கரையில் மோதும் நினைவலைகள்
ஒருவர் நமக்கு நல்லவராகவும் மற்றவருக்கு வில்லனாகவும்இருப்பதை பல தடவை பார்த்துள்ளேன்.
2011ல் இலங்கையில் கட்டுநாயக்கா ஏர்போட்டால் வந்து இரவு ஒரு மணியளவில் நீர்கொழும்பிலுள்ள ஒரு கடற்கரையோர ஹோட்டலில் படுத்தேன். அதிகாலை நேரம். கடல் அலைகள் கரைமீது மோதும் ஓசை சங்கீதமாக இருந்தது. ஆனாலும் அவுஸ்திரேலிய நேரத்திற்குப் பழக்கமான உடல் என்பதால் கண் விழித்துவிட்டேன். ஆனால் உடல் அயர்வாக இருந்தது.
எனது மோபைல் சத்தமிட்டது.
நான் இலங்கைக்கு வந்த காலத்திலே எனது மகனோடு எனது மனைவியும் வருங்கால மருமகளின் குடும்பமும் திருமணத்திற்காக நகை, சேலை வகையறாக்களை எடுப்பதற்காகச் சென்னைக்குச் சென்றிருந்தார்கள்.
அப்பொழுது எனது மகன் தொலைப்பேசியில் ‘சிறி அங்கிளது பாஸ்போட்டடை வாங்கி சென்னை ஏர்போட்டில் வைத்துவிட்டார்கள்’ என்றான்.
‘ஏன்?’
‘அவரது பெயரில் தேடப்படும் ஒருவர் இருப்பதாக நினைக்கிறார்கள்’
மனைவி என்னிடம் பேசினார். அப்பொழுது சொன்னேன்.
‘இலங்கையில் ஏதாவது நடந்தால் தெரிந்தவர்கள் யாரையாவது பிடித்து ஏதாவது பார்க்க முடியும். இந்தியாவில் ஒன்றும் செய்யமுடியாது. பாவம் சிறி. விசாரித்து விட்டுக் கொடுப்பார்கள் எனநினைக்கிறேன்” என்றேன்.
அப்பொழுது என் மனைவி ‘உங்களுக்குத் தெரிந்த அந்த மிருகவைத்தியர் அவுஸ்திரேலியாவில் இருக்கிறாரே, அவரது பெயர் —–
‘எனக்குத்தெரிந்தவரையில் அவராகத்தான் இருக்குமென நினைக்கிறேன்.அவரது தகப்பனது பெயரும் சிறிக்கு- சரியாகப் பொருந்துகிறது”.
‘அடப்பாவமே, யாரோ ஒருவர் என எண்ணி எந்த அரசியலிலும் தலையை வைக்காத ஒருவரைப்பிடித்து, இப்படி உலைக்கிறார்களே! குறைந்த பட்சம் உண்மையான ஆளின் படத்தையாவது வைத்திருக்கலாமே? இப்படித்தான் இலங்கையில் இருந்துபோன ஹெஸ்புல்லா என்றொருவரை அமெரிக்க இமிக்கிரேசன், இவர் லெபனானைச் சேர்ந்த தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்த்தவராக இருக்கலாம்! என்ற ஐமிச்சத்தில், ஐந்து மணி நேரம் விசாரித்தார்களாம்’ எனச் சொல்லிவிட்டு வைத்தேன்
நான் 87ல் அவுஸ்திரேலியா வந்ததும் ஒருமாத காலத்தில் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதைப் பலருடன் பேசினேன். நான் காத்திருப்பதுபோல் நாட்கள் காத்திராதல்லவா?
என் மகளின் மூன்றாவது பிறந்ததினம் வந்தது. மகனுக்கு அடுத்தமாதம் ஐந்து வயதாக இருக்கும். எனக்கு முன்பாக அவுஸ்திரேலியா வந்த மிருகவைத்தியர் தர்மாவதி திருமணம் முடித்து சிட்னியில் இருக்கிறார். அவரும் அக்காலத்தில் பரீட்சைக்காக படித்துக்கொண்டிருந்தாலும்அவுஸ்திரேலியால் மிருக வைத்திய பரீட்சையை எடுத்து பாஸ் பண்ணுவது மிகவும் கஸ்டமான விடயம் எனப்பயமுறுத்தினார்.
