நடேசன்
வட இலங்கையின் தீவுகளில் ஒன்றான நயினாதீவிற்கு புத்தபெருமான் வந்துபோனார் என இலங்கையில் பவுத்த மதத்தினர் நம்புகிறார்கள். அதேபோல் மணிமேகலை தனது அட்சயபாத்திரத்துடன் தென் திசையில் முப்பது காதம் வந்தடைந்த மணிபல்லம் நயினாதீவு எனத்தமிழர்கள் நம்புகிறோம். அக்காலத்தில் இவர்கள் வந்துபோனதற்கான வரலாற்றை நயினாதீவு மக்களாகிய நாம் கொண்டாடுகிறோம்.
இது இவ்விதமிருக்க, தற்காலத்தின் ஈழத்து முதன்மை நாவலாசிரியரான நண்பர் தேவகாந்தன் தனது கனவுச்சிறை என்ற ஆயிரம் பக்கங்கள் கொண்ட நவீனகாவியத்தில் நயினாதீவின் 1980-90 காலங்களில் அங்கு வாழ்ந்த மக்களையும் பகைப்புலத்தையும் எழுதி நவீன இலக்கியத்தில் மீள்பதிவு செய்திருக்கிறார்.
அதை எத்தனை நயினாதீவு மக்கள் வாசித்தார்களோ? நயினாதீவின் ஒழுங்கைகள், கோயில்கள், வயல்வெளிகள், சங்குகள் விற்கும் கடைகள் என எல்லாவற்றையும் பக்கங்களில் பரவும் வர்ணங்களாக வரைந்திருக்கிறார். அவரது புத்தகத்திற்கு நான் எழுதிய திறனாய்வு நான் நயினாதீவின் உறவிற்கு செய்த கடமையாக நினைக்கிறேன்.
கனவுச்சிறையை எழுதிய தேவகாந்தன் நயினாதீவு மக்கள் அதிகமாக வாழும் கனடாவில் இருக்கிறார். அவரது ஊரைக்கேட்டபோது சாவகச்சேரி என்றார். குறைந்தபட்சம் அவரது கனவுச்சிறையைப்படித்து நாம் கவுரவிக்கப்படவேண்டியவர்.
நாமெல்லாம் இறந்துவிட்டால் எம்முடன் நயினாதீவுடனான சொந்தமும் போய்விடும். ஆனால் தமிழ் இலக்கியத்தைப் படித்தவர்கள் நயினாதீவை நினைவு கூர்வார்கள். இதைச் செய்த தேவகாந்தன் நமது சீத்தலைச் சாத்தனார்.
இப்படியான நயினாதீவுக்கு திருவிழாக்காலத்தில் நான் அங்கு போனபோது, நயினாதீவு மட்டும் புவியில் இருந்து விலகி சூரியனுக்கு அருகில் குளிர்காயப் போய்விட்டது போன்று வெப்பம் உடலை எரித்தது.
புத்தவிகாரை அருகே உள்ள துறைமுகத்தில் இறங்கிய போது விகாரையை சுற்றியிருந்த இடம் தென்னை மரங்களும் மற்றைய மரங்களும் வளர்ந்து சோலையாகத் தெரிந்தது. அதேபோல் நாகபூசணி அம்மாள் கோவில் மலைவேப்ப மரங்கள் சூழ்ந்து மிகவும் குளிர்மையாக இருந்தது.
இடைப்பட்ட பிதேசம் மட்டும் தணலாக கொதித்தது. காரணம் கேட்டபோது மின்சாரம் கொடுப்பதற்காக மரங்களை எல்லாம் வெட்டிவிட்டார்கள் எனப் பதில் வந்தது. ஊரின் உள்ளே சென்றபோதும் அதேமாதிரியான மரங்களற்ற பிரதேசமாகத் தெரிந்தது. தண்ணீர் பிரச்சினை தெரிந்தது. பிளாஸ்ரிக் போத்தல்கள் அங்கும் பவனி வந்தன.
