் முதன்மையானவர் ராணி இலியேசர்
பேராசிரியர் இலியேசரது மரணத்தின் பின்பு துக்கம் விசாரிக்க அவரது வீட்டிற்கு சென்றேன். என்னை அறிமுகப்படுத்தி எனது பெயர் நடேசன் என்றதும், ராணி இலியேசர் எனது வலது கையை பிடித்து ‘பெயரைக்கேள்விப்படடிருக்கிறேன்’ எனச்சொல்லிவிட்டு, ஒரு நிமிடம் கூர்ந்து நோக்கியபடியே வாசலில் நிறுத்தி வைத்திருந்தார்.
அவரது மனதில் எத்தகைய எண்ணங்கள் ஓடியிருக்கலாம் என்பது தெரியாது. மற்றவர்கள் பலர் என்னைப்பற்றி அவரிடம் என்ன சொல்லியிருக்கிறார்களோ? என்பதும் தெரியாது. நீதான் அந்த துரோகப்பத்திரிகை நடத்துபவனோ எனக்கேட்டு என் கன்னத்தில் ஒரு அடி கிடைக்குமா எனவும் யோசித்தேன்.
என் நினைவுகளை வெளிக்காட்டாது சிரித்தபடியே நின்றேன். சிறிது நேரத்தில் உள்ளே வரும்படி அழைத்தார். அன்றிலிருந்து உதயம் பத்திரிகையின் ஒரு பிரதி அவரது வீடடிற்குச் செல்லும். தமிழ் வாசிக்கத்தெரியாத போதிலும் அதில் உள்ள ஆங்கிலப்பகுதியை வாசித்து வந்தார்.
எனது வண்ணாத்திக்குளம் நாவலின் ஆங்கிலப்பதிப்பை வெளியிட்டபோது அந்த நிகழ்விற்கு அழைத்தேன். உடல்நலக்குறைவால் வரமுடியவில்லையென எழுதி 80 அவுஸ்திரேலியன் டொலர் பணமும் வாழ்த்து செய்தியும் அனுப்பினார். நான் அனுப்பிய எனது நூலைப்படித்துவிட்டு தனக்கு அதில் நூறு பிரதிகள் வேண்டும் எனக்கேட்டு ஆயிரம் டொலர்களை அனுப்பினார் .
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னைப்போன்ற அறிமுக எழுத்தாளருக்கு( நான் என்னை எழுத்தாளர் எனச் சொல்வதில்லை) நூறு பிரதிகள் கேட்டு பணம் அனுப்பியது நம்பமுடியாது இருந்தது.
அவர் கேட்டவாறு நூறு பிரதிகளை எடுத்துச்சென்று அவருக்கு கொடுத்தபோது “இந்த புத்தகம் எனக்குப் பிடித்துவிட்டது. தமிழ் இனப்பிரச்சினை மிகவும் நேர்மையாக சொல்லப்படுகிறது” என்றார்.
அவரது மனம் திறந்த பாராட்டு என்னை திக்குமுக்காடவைத்தது.
திட்டினால் சமாளிக்க முடிந்த எனக்கு , அந்தப் பாராட்டு சிறுபிள்ளையின் தலையில் தண்ணீர்போன்று மூச்சடைக்க வைக்கும்.
“அந்தப்பிரதிகளை அவுஸ்திரேலியாவில் தனக்குத்தெரிந்த முக்கிய அரசியல்வாதிகளுக்கும் மற்றும் தனது நண்பர்களுக்கும் அனுப்பப்போகின்றேன் ” என்றார்
புத்தகத்தை, பணம்பெறாது வாங்கி, அதை வாசிக்காமல் அடைகாக்கும் சமூகத்தில் இப்படியொருவரா என நினைத்து வியப்படைந்தேன். பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவரிடம் எனது மனைவியையும் எனது நண்பரான முருகபூபதியையும் அழைத்துச்சென்றேன்.