இதேவேளை,மோகன் மாலா ஆகிய இருவரும் விலங்கு மருத்துவர்கள்தான். இவர்கள் விலங்கு மருத்துவத்துறையை விட்டு விஞ்ஞானத்தில் மேல்படிப்பு படித்து, விஞ்ஞானகூடங்களில் ஆராய்ச்சியாளர்களாக வேலை செய்கிறார்கள். எல்லோரையும் விட அவுஸ்திரேலியாவில் விலங்கு மருத்துவ பரீட்சையை வில்லங்கமானது என என்னைப் பயப்பிடுத்தியவர். என்மண்டைக்கயிறு, மோகன் என்றே சொல்லவேண்டும்.( இவர் என்னுடைய மனைவியின் சகோதரர். இவர்களை ஊரில், “மண்டைக்கயிறு” என்பார்கள்.)
என்னைப் பொறுத்தவரை எனது மிருக வைத்தியம் அவ்வளவு இலகுவாகக் கிடைத்தது அல்ல. அதை விட்டுசெல்வதற்கு. நாலு வருடப்படிப்பு மட்டுமல்ல அதற்கு மேல் பல சோதனைகளைத் தாண்டிவந்தேன்.
பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குப் புகுந்தது இலகுவானதல்ல.
1974ம்ஆண்டு இலங்கையில் தரப்படுத்தலும் மாவட்டரீதியாக குறிப்பிட்ட மாணவர்களை எடுத்தலும் என்ற முறை அமுலாகிய வருடம். எனக்கு முதல் வருடத்தில் தரப்படுத்தல் மட்டுமே இருந்தது. அடுத்த வருடத்தில் தரப்படுத்தலை நீக்கி மாவட்ட முறையை மட்டும் வைத்திருந்தார்கள். எனது வருடத்தில் எனது வகுப்பில் இருந்த 20 பேரில் நான் ஒருவனே பல்கலைக்கழகம் சென்றேன். யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியில் இருந்து வழமையாக 50-60 பேர் எனப் பல்கலைக்கழகத்திற்கு செல்வார்கள். அந்த வருடத்தில்5 பேர்மட்டும் சென்றது சோக வரலாறு.
1974ன் கடைசி என நினைக்கிறேன். நடுப்பகல் யாழ்ப்பாணத்து வெயில் வெளியே தணலாக கொதித்தது. உள்ளே நுவரெலியாவின் குளிரை நடுங்கியபடி உணர்ந்தேன். நீங்கள் நினைப்பதுபோல் ஏர்கண்டிசன் எல்லாம் இல்லை. பயம்தான்.
இந்துக்கல்லூரி அதிபரின் அறையின் உள்ளே நின்றேன். ஐந்து மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல இருப்பதால் அதிபர் சபாலிங்கத்தின் அறையில் அவரது மேசையின் முன்பாக ஐந்து நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அந்த நாற்காலிகளில் நாங்கள் அமர்ந்து பல்கலைக்கழகம் செல்லத்தேவையான பத்திரங்களை நிரப்ப அதிபர் அதில் கையெழுத்திடவேண்டும். மற்ற நான்கு பேர்களில் இருவர் பொறியியலுக்கும் இருவர் கலைப்பீடத்திற்கும் செல்பவர்கள். மற்றவர்கள் அவரவர் கதிரையில் கலாதியாக இருந்தார்கள். பல்கலைக்கழகம் போகும் சந்தோசத்தில் விறைத்த உடலுடன் நிமிர்ந்தபடி இருந்தார்கள். போதாக்குறைக்கு எனது நாற்காலி அதிபரின் வலது புறத்தில் கை எட்டும் தூரத்தில்.
நான் மட்டும் தலை கவிழ்ந்தபடி குற்றம்செய்துவிட்டு நிற்கும் மாணவனாக நின்றேன்.
