மண்டலேயில் இருந்து நாங்கள் வீதி வழியாக சென்ற இடம் பகான் என்ற பர்மாவின் புராதனத் தலைநகரம். வுழியெங்கும் இலங்கையின் அனுராதபுரம் மாதிரியான நிலஅமைப்பு . பர்மியர்களின் பானை வனைதல், பனைமரத்தின் கள்ளில் இருந்து சர்க்கரை எடுத்தல், சாராயம் வடித்தல், விவசாயம் செக்கில் எண்ணை எடுத்தல் என்பவற்றை வழி நெடுக பார்த்தபோது ஊர் இலங்கையின் நினைவுகள் வந்தன.
நாங்கள் போகும் வழியில் பகன் அருகில் 1500 அடிகள் உயரத்தில் ஒரு சுற்றிவரக் குன்றுகள் அற்று ஒற்றைமலை நேராகத் வானத்தை நோக்கி எழுந்திருப்பது தெரிந்து. மலை உச்சியில் உச்சியில் விகாரையும் தெரிந்தது. இந்த மலை கிரேக்கருக்கு ஒலிம்பியா மலைபோல் இலங்கையருக்கு சிவனொளிபாதமலைபோல் பர்மியருக்கு போபாமலை(Popa mountain) புனிதமானது. அந்த மலையின் உச்சியில் உள்ள விகாரைக்கு பர்மாவில் உள்ள புத்தமதத்தவர்கள் புனிதத்தலமாக யாத்திரை செய்வார்கள்.
புத்தசமயம் மக்களிடையே வருவதற்கு முன்பே இந்த போபா மலை புனிதமான இடமாக கருதப்பட்டது. பர்மியர் இந்த மலையைத் தெய்வமாக வழிபட்டார்கள் ஆனால் பிற்காலத்தில் அதில் புத்தவிகாரையை கட்டிய போதும், நட் என்ற காவல்த் தெய்வ வழிபாடும் நடக்கிறது. அந்த மலையை ஏறி பார்க்க விரும்பினாலும் அதனது உயரத்தை நினைத்து தவிர்த்து விட்டு வேறு ஒரு இடத்தில் நின்று பார்த்துவிட்டு பகனை நோக்கி வாகனத்தில் சென்றோம்.
பர்மா என்ற தேசத்தின் சரித்திரம், மதம், மற்றும் நாகரீகம் பகானில் இருந்து உருவாகிறது. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து இங்கு அரசவம்சங்கள் உருவாகியது என சொல்வப்ப்டாலும் வரலாற்றின் தடயங்கள் 11ம் நூற்றாண்டில் இருந்துதான் கிடைத்துள்ளது. ஐராவதியின் கிழக்கே அமைந்துள்ள நகரமிது இந்த நகரத்தை மையமாக வைத்து (Aniruddha 1044-1077) ஆண்ட மன்னன் முழு பர்மாவையும் ஒன்றாக்கினான். அதுவரையும் மகாஜான பௌத்தத்தை தழுவி இருந்தவர்கள்,தேரவாதத்திற்கு மாறினார்கள்.
11ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாகிய பகானைத் தலைநகராக கொண்ட இராட்சியம் 250 வருடங்கள் இருந்தது. அப்பொழுது வானசாத்திரம், விஞ்ஞானம், மருத்துவம் என எல்லாத்துறைகளும் உருவாகி வளர்ந்திருந்தது. இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து ஏராளமானவர்கள் இங்கு வந்தார்கள். ஆரம்ப காலத்தில் மகாஜான, தேரவாத, தந்திரிய என்ற புத்தசமயப பிரிவுகளுடன் சைவ, வைணுவம் பிரிவுகளும் இருந்தன. பிற்காலத்தில் தேரவாதம் மட்டும் பர்மியரசரால் பாதுகாக்கப்பட்டதால் மற்றவைகளின் செல்வாக்கு குறைந்தாலும், முற்றாகவிட்டு செல்லவில்லை என்பதை அங்குள்ள பகோடாக்களைப் பார்த்தபோது தெரிந்து.
