ஐராவதி நதியில் ஒரு பயணம்
ஆறுகள் மனித வரலாற்றின் தொட்டில்கள். நாடோடிகளாக வாழ்ந்த மனிதர்கள் ஆற்றுப் படுக்கைகளில் நிரந்தரமாக குடியிருந்து விவசாயம் செய்தது மடடுமல்ல, மனிதர்களின் நாகரீகம், பண்பாட்டுடன் வழிபடும் மதங்களின் ஊற்றிடமும் ஆறுகளே. கங்கையை இந்துமதத்தில் இருந்து மடடுமல்ல, இந்தியதேசத்தின் கலாச்சாரத்தில் இருந்து பிரித்து பார்க்க முடியாது அதேபோல் யுத மதத்தின் மூலமான பத்துக் கட்டளைகள் நைல்நதியில் மிதந்த குழந்தை மோசஸ் உருவாகியது. புராதன எகிப்திய மதம், பபிலோனியர்களது வாழ்க்கை, பண்பாடு ஆறுகளை அண்டியே வளர்ந்தது.
ஆதிகால நாகரீகம், பாண்பாட்டின் உறைவிடமான ஆறுகள் அக்காலத்தில் விவசாயம், மீன் என்பதோடு தற்காலத்தில் மின்சாரம், உல்லாசம் பிரயாணம், போக்குவரத்து என பல துறைகளில் வளங்களை மக்களுக்கு அள்ளி வழங்குகிறது அதனால் ஆறில்லாத ஊருக்கு அழகு பாழ் என்ற தமிழ் பழமொழியின் புது அர்த்தத்தை பல ஆறுகளைப் பார்த்தபோது புரிந்து கொள்ளமுடிகிறது.
எகிப்திய நைல்நதியில் ஏழுநாட்களும், மீகொங், அவுஸ்திரேலிய மரே நதிகளில் பயணம் செய்த எனக்கு ஒரு பகல் முழுவதும்; ஐராவதி நதியில் பயணம் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது.
மண்டலேயில் இருந்து பகானுக்கு ஐராவதி நதியில் செல்ல கிட்டத்தட்ட பத்து மணித்தியாலங்கள் எடுத்தது. இந்த நதிக்கரை அருகிலேயே பர்மாவின் பல வரலாற்றுத் தலைநகரங்கள் இருந்தன ((Mandalay ,Bagan and sleepy Inwa (Ava) ))
ஒரு காலத்தில் பார்மிய அரசர்கள் பல மனைவிகளோடு, படை, பரிவட்டத்தோடு என ஐராவதி நதியில் பயணம் செய்தார்கள். இப்பொழுது கமராக்கள் கைகளில் ஏந்தியபடி நாம் பயணிக்க எஙகளோடு வெளிநாட்டில் இருந்து வந்த உல்லாசப்பிரயாணிகள் வந்தார்கள். ஐரோப்பா, அமரிக்கா அவுஸ்திரேலியாவில் இருந்து வந்தவர்களுக்கு இருநூறு வருடஙகளுக்கு முன்பான வரலாற்றுத் தோற்றத்தை நதிகரையெங்கும் காண முடிந்திருக்கும். தென்கொரியாவில் குடிசைகளையும் பாய் வள்ளங்களையும் மியூசியத்தில் பார்த்போது எனக்கு வியப்பாக இருந்தது.
30 பேர்களை கொண்ட இயந்திரப்படகில் பிரயாணம் செய்தோம். பெரிய அளவு வசதிகள் இல்லை இருப்பதற்கு கதிரைகளும், மியான்மா பியர், நூடுல் என்று அடிப்படை வசதிகளைக் கொண்ட சிற்றுண்டிச்சாலை படகில் அமைந்துள்ளது.