வெள்ளை நாசனாலும் வேட்டியும் அணிந்த அவரது தலையிலிருந்த சில அங்கொன்றும் இங்கொன்றுமாக எட்டிப்பார்த்த தலைமயிரை அழுத்திவிட்டு தனது மூக்குக் கண்ணாடியை வலது கையில் எடுத்துக்கொண்டு சபாலிங்கம் என்னை நோக்கினார். நான் அவரை நோக்கினேன். இருவரும் சில கணங்கள் பார்த்தபின்பு என்னைப் பார்த்து ‘சிட் டவுன்” என்றார். கண்ணாடியை மீண்டும் அணிந்தபடி அவர் தனது கதிரையில் அமர்ந்தார். அவரது கைக்கெட்டும் தூரத்தில் நானும் கதிரையின் முனையில் அமர்ந்தேன்
மெதுவாகப் பத்திரங்களை நிரப்பியதும் மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு தனது கையொப்பத்தை வைத்தார்.
இவன் என்னிடமிருந்து தப்புகிறான். எப்படியும் நன்னடத்தை சேட்டிபிக்கற் வாங்க வருவான். அப்போது பார்த்துக்கொள்ளமுடியும் என நினைத்தது பிழைத்துவிட்டதே?அப்பப்ப விடயத்தைக் கவனித்திருக்கவேண்டும். இவனெல்லாம் பல்கலைக்கழகம் செல்வான் என நினைக்கவில்லையே? எனஅவரது மனத்தில் எண்ணங்கள் ஓடியிருக்கலாம்.
படிவங்களை நிரப்பிக் கையெழுத்திடுவதற்கு ஐந்து நிமிடங்கள் எடுத்திருக்கும். ஆனால் அது எனக்கு ஐந்து யுகங்களாக இருந்தது.
ஒருதரமா அல்லது இரண்டுதரமா அந்த மனுசனிடம் பிரச்சனைப்பட்டது. மூன்று முறைகள் அவரோடு உரஞ்ச வேண்டிவந்தது.அவை எல்லாம் தற்செயலாக நடந்தவை.
பத்தாம் வகுப்பில் படித்த காலத்தில் சபாலிங்கம் எங்களுக்கு அதிபராக நியமிக்கப்பட்டார். அவர் வரும்போது அவர் யாழ் மத்திய கல்லூரியை கலக்கி எடுத்தவர் என்ற மெய்க்கீர்த்தியும் காற்றோடு வண்ணார்பண்ணைக்கு வந்தது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் எல்லோரும்போல் கணிதப் பிரிவிற்கு ஒரு இஞ்ஜினியராக வரவேண்டும் எனத் தள்ளப்பட்டேன். ஆனால் படித்தபோது கணிதம் எனது மூளையில் ஏறாதபடியால் இரண்டாவது தரமாக பத்தாம் வகுப்பில் மீண்டும் உயிரியல் விஞ்ஞானம் படித்த காலம். பாடசாலைக்கு ஒழுங்காகப் போவதில்லை. ஓட்டுமடம் பகுதியில் ஒரு ரியூசன் வகுப்பை முடித்துக்கொண்டு நல்லூரை நோக்கி அரசடி வீதியால் மெதுவான மாலைக் கருக்கலில் பல நண்பர்களோடு சைக்கிளில் வந்தேன். அதிபர் சபாலிங்கத்தின் கற்பகம் என்ற வீடு வந்ததும் என்னோடு வந்தவர்கள் தங்களை மறந்து ‘அடோய் சபாலிங்கம்” எனக் கத்திவிட்டு சைக்கிளில் வேகமாக ஓடினார்கள். கத்தியவர்கள் உண்மையில் யாழ் மத்திய கல்லூரி மாணவர்கள். எனக்கு வேறு வழியில்லை. நானும் அவர்களுடன் ஓடினேன் நல்லூர் கோவிலை நோக்கி.