நான் படித்தகாலத்தில் இரண்டு பெரிய குளங்களில் தண்ணீர் நிரம்பி வயல்களில் கணுக்கால்மேல் தண்ணீர் தெரியும். குளத்திலிருந்து விலாங்கு மீன்கள் பசியுடன் வாற்பேத்தைகளைஇரையாக்க ஓடித்திரியும்.1966 இல் அங்குதான் முதல் முதலாக விலாங்கு மீனைக்கண்டேன். தென்னை மரங்கள் ஒவ்வொரு வீட்டிலும் அடர்த்தியாக இருக்கும். பூவரசு மற்றும் கிளுவை வேலிகளில் இருக்கும். இடையிடையே வேம்புகள் ஆலமரங்கள் குடை விரித்திருக்கும்
இப்பொழுது நயினாதீவின் பெரும்பகுதியைச்சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் உள்ளதால் கோவில் மட்டும் இந்திய சிற்பிகளின் கைவண்ணத்தில் ஏ பி நாகராசனின் படத்தில் வரும் கோவில்களின் தோற்றத்தைத் தருகிறது. கோவில் உள்ளும் வெளியும் மிகவும் சுத்தமாக இருக்கிறது . மணிமேகலையின் அட்சயபாத்திரமான அமுதசுரபியைத் தழுவி வருபவர்களுக்கு உணவு அன்னதானமாக அளிக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமான பணம் கோவிலில் இருக்கிறது. அதைச் செலவழிக்க வழி தெரியவில்லை என்ற நினைப்பு எனக்கு தவிர்க்க முடியாது வந்தது.
நான், எனது பெற்றோர் இருவரும் படித்த மகாவித்தியாலயம் தீவுப் பகுதிகளில் பிரபலமானது. அந்த பழம் பெரும் பாடசாலைக் கட்டிடங்கள் பல தலைமுறையாக வர்ணமடிக்கப்படாது சோபையிழந்திருப்பது மட்டுமல்ல, பல கட்டிடங்கள் பிள்ளைகள் அருகில் போவதற்கு அஞ்சுமளவு இடிபாடுகளுடன் தெரிந்தது.
நான் மட்டுமல்ல நயினாதீவிலிருந்து வெளியே சென்று பணம் உழைத்து தற்பொழுது அம்மனுக்குச் செலவிடுபவர்கள் எல்லாம் படித்தது இந்த மகாவித்தியாலயம்தானே?
தெய்வ நம்பிக்கை உள்ளவர்களிடம் ஒரு கேள்வி: ஏன் அம்மனின் ஒரு தோற்றமான லட்சுமியிடம் மேலும் பொருள்கேட்டு லஞ்சம் கொடுக்கும் நீங்கள் இதுவரையும் மனிதராக வாழ வழிவகுத்தது தெய்வம் சரஸ்வதிதானே? அவள் மட்டும் ஏன் இடிபாடுகளிடம் வாழவேண்டும்? அவளை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? போர்க்காலத்தில் உங்கள் இனம் காக்கும் எண்ணத்தில் வன்னித்துர்க்கைக்கு கோவில் நிதியில் இருந்து கொடுத்தீர்களே? அப்படி பாடசாலைக்கு, அள்ளவேண்டாம். ஏன் கிள்ளியாவது கொடுக்கக்கூடாது?
தற்போது பாடசாலைகளில் படிப்பது யாரோ ஏழைக்குழந்தைகள்தானே என்பது காரணமா?
யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளின் பரிதாப நிலை பற்றி பேசியபோது அரசாங்கத்தின் பணம் திருத்த வேலைகளுக்கு வந்திருப்பதாகக் கூறினார்கள். இந்தவிடயத்தில் எழுவைதீவில் கோவிலுக்குச் செலவழித்தாலும் பாடசாலைக்குப் பலர் உதவுவதை என்னால் பார்க்க முடிந்தது. இவ்வளவிற்கும் நயினாதீவில் பிறந்தவர்கள் பல மடங்கு படித்தவர்கள் பணவசதியானவர்கள்.
கல்வி தொடர்ச்சியாக எமது சமூகத்தின் மனத்தைச் சுத்தப்படுத்த தவறியுள்ளது எவ்வளவு முரண்ணகையான விடயம்?
நாளைக்கு நயினாதீவு பாலைவனமாகினால் குளிர்சாதன வசதி செய்ய யோசிப்பார்களா என எனக்குக் கேள்வி எழுந்தது. வெட்டிய மரங்களை மட்டுமல்ல புதிதாக ஊரில் மரங்களை நட்டு சிறிது காலம் பராமரிக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அல்லது அதற்கு சிலர் முயற்சிக்கவேண்டும். எழுத்தில் கொஞ்சம் வாசிப்பவர்களுக்கு உறைப்பதற்காகக் காரம் வைத்தேன்.என்னில் ஆயிரம் பேர் ஆத்திரப்பட்டாலும் பரவாயில்லை இரண்டொருவர் விடயத்தைப்
புரிந்துகொண்டால் போதும்.