ஓன்றிணைந்த பர்மியர்களின் முதல் தலைநகரம் பகன் அதன் அரசன் அனவர்த்தா (Aniruddha) 11ம் நூற்றாண்டில் இந்த இராச்சியத்தின் எல்லை தற்போதய கம்போடியாவுக்குள் சென்றதாக சொல்கிறர்கள் தேரவாத புத்தமத உருவாக்கத்தின் முக்கிய பங்கு இலங்கைக்கு உண்டு
பகன் தற்பொழுது சிறிய நகரம். சில கடைகளும் சிறுதொகை மக்களும் உள்ளனர் ஆனால் 3000 மேல் பகோடாக்களும் ஸ்தூபிகளும் உள்ளன. பார்த்த இடமெல்லாம சிறிதும் பெரிதுமான பகோடாக்கள் தெரிந்தன. ஒரு சில மட்டுமே வெள்ளையடிக்கப்பட்டிருந்தன. மற்றவை செங்கல்லாலானதும் பாதி உடைந்து கவனிப்பாரற்றும் இருந்தது. தற்பொழுது யுனஸ்கோ, மக்களால் பராமரிக்கப்படாத புராதன பகோடாக்களையும் ஸ்தூபிகளையும் பராமரிக்க முன்வந்துள்ளது.
பர்மியரின் உணவில் நம்மைப போல்அரிசி முக்கியமானது. கறி வகைகள் உண்டு ஆனால் காரம் குறைவு நாங்கள் அதிகம் போடும்படி கேட்டால் போடுவார்கள். பகானில் ஒரு ரெஸ்ரோரண்டில் இருந்தபோது ஐரோப்பிய இளம் பெண் அதிக காரத்தை தின்றதால் கண்ணீர மல்கி மூச்சுத்திணறியபடி இருந்தாள். தனது நிலையை அவளால் பர்மியருக்கு சொல்லிப் புரியவைகக முடியவில்லை. அந்த சந்தர்பத்தில் இனிப்புகளை தின்னும்படி சொல்லி நான் உதவினேன். உறைப்பை கேட்டால் எவ்வளவு போடுவது என்பது பர்மியருக்கு தெரியவில்லை அதேபோல் ஐரோப்பியர் பலர் உறைப்பை விரும்பி உண்டு அவஸ்தைப்படுவதை பார்த்திருக்கிறேன்.
குடிபானங்கள் அதிகமில்லாத நாடு தற்பொழுது இளைஞர்களிடையே பியர் பிரபலமாகி பியர் கடைகள் பல உள்ளன. பியர்கள் பல உள்ளுரில் வடிக்கப்பட்டாலும் மியான்மார் பியரே எனக்கு பிடித்தது
1975 ம்ஆண்டில் நடந்த நில நடுக்கத்தின் முன்பு பத்தாயிரம் பபோடாக்கள் கிட்டத்தட்ட 35 கிலோமீட்டர் பிரதேசத்தில் அமைந்திருந்தன என வழிகாட்டி சொன்னார். பர்மாவின் வடபிரதேசம் இமாலயத்தைப்போல் நிலநடுக்கத்திற்கு பல முறை உள்பட்டது. ஜோர்ச் ஓவல் பார்மிய நாட்கள் நாவலில் கதாநாயகன் தனது காதலை காதலிக்கு தெரிவிக்க முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டு இருவரையும் பிரிக்கிறது.அந்தப் பிரிவால் முழுக்கதையும் திசை மாறுகிறது.
தங்கமுலாமிட்ட பகோடா Shwezigon Pagoda)ஆரம்ப அரசனால் (king Anawrahata) தொடக்கப்பட்டு மகனால் முடிக்கப்பட்டது. இதை சுற்றி பல பகோடாக்கள் கட்டப்பட்டது. இந்தப் பகோடாவைக கட்டுவதற்காக புத்தரின் தலையின் முன் பகுதி எலும்பு வைக்கப்பட்ட வெள்ளையானை பல பிரதேசங்களில் அலைந்து கடைசியில் யானை நின்ற இடத்தில் இந்தப் பகோடாவைக் கட்டினார்களாம். பிற்காலத்தில் புத்தரின் தந்தமும் இங்குள்ளதாக நம்பப்படுகிறது. இந்தியாவில் உள்ள மகாபோதியின் வடிவமாக இது கட்டப்பட்டது. இந்த பகோடாவின் அமைப்பு பிற்காலத்துப் பகோடக்களுக்கு பயன்படுத்தப்பட்டது.