அதிபர் சபாலிங்கத்தின் தம்பி கனகலிங்கம். அவரும் அக்கால பரமேஸ்வராக்கல்லூரி அதிபர். அதிபர் சபாலிங்கத்தின் மூன்று மகன்களும் அந்த தெருவில் இரண்டு கார்களில் தொடர்ந்து வந்தார்கள். இதையறியாது நாங்கள் அரசடி ஜனசக்தி சமூகநிலயத்தின் முன்பாக ஓய்வெடுத்து எங்கள் வீரத்தைப் பெருமையுடன் பேசிக் கொண்டிருந்தோம். இரண்டு கார்கள் ஒன்றின் பின் ஒன்றாக வந்து அந்தப் பிரதேசத்தை அதிரவைத்து நடுவீதியில் திடீரென நிறுத்தினார்கள்.
அது ஒரு வெள்ளிக்கிழமை. இரண்டு பக்கத்தாலும் நல்லூர்க்கோயிலுக்கு போய்க்கொண்டிருந்த பக்தர்கள் காரின் பிரேக்கில் அதிர்ந்து பாதையில் இருந்து விலகிப் போய்விட்டார்கள்.முன்னால் வந்த காரிலிருந்து இறங்கியவர்களில் அதிபர் சபாலிங்கம் என்னைப் பாய்ந்து பிடித்து சேட்டில் உலுப்பியபடி தனது காரில் ஏறு எனக் கேட்டபோது எனது சைக்கிளை விட்டு நான் வரமுடியாது என மறுத்தேன்.அக்காலத்தில் எனது பெரிய சொத்து அந்த பிஎஸ்ஏ சைக்கிளே.
அவரது கை எனது சேட்டில் இருந்தபோது நான் பின்பகுதியில் சாய்ந்தபடி வைத்திருந்த எனது சைக்கிள் நிலத்தில் விழுந்தது.நானும் நிலத்தில் விழுந்தேன்.
அரசடி எனப்படும் அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு
என்னைத் தெரியும். நான் அங்குள்ள ஜனசக்தி வாசிகசாலைக்கு வரும் சஞ்கைகளான குமரனையும் மல்லிகையையும் வாசிப்பதற்குப் பாடசாலை முடிந்து அங்கு நிற்பதால் அவர்களுக்கு என்னை அறிமுகம். ஆனால் அதிபரைத் தெரியாது.
காரின் சத்தத்தால் வீட்டைவிட்டு வெளியே வந்தவர்களில் ஒருவர் ‘ஏன் தம்பியைத் தாக்குகிறீர்கள்?’ என்றபோது அதிபரின் மகன் அவரைத் தாக்கியதும் சுற்றி நின்றவர்கள் அதிபரின் மகனைத் தாக்க அவர் “சித்தப்பா சித்தப்பா” என்றார். அங்கு அப்பொழுது சிறிய வளைகுடாப் போர் நடந்தது.
சுதாரித்துக்கொண்டு எழுந்து அந்த கிளைமாக்ஸ் காட்சியை நான் பார்த்துக்கொண்டிருந்தபோது அதிபர் சபாலிங்கம் ‘உன்னைப் பாடசாலையில் பார்த்துக்கொள்கிறேன்’ எனச் சொல்லி சேட்டில் இருந்து கையை எடுத்து பின்வாங்கிச் சென்று காரில் ஏறினார். சண்டையைப் பார்த்த பக்தர்கள் வந்து மத்தியஸ்தம் செய்து அதிபரையும் குடும்பத்தினரையும் அமைதியாக காரில் போகும்படி செய்தார்கள்.அடுத்தநாள் பாடசாலைக்குச் சென்றபோது எனக்கு மாணவர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு, ஹாஸ்டலின் முன்பாக நின்ற தேக்கு மரத்திற்குக் கீழ் நடந்தது. அந்த வரவேற்பு எனது பயத்தை மேலும் கூட்டியது. அன்றிலிருந்து நான் நடுங்கியபடி பூனையைக் கண்டால் பொந்தில் பதுங்கும் எலிபோல உயிர் வாழ்ந்தேன்.
இரண்டு வருடங்கள் ஏதோ அதிஸ்டத்தால் நான் எந்தப் பிரச்சனையிலும் மாட்டவில்லை.