எனக்கு பக்கத்தில் இருந்த சேரா மற்றும் டேவிட் தம்பதிகள் பெர்லினில் இருந்து வந்தவர்கள். என்னைப் பார்த்ததும் அடுத்ததாக இந்தியாவுக்கு போவதாக கூறினார்கள். அவர்களிடம் இந்தியாவையும் தாஜ்மகாலையும் மற்றும் கங்கைநதியையும் பற்றி பேசிவிட்டு நான் அவுஸ்திரேலியாவில் இருக்கும் இலங்கையை சேர்ந்தவன் என்றபோது மன்னிப்புக் கேட்டார்கள். சேரா- டேவிட் தம்பதிகள் பல்கலைக் கழகத்தில் வேலை செய்யும் படித்தவர்கள். அவுஸ்திரேலியாவில் வெள்ளையர்கள் மட்டுமே இருப்பதும் பிறவுன் நிறமென்றால் இந்தியன் என்ற நினைவும் ஐரோபியர்களிடம் ஆழமாகப் பதிந்துவிட்டது.
பெரும்பாலான இடங்களில் குறைந்தது ஒரு கிலோ மீட்டர் அகலமானதும் 2170 கிலோமீட்டர் நீளமான ஐராவதி பர்மாவை இரண்டாக பிரிக்கிறது. இமயமலையின் தென்பகுதியில் இருந்து வரும் இந்த ஆறு முழுமையாக பார்மாவூடாக பாய்ந்து இந்து சமுத்திரத்தில் விழுகிறது. இந்த விடயத்தில் மற்ற நைல், மீகோங் நதிபோல் நாடுகள் மத்தியில் பிரச்சனையில்லை. ஆனாலும் தண்ணீர் குறைந்த நாட்களில் கரைகளில் குடியிருக்கும் சிறுபான்மை இனங்களுக்கும் பர்மியர்களுக்கும் பிரச்சனைகள் கூடுவதை அவதானிக்க முடியும்.
ஐராவதியின் முக்கியமான விடயம் இன்னமும் ஆற்றுக்கு குறுக்கே அணைகள் கட்டுப்படாத படியால் ஆறு பெருகி அகலமாகவும் ஆழமாகவும் ஓடுவது. பல ஆறுகள் கோடையில் வரண்டு நதி என பெயரெடுக்க மழைக்காலத்திற்காக காத்திருக்கவேண்டிய வேளையில் கோடையிலும் பெருகி ஓடுகிறது ஐராவதி நதி. புதிய அரசாங்கம் அபிவிரித்தி என்று வந்து அணைகள் பெருகினால் எங்வளவு காலம் நீடிக்குமோ?
மண்டலேயில் இருந்து பகான்வரை கரையெங்கும் புத்தவிகாரைகள், புத்த குருமார்க்கான மடாலயங்களும் சிறிதும் பெரிதுமாக வெள்ளையிலும், மஞ்சளிலும் நிறைந்திருக்கிறது. ஒரு விதத்தில் ஆன்மீகமே அங்கிருந்து பெருகி ஆறாக பெருகி வழிகிறதோ? அதன்மேல் நாம் படகில் செல்லுகிறோம் என எண்ணியபடி நீளமான காமரா லென்சை போட்டு பார்த்தபோது மாட்டுவண்டிகள், விவசாயப் பொருடகளையும் மற்றய உணவுப் பொதிகளை ஏற்றியபடி மெதுவாக சென்றன. வயல்களில் மாடுகள் உழுவது தெரிந்தது. கரையெங்கும் பெண்கள் குறுக்கு கட்டியபடி குளிப்பதும் அவர்களை சுற்றி ஆடு, மாடுகள் மற்றும் நாய்களும் என நிற்பதும் தென்னிலங்கையை நினைவுக்கு கொண்டு வந்தது. இரவில் ஆற்றில் பயணம் செய்தால் புத்தகுருமார் பாலி மொழி பாடல் உச்சரிப்பது கேட்குமென்றார்கள். அந்த அதிஸ்டமில்லை எங்களுக்கு.