இந்தப் பகோடாவை சுற்றி காவல் தெய்வங்கள் உள்ன. அவைகள் எல்லாம் இந்து தெய்வங்கள் ஆனால் அவை பர்மாவில் நட் (NUT)) என பெயரிடப்பட்டுளளது எல்லா காவல் தெய்வங்களுக்கும் தலைமையாக சக்கர ஆயுதத்தைக் கொண்ட இந்திரன் சிலை இங்குள்ளது. பர்மாவில் இந்துமதம், பர்மிய சோசலிசம்போல் மாற்றப்பட்டுள்ளது. 1975 இந்தப் பகோடா புவி நடுக்கத்தால் சேதமக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டுளளது.
பகனில் எனக்குப் பிடித்தது ஆனந்தாவிகாரை (Ananda Temple) 1090 ல் அமைக்கப்படடது கவுதம புத்தரின் பிரதம சீடன் ஆனந்தவின் பெயரில் கட்டப்பட்டது இதனது கட்டுமானமத்தைப் பார்த்தால் அக்காலத்து இந்திய கோயில்களை நினைவுக்கு கொண்டுவரும். இதை ஆராய்ச்சியாளர் இந்தியாவில் உள்ளவற்றிற்கு ஒப்பிடுவதுடன் பர்மாவில் கட்டப்பட்ட இந்தியவிகாரை என்கிறார்கள். இந்த விகாரையை கட்டிய கட்டடிடக் கலைஞர்கள் நிட்சயமாக இந்திய கலைஞர்களாக இருக்கவேண்டும்
வேறு எங்கும் இதேபோல் ஒன்றைக் கட்டாமலிருக்க இந்தக்கலைஞரகள் பர்மிய அரசனால் கொலை செய்யப்பட்டதாக கதை உள்ளது விகாரையின் உள்ள நான்கு புத்தர்களின் சிலைகள் வெவ்வேறு முத்திரைகளுடன் உள்ளன. பார்ப்பதற்கு மிகவும் அழகான கட்டிடம்
சுவசன்டோ பகோடா (The Shwesandaw Pagoda) ஐந்துதட்டுகள் கொண்டது இந்த விகாரை புத்தரின் புனித தலைமயிரை வைத்து கட்டப்பட்டது. இதை கணேச பகோடா என கூறுவார்கள் ஆரம்பத்தில் பிள்ளையாரின் சிலை வடிவம் நாலு மூலையிலும் இருந்ததாம். நான்கு பக்கமும் ஏறி பார்பதற்கு படிகள் உள்ளது அத்துடன் மேலே நின்று பார்கும் காட்சி பகானிலும் விகாரைகள் எழுந்து நிற்பதைப் பார்பது மிகவும் இரசிக்கக்கூடிய காடசி. இப்படியான விகாரைகளின் தோற்றத்தைத்தான் ஜோர்ச் ஓர்வெல் இரட்சசிகளின் முலைகள் என தனது பர்மியநாட்கள் நாவலில் வர்ணித்திருக்கிறார். பல இடங்களில் பரமீய பெண்களில் முலையில்லை என சொன்னதால்த்தான் இந்த இராச்சகியின் உருவகம் அவருக்கு தேவையாக இருந்திருக்கிறதோ?
புத்த விகாரையின் நூனிகளில் சில வெங்காயம்போல் ஊதியும் சில இடங்களில்மெலிந்தும் மற்றும் வளையங்கள் என்பனவற்றை வைத்து காலங்களையும் கணிப்பார்கள். பகான் பிரதேசம் வாழ்நாள் முழுக்க தங்கி வரலாறைப புரிந்துகொள்ள வேண்டிய இடம். என்னோடு வந்தவர்கள் இதுவரை பார்த்த பகோடாக்கள் போதும் என்றார்கள் எனது மனைவிக்கும நண்பர் இரவிக்கும் மனைவி நிருஜாவுக்கும் புத்த விகாரைகளைப் பார்த்து அலுத்துவிட்டது மேலும் அவர்கள் இந்து கோவில் இல்லையா என்று வழிகாட்டியைக் கேட்டபோது ஒரு இந்துக் கோயிலுக்கு எம்மை கூட்டிசென்றனர்
பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விஷ்ணு கோயில் சதுரவடிவமாக அமைந்துளது தற்போதய பகுதி பிரதான பகுதியான உட்பிரகாரம் மட்டும் தற்போது உள்ளதாக கருதப்படுகிறது . மற்ற கோயில் வெளிப்பிகாரம் சுற்றுமதில் என்பன காலத்தின் தாக்கம் மற்றும் புவிநடுக்கம் என்பவற்றால அழிந்துவிட்டது. அக்காலத்தில் பகானில் வசித்த இந்தியர்களுக்காக கட்டப்படடதாக தற்போது கருதப்படுகிறது.