12 வகுப்பு பரீட்சை முடிந்தபின்பு நான் தலைமயிரை கழுத்துவரை வளர்த்து வைத்திருந்தேன். பெல்பொட்டம் காற்சட்டை அணிவேன்.காதலியும் இருந்ததால் அக்காலத்து பாஷன்படி இருந்தேன்.
ஒரு நாள் எனது பின்பாக வந்த அதிபர் சபாலிங்கம் கையில் பிடித்து என்னைத் தனது அறைக்கு அழைத்துச் சென்றார். இனி நான் போஸ்மோட்டத்திற்கே வெளியில் வருவேன் என நினைத்தபடி ஒடுங்கிய என்னிடம் முகக்கண்ணாடி ஒன்றைத் தந்து என்னைப் பார்க்கச் சொல்லி ‘உன்னைப் பார் பக்கிங்காம் பலஸ் கூர்க்கா மாதிரி இருக்கிறாய். இது உனக்கு நல்லா இல்லை. உன்னைப் பார்க்க சகிக்கவில்லை. தலைமயிர் வெட்டாவிடில் இனிமேல் பாடசாலை வரவேண்டாம்’ என மிகவும் பொறுமையாக கூறினார்.
மயிரை வெட்டுவது பற்றிய ஆலோசனையைக் கேட்டபோது என்னுடைய நண்பர்கள் அவருக்கு மயிரின் அருமை தெரியாதென நக்கலாகச் சொன்னார்கள். நானும் ஏற்கனவே பரீட்சை எழுதிவிட்டேன். பரீட்சையில் தேர்ச்சியடைவேன் என என்னில் நம்பிக்கையிருந்தது என்பதால் தலைமயிரை வெட்டவில்லை. பாடசாலைக்கு வருவது லைப்பிரியில் புத்தகம் எடுப்பதற்கு மட்டும்தான். அவரிடம் பிடிபடாமல் சிலகாலம் லைபிரரிக்குப் போய் வந்தேன்.
நல்ல காலம் தொடர்ந்து வராது. காற்று மாறும் என எங்களுரில் பாய்மரப் படகு ஓடுபவர்கள் பேசுவார்கள்.
யாழ் இந்துக் கல்லுரியின் அருகே காங்கேசன்துறைவீதியில் மாணவர்கள் மானிப்பாய் பக்கமிருந்து “டிபிள் டெக்கர் பஸ்”சிலிருந்து இறங்கும்போது வாசலில் நிற்கும் மாணவிகள் இறங்கி அவர்களுக்கு வழிவிடுவார்கள். முக்கியமாக கொக்குவில் பக்கத்தில் ஏறிய வேம்படி பெண்கள் அதில் இருப்பார்கள். அவர்களுக்கு விசில் அடிக்க அக்காலத்தில் ஒரு மாணவர்கள் கூட்டம் அந்த தரிப்பில் நிற்கும். இந்த நாளாந்த நடவடிக்கையை அவதானித்த அந்த வழியால் காரில் செல்லும் நீதிபதி இதை அதிபருக்குச் சொல்லிவிட்டார்.
இப்படியான மாணவர் கூட்டம் மீண்டும் பாடசாலைக்கு வரும். அவர்களைக் கோழி அமத்துவதுபோல் அமத்துவதற்காக அதிபர் விளையாயாட்டு மைதானத்தில் உள்ள மதிலின் கீழ் பதுங்கி நின்றார். அந்த மாணவர்கள் அன்று பாடசாலைக்கு வராமலே புதிதாகத் திரையிட்ட படம் பார்க்க சென்றார்கள். அப்பொழுது அவர்களோடு நின்ற நான் மட்டும் லைபிரரியில் எடுத்த புத்தகத்தைக் கொடுக்க மீண்டும் உள்ளே வந்தேன். புலி பிடிக்கப்போன அதிபருக்கு எலியாக என்னைக் கண்டதால் விளையாட்டு மைதானத்தில் ஒளித்து நின்றவர் மதில் அருகே நின்று கைதட்டி கூப்பிட்டபோது நான் எனக்கில்லை என்பதுபோல் உள்ளே சென்றேன்.
