மகிழ் வெளியீடு, கிளிநொச்சி, விலங்கை
பக்கம் 402 விலை ரூ.300
ஆஸ்திரேலியாவில் மிருக வைத்தியசாலை ஒன்றைப் பின்புலமாகக் கொண்டு,அங்கு மருத்துவராக பணியில் சேரும் புலம்பெயர்ந்த தமிழன் சிவா சுந்தரத்தின் நோக்கில் விரியும் இந்நாவலில்,மிருக சிகிச்சையின் வரலாறு, மிருகத்திற்கும் மனிதர்களுக்குமான உறவு, அம்மருத்துவமனை நிர்வாகம்,அதன் உள்அரசியல் எனப் பலவும் பேசப்படுகிறது.சிவாவின் எண்ணங்களை மறுத்து உரையாடும் ‘கொலிங்வுட்’ என்னும் பேசும் பூனை,அவனுடைய மனசாட்சியின் தலைகீழ் வடிவமாக நாவல் முழுவதும் வருகிறது.
இதில் ஈழப்பிரச்சனை குறித்து ஓரிடத்திலும் நேரடியாக எதுவும் சுட்டப்பெறாது போயினும் இந்நாவலின் இறைச்சிப் பொருளால் தொக்கி நிற்பது அது சார்ந்த விசாரமே.நிறம்,மொழி,மதம்,சாதி மற்றும் இனவேற்றுமை எவ்வாறு அடிப்படை நாகரீகமற்ற வெறுப்பாக உருக்கொள்கிறது? உணர்ச்சிவேகம் அதை எவ்விதமாகமெல்லாம் ஊட்டிவளர்கிறது?அவ்வெறுப்பினால் ஏற்படும் துவேசமும் வன்முறையும் எவ்வாறாகவெல்லாம் சரியெய்யவேயிலாத பிளவை,பேரழிவை உருவாக்குகிறது என்பனவற்றையெல்லாம் ஒரு பன்மையக் கலாச்சாரப் பார்வையில் நின்றபடி அலசும் இந்நாவல் சகிப்புத்தன்மையை மற்றவையின் இருப்பிற்கான நியாயத்தை,பரந்துபட்ட நீதியுணர்வை மனிதர்களின் அமைதியான வாழ்விற்கான திசைவழியாக சுட்டி அமைகிறது.தர்க்க ஒழுங்கிற்குள் எளிதில் அடங்காத ஒரு சிக்கலான பிரச்சனையை அறிவார்த்தமானதொரு தளத்தில் நின்று விவாதிக்கும் நோக்கில் எழுதப்பட்ட இந்த நாவல் இதன் விவரணை மொழியினாலும் அதனூடாக வெளிப்படும் அபரிமிதமான நகையுணர்வாலும் மிகச்சரளமான அதே சமயத்தில் நிறைவானதொரு வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.அவ்விதத்தில் அ.முத்துலிங்கம்,உமா வரதராஜன்,ஷோபாசக்தி வரிசையில் வைத்து நோக்கப்பட வேண்டியவராகிறார் நடேசன்.
கத்தியும் ரத்தமுமின்றி ஒரு சத்திரச்சிகிச்சை
நன்றி கபாடபுரம்