சென்னையில் இருக்கும் அவரது சிங்கள நண்பியான சாவித்திரி தேவநேசன், எனது புத்தகத்தை படித்து விட்டு அந்தப்புத்தகம் தனது வாழ்க்கைச்சரிதம்போல் இருப்பதாக எழுதியிருந்த கடிதத்தைக் காட்டினார்.
அப்பொழுது நான் சொன்னேன் ‘ சாவித்திரி, இலங்கையின் பிரபல இடதுசாரி அரசியல்வாதியான லெஸ்லி குணவர்தனாவின் தங்கை. அக்காலத்தில் அவர் மணந்த தமிழர் தேவநேசன். அவர் சென்னை கிறீஸ்துவ கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர். பேராசிரியர் இறந்தபின்பு சாவித்திரி தேவநேசன் இந்தியாவிற்கு அகதியாகச் சென்ற எனக்கு தனது தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் வேலை தந்தார் ” என்றேன்.
என்னையும் எனது புத்தகத்தையும் வெகுவாகப்பாராட்டிய ராணி இலியேசர் விடுதலைப்புலிகள் தலைவரைப்பற்றிய எனது விமர்சனத்தையிட்டு எனக்கு கண்டித்து 2000 இல் ஒரு கடிதம் எழுதினார்.
அந்தக்கடிதம் அவர் மீது எனக்கிருந்த மதிப்பைக்கூட்டியது. அவருடன் பேசும்போது புதிதாக சாணை தீட்டிய சவரஅலகு மாதிரியான அவரது புத்திக்கூர்மையை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது.
இலக்கியம், சமூகம், அரசியல் விடயங்களில் அறிவு கலந்து உரையாடும் அவர் தமிழ் இனப்பிரச்சினையில் குழந்தைபோல் பேசுவார்.
அவர் பேசுவதைக்கேட்டுக்கொள்வேன். அவரது பிறந்ததினங்களுக்கு அவர் வீட்டிற்குச் செல்வேன். அந்த நட்புறவு ஒரு தாய்க்கும் தனயனுக்குமிருக்கும் பாசத்துக்கு ஈடானது. நடேசனுடன் அவர் பேசினார் பழகினார் என்பதை அவரைச்சூழ்ந்திருப்பவர்கள் அறிந்தால் அவரை தனிமைப்படுத்துவார்களோ எனவும் யோசித்தேன்.
இறுதியாக அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பேராசிரியர் பற்றிய நுலை வெளியிட்ட அந்த நிகழ்விற்கு சென்று அவரோடு பேசியபோது முகங்களை மறக்கத்தொடங்கிவிட்டார். பேச்சும் குறைந்துவிட்டது.
ஆறு கிழமைகள் வெளிநாட்டுக்குப்போயிருந்த நான் அவரது இறுதிசடங்கில் கலந்துகொள்ளவேண்டுமென்ற நியதியிருந்திருக்கவேண்டும். முதல்நாள் மெல்பன் வந்து சேர்ந்தேன். அது ஆறுதலாக இருந்தது.
பலரது மரணங்களில் மரணித்தவர்களைப்பற்றி அவர்களைச் சார்ந்தவர்கள் புகழ்வார்கள். ஆனால் ராணி இலியேசரது இறுதி நிகழ்வில் பலரும் பேசிய வார்த்தைகள் நிதர்சனமான உண்மைகள் என உணர்ந்தேன். அவருடன் பல வருடங்கள் பழகியவர்கள் நிச்சயமாக அதிர்ஸ்டசாலிகள் என நினைக்கவைத்தது அந்த இறுதி நிகழ்வு.
அவரது கணவர் பேராசிரியர் இலியேசரை ஒரு தடவை மட்டுமே தொலைவிலிருந்து பார்த்திருக்கிறேன். ஆனால், ராணி இலியேசருடனான சந்திப்பும் அவருடனான உரையாடலும் பல காலம் எனது மனதில் நிலைத்திருக்கும்.
எமது வாழ்நாளில் சந்தித்த ஒரு சிலரை மட்டுமே மனதில் பத்திரப்படுத்த விரும்புகிறோம் அல்லவா.
—0—