அவர் குத்துச்சண்டை பழகியவர் என்ற கதை எமது கல்லூரியில் ஏற்கனவே உலாவியது. அது பொய்யாகவிருக்கலாம். ஆனால் அதைப் பரிசோதிக்க எனக்கு அன்று துணிவில்லை.
நான் காது கேட்காததுபோல் வேகமாக உள்ளே சென்றேன். அவர் ஓட்டமும் நடையுமாக வேட்டியின் கரையை இடது கையில் உயர்த்தப் பிடித்தபடி செருப்பு சரசரக்க தோளை முன்னேக்கி தள்ளியபடி என்னைப் பின்தொடர்ந்தார். நான் அவருக்குப் பிடிபடாமல் பாடசாலையின் உள்ளே வகுப்புகளின் கொரிடோரில் பிரேயர் ஹோலை நோக்கி வேகமாகச் சென்றேன். இருவருக்குமிடையே சிறிது தூரமிருந்தது. என்னைப் பிடிக்கும்படி அக்காலத்து மாணவர் தலைவரான இராஜகுலசிங்கத்திடம்(பாபு) உத்தரவிட்டபோது அவன் என்னைப் பிடிக்க நான் அவனிடமிருந்து விலக முயற்சித்து பிணைந்தபோது அதிபர் வந்து என்னைப் பிடித்துவிட்டார்.
‘உன்னைப்பாடசாலைக்கு வரவேண்டாம் என்று சொன்னேன். வெளியே போ’ என ஆங்கிலத்தில் சொல்லிய பின்புதான் அடிப்பதற்கு நினைத்துக் கையை ஓங்கினார்.அவரது வார்த்தைக்கும் செயலுக்கும் இடையே இருந்த இடைவெளியில் அவரது முதற் கட்டளையை சிரமேற்கொண்டு அந்த கொரிடேரில் இருந்து கீழே பாய்தேன். அவரது விசுக்கிய கையால் விலகிய காற்று எனது முதுகில் பட்டது. கிட்டத்தட்ட அரை மீட்டர் உயரமான கொரிடோரில் அவரால் உடன் இறங்க முடியவில்லை. அப்படியே பாடசாலையைக்கு வெளியே ஓடிவந்துவிட்டேன். அதன் பிறகு 8-9 மாதங்களின் பின்பாக இப்பொழுது பல்கலைக்கழகப் பத்திரங்களை நிரப்புவதற்காக நிற்கிறேன்.
அக்காலத்தில் எங்களுக்கு அவரே இலங்கை இராணுவம். அவரே பொட்டமான்.
இப்படிப் பல சோதனைகளுக்குள்ளால் பல்கலைக்கழகத்திற்கு சென்றாலும் அங்கும் எனது பட்டப்படிப்பை முடிக்காமல் விடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டது.
மூன்று தடவைகள் ஒரே பாடத்தில் பெயிலாகினேன்.பல முறை பல்கலைக்கழகத்தை விட நினைத்தேன். காதலி தடுத்ததால் தொடர்ந்தேன்.
அங்கு சபாலிங்கமில்லை, பதிலாக மகாலிங்கம். வைரோலஜிப் விரிவுரையாளர் மகாலிங்கம் எனது வில்லனாக இருந்தார்.
மூன்றாவது வருடத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு பெண் விரிவுரையாளர் ‘நீ ஏன் மைக்கிறோபயலஜி நல்லா செய்யவில்லை. நான் நன்றாகப் படிப்பிக்கவில்லையா?’ என்று கேட்டார்.
‘இல்லையே நான நல்லா செய்தானான்”
‘ஆர் சொன்னது?’
‘டொக்டர் மகாலிங்கம்’
‘நான் அவரைக் கேட்கவா?’