இந்தக் கோவிலுக்கு நாம் சென்றபோது கோவில் சில பூசைசாமன்கள் மற்றும் ஊதுபத்தி எரிந்தது. அப்பொழுது நான் கேட்டேன் இங்கு யார் கும்பிடுவது இங்கு சுவனியர் விற்பவர்கள் அதை செய்கிறார்கள் . பல உல்லாசப் பிரயாணிகள் வந்து கொண்டிருந்தார்கள் நல்ல வியாபார தந்திரம் . ஆனாலும் இந்துக்கோயிலைப் பார்த்த பொச்சம் என்னோடு வந்தவர்களுக்கு தீர்ந்தது நல்லதே.
புகானில் ஒருகிரமத்திற்கு அழைத்து சென்றபோது அங்கு கண்ட காட்சிகள் இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் நான் கண்ட காட்சிகளை காட்டியது. கொல்லன் துருத்தி நான் சிறுவயதில் ஐம்பது வருடங்கள் முன்பாக எழுவைதீவில்.கண்டது. ஓர் இரு வருடத்தில் யாழ்பாணத்திற்கு வந்தபோது இருப்புபை காஸ் கொண்டு உருக்கப்படும் தொழில்நுட்பம் வந்து விட்டடது. இங்கு தோட்ட செய்கைக்கான ஏர் போன்றவற்றையும் வண்டிசக்கரத்தின் வளையங்களையும் தயாரிப்பதில் ஆணும் பெண்ணுமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். அதேபோல் வெள்ளி தங்கம் மிகவும் அதிகமாக கிடைப்பதால் இந்த தொழிலாளர்கள் இன்னமும் கைளால் செய்கிறார்கள். இந்த கிராமமும் உல்லாசப் பிரயாணிகளுக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் பலநாடுகளில் மறைந்துவிட்ட விடயங்கள் இங்கே பார்க்க முடிந்தது.
பர்மாவில் அதிசயிக்க வைத்தவிடயம் மிகவும் அமைதியாகவும் வரவேற்கும் தன்மையும் காணமுடிந்தது. பர்மியர்கள் பேசும்போது உரத்துப்பேசுவதில்லை. ஆடை விடயத்தில் லுங்கி அணிந்திருப்தால் ஒருவித யூனிபோமானதன்மை தெரிந்தது. தென்கிழக்காசியாவில் இவர்கள் வித்தியாசமாக தெரிந்தார்கள்.
பர்மாவில் இருந்த அரசர்கள் சகல அதிகாரமும் படைத்தவர்கள். அவர்களுக்கு கீழே இருந்து கிராமஅதிகாரிவரையும் தலைமுறையாக வருபவர்கள். இந்த வழக்கம் பிரித்தானியர்களின் காலத்தில் முற்றாக ஒழிக்கப்பட்டு நமது நாடுபோல் சிவில்சேவை கொண்டுவந்தார்கள். சுதந்திரத்திற்குப் பின்பாக வந்த இராணுவ ஆட்சி தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்தது. கடந்த 2010 இருந்து கிராம மட்டத்தில் தேர்தல் நடந்து கிராம அதிகாரிகள் நியமிக்கப்படுவது மக்கள் மத்தியில் சந்தோசத்தை கொடுப்பதாக எமது வழிகாட்டி சொன்னார்.
பர்மாவில் மொழி சிக்கலால் சாதாரண மக்களுடன் உரையாடுவது முடியாது போயிருந்தது என்பது மனவருத்தத்தைக் கொடுத்தது.