ஆற்றில் பல உல்லாசப பிரயாணிகளுக்கான சொகுசுப் படகுகள், மீனவர்களின் படகுகள், அத்துடன் பெரிய கப்பல்கள் தேக்கு மற்றும் கரி போன்ற தாதுப்பொருட்களை ஏற்றியபடி நிறைமாதப்பெண்ணாக ஆற்றில் மிதந்தன.. சீனாவின் எல்லையிலிருந்து இரங்கூன்வரையும் கப்பல் போக்குவரத்து செய்ய முடியும். வீதிப் போக்குவரத்தை விட இலகுவானதாகவும் அமைதியாகவும இந்த ஆற்றப் பயணம் இருநதது.
பர்மாவே பிரித்தானியர் காலத்தில் உலகத்தில் அதிக அளவு அரிசியை ஏற்றுமதி செய்த நாடு அதற்கு காரணம் ஐராவதியே. நாங்கள் பார்த்போது பல இடங்களில் கரையெங்கும் கடலை, அவரை என ஏராளமான மரக்கறிவகைகள் பயிரிடப்பட்டிருந்தன.
பகானருகே ஆற்றின் வழியாக விகாரை ஒன்றிற்கு சென்றபோது கரையில் விவசாயவேலையில் ஈடுபட்டிருந்த முதியவர் எங்களுடன் வந்தார். உல்லாசப் பிராணிகளிடம் இருந்து சன்மானம் பெறுவதாக அவரது நோக்கம் இருந்தாலும் எண்பது வருடங்கள் அவரது முகத்தில் கோடுகளாகத் தெரிந்தது. அந்த வயதில் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பது பெரிய விடயம். அவரது கால்களின் உறுதி நாலு கிலேமீட்டர் எங்களுடன் நடந்தபோது தெரிந்தது. எம்மோடு படமெடுக்க அழைத்தபோது இடுங்கிய கண்களோடு அவரது புன்னகை புத்தரின் புன்கைக்கு ஒப்பாகத் தெரிந்தது. படகின் கயிறை பிடித்து கரைக்கு இழுத்து நாங்கள் படகில் ஏறுவதற்கும் உதவியபோது அவரது கையின் உழைப்பு தெரிந்தது. ஒரு அமரிக்க டாலரை கொடுத்தபோது கை அசைத்து விடை தந்தார் அரை ஒரு மணிநேரமாக எம்மிடயே இருந்தாலும் புன்னகை மற்றும் கை அசைப்பைத் தவிர எந்த வார்த்தைப் பரிமாற்றமும் நடக்கவில்லை. மனிதர்கள் அன்புடன் பழகுவதற்கு மொழியின் அவசியம் அதிகமில்லை என உணரவைத்தது.
காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக படகில் ஏறி நாங்கள் மாலையில் அஸ்த்தமன காலத்தில் பகானில் இறங்கியபோது ஐராவதியிலும் அஙகிருந்த தொடுவானத்திலும் மாலை சூரியன் ஒளியால் ஏற்படுத்தும் வர்ண கோலங்களைப் பார்க்க முடிந்தது. ஆற்று நீரும் தொடுவானமும் பொன்னாக உருகியோடியது.
பகான்கரையில் இறங்கியபோது வரிசையாக கரையை நிறைத்து மண்குடங்கள் எமது வருகைக்காக வைத்திருப்பதுபோல் வைக்கப்பட்டிருந்தன. விசாரித்தபோது திருவிழாவிற்காக வேறு ஒரு கிராமத்திற்கு கொண்டு செல்ல தயராக இருந்தது. மண்குடங்களை பர்மியத் வீதிகளிலும் பார்க்க ஆற்றின வழியே கொண்டு செல்வது பத்திரமானது.
நதிக்கரையில் இறங்கியதும் வரிசையாக இளம்பெண்கள் நெக்லசுகளை விற்பதற்கு காத்திருந்தார்கள். அவர்களைத் தவிர்த்து ஹோட்டேலுக்கு சென்றோம்.
எமது ஹோட்டல் முற்றிலும் தேக்கால் ஆனது. உலகத்திலே மிகவும் பிரசித்தி பெற்றது இந்த பார்மா தேக்கு.ஆனால் தேக்கு மரங்கள் அழிக்கப்பட்டதால் தற்பொழுது பயிராக நட்டு தேக்கம் காடுகளை உருவாக்குகிறார்கள்.