‘நான் சொன்னேன் எனக் கேட்கவேண்டாம்’
நேரடியாக அவரது அறைக்குச் சென்றேன். புத்தகத்தில் முகம் புதைத்தபடி இருந்தவர் திரும்பி, மூக்குக் கண்ணாடியை எடுத்தபடி ஏற இறங்க என்னைப் பார்த்தார். நேரடியாக விடயத்திற்கே சென்றுவிட எண்ணி டொக்டர் மகாலிங்கத்திடம்,
‘பரீட்சையில் எந்தப் பகுதியில் நான் குறைவாக செய்தேன்?’ எனக் கேட்டேன்.
‘யார் சொன்னது உனக்கு?’ பரபரப்புடன் ஆசனத்தைவிட்டு எழுந்தார்.
அந்தப் பெண் விரிவுரையாளது பெயரை மறைக்க முடியவில்லை.
‘கெட் அவுட்’ என்றார்.
அவரது முகத்தில் கோபம் பொங்கியது.
இப்படி ஏன் மனிதன் கோபப்படவேண்டும்? நான் சாதாரணமாகக் கேட்டதில் என்ன பிழை? இவருக்கு என்ன பிரச்சினை. நான் பெண் விரிவுரையாளரிடமிருந்து அறிந்ததா? இல்லை, அந்த விரிவுரையாளருக்குப் பரீட்சை விடயங்கள் தெரிந்ததா?
சங்கீதக்கச்சேரியில் இருந்து வீடு திரும்பிய ஊமையின் நிலையில் நான் வெளியே வந்தேன்.
புதிராக அவரது நடத்தை இருந்ததால் இதன் பின்பு நான் விரிவுரைகளுக்குப் போவதில்லை. இடைக்கிடை நான் காதலியோடு போகும்போது அவரும் நோக்குவார். நானும் நோக்குவேன் .
மீண்டும் நான் பெயிலானேன்.
அந்த பெயிலான பாடத்தை ஆமை, ஓட்டைச் சுமப்பதுபோல் சுமந்துகொண்டு கவனமாகப் படித்து இறுதியாண்டில் தேர்வை எழுதினேன். முடிவுகளை எதிர்பார்த்து இருந்த ஒரு நாள் என் முக்கிய இரண்டு விரிவுரையாளர்களான டொக்டர் பெரேராவும், டொக்டர பொங்சோவும் என்னைச் சந்தித்தார்கள். “நீ இறுதியாண்டில் நன்றாக பாஸ் பண்ணி கிளாஸ் எடுத்திருக்கிறாய். ஒரு பாடத்தில் A ஆனால் மூன்றாவது வருடப் பாடமான மைகிறோபயலஜியில் பெயலாகிவிட்டாய். பல்கலைக்கழக முதல்வரிடம் இந்த இறுதிப்பரீட்சை முடிவுகளை இப்பொழுது வெளியிடாது வைக்கச்சொல்லி விண்ணப்பம் செய்’என்றார்கள்.
நான் சென்று பல்கலைக்கழக முதல்வரிடம் கேட்டபோது அவர் சம்மதித்தாலும் பின்பு மற்றவர்களது அழுத்தத்தால் எனது இறுதிப்பரீட்சை முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டது.
மைகிரோபயலஜியை விரிவுரையாளர் மகாலிங்கம் இருக்கும்வரை பாஸ் பண்ணமுடியாது என்ற முடிவுக்கு வந்தேன். கிட்டத்தட்ட நான்கு கிலோக்கள் குறைந்து சோமாலியராகி விட்டேன். இரசாயனகூடத்தில் இருக்கவேண்டிய அமிலம் எனது வயிற்றில் தேங்கி இரைப்பையை அரித்தது. மனத்துக்குள் பல முறை பேராசிரியர் மகாலிங்கத்தைக் கொலை செய்தேன். அக்காலம் யுத்தம் தொடங்காத அமைதிக்காலம். ஆயுதங்கள் கிடைக்காது. ஒரு முறை கல்லால் இருட்டில் தாக்க எடுத்த முயற்சியை நண்பர்கள் தடுத்துவிட்டார்கள்.
இப்படி இருந்த காலத்தில் மைக்கிரோபயலஜின் பேராசிரியர் விஜவந்தா வெளிநாட்டில் அவரது லீவு முடித்தபின் எனக்குப் பாஞ்சாலிக்கு கண்ணனாகினார்.
வீட்டுக்கு என்னையும் எனது நண்பன் சில்வாவையும் அழைத்து தேநீர் தந்து ‘மகனே உன்னைப் பற்றி அறிந்தேன். பயப்படவேண்டாம் இம்முறை எழுது’ என்றார்
நாற்பது நாட்களில் அந்தப் பரீட்சையில் தேறி அதன்பின்பு இறுதியாண்டுகள் பரீட்சையை மீண்டும் எடுத்துப் பாஸாகினேன். ஆனால் விசேட சித்திகளற்று சாதாரணமாகப் பாஸாகினேன். இப்படியாக பாஸ் பண்ணினாலும் எனது நண்பர்களுக்கும் எனக்கும் நாற்பது நாட்கள் மட்டுமே வித்தியாசம் இருந்தது.
இப்படி மிகவும் கஸ்டப்பட்டு பாஸாகிய எனது மிருகவைத்தியத்தை அவுஸ்திரேலியாவில் தொடர்வதா, இல்லையா என்பதைக் கேட்க டொக்டர் சிறிஸ்கந்தராஜாவிடம் போகவிரும்பினேன். துங்காபேயில் இருந்து ரயில் தனியாக ரிச்மண்ட் செல்லவிருந்த என்னைக் காரில் கொண்டு செல்லம்படி மாலா அக்கா, மோகனிடம் கூறினார்.
டொக்டர் சிறிஸகந்தராஜா இலங்கையில் மிருகவைத்தியராகி பின்பு ஆவுஸ்திரேலியாவில் மேல்படிப்பு படித்து பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருப்பவர்.
அவரிடம் கேட்டபோது அவரும் மோகனைப்போல் இங்கு மிருகவைத்தியம் கடினம் என ஆலோசனை கூறி தற்போது முக்கியமான பகுதியான பயோரெக்னோஜி செய்யலாம் என்றார். அவரது ஆலோசனைப்படி நியுசவுத் வேல்ஸ் பல்கழைகழகத்தில் முதுமாணி படிக்க விண்ணப்பம் செய்தேன்.
அந்தவிதத்தில் டாக்டர் சிறிஸகந்தராஜா எனது வழிகாட்டியாக நினைத்தேன். மெல்பேனில் எந்த ஒருகாலத்திலும் விடுதலைப்புலிகளின் மாவீரர் நிகழ்ச்சிக்கு போகாத நான், அவர் பேச வந்த ஒரு வருட நிகழ்வுக்கு மனைவியுடன் சென்றேன். தோட்டாத்தரணியின் கைவண்ணமாக மாவீரர் கல்லறையும் மற்றைய அலங்காரங்களும் திகைக்க வைத்தது.
டொக்டர் சிறிஸகந்தராஜா பேசிமுடிந்ததும் வெளியே சென்ற என்னைப் பார்த்து தெரிந்தவர்கள் கேட்டனர்.
‘ஏன் அரைவாசியில் போகிறீர்கள்?’
“இவர்களில் கொல்லப்பட்டவர்களுக்காக இதுவரை இருந்தேன். இவர்களால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செய்ய என நானும் மனைவியும் வெளியே வந்தோம்’ என்றேன்.
அவர்களுக்கு அது புரிந்ததா எனத் திரும்பிப்பார்க்காமல் நடந்தேன்.
டொக்டர் சிறிஸ்கந்தராஜாவின் ஆலோசனைப்படி பயோரெக்னோலஜி படித்து அதில் வேலை பார்த்துக்கொண்டு மிருகவைத்தியம் படித்து என்னை மீண்டும் மிருக வைத்தியராக்கிக்கொண்டேன்.
கல்வித்துறையில் ஏணியாக இருந்த பேராசிரியர் விஜவந்தா, டொக்டர் சிறிஸ்கந்தராஜாவை போன்றவர்கள் மட்டுமல்ல தடைக்கற்களான அதிபர் சபாலிங்கம் பேராசிரியர் மகாலிங்கம் போன்றவர்களும் என் நெஞ்சத்தில் இருப்பார்கள்.
00
