நடேசன்
இந்தியாவில் இருந்து பேராசிரியை தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் மெல்பன் வந்தபோது அருண். விஜயராணியின்; சிறுகதை ஒன்றை கணையாழி அவுஸ்திரேலியா சிறப்பிதழில் வாசித்துவிட்டு, அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாகக் கூறினார். மேலும், தான் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களை ஆய்வுசெய்து எழுதுவதற்கு வந்திருப்பதாகவும் அவர் கூறியபோது அந்தச் செய்தி எனது மனதிற்கு உவகையாக இருந்தது. இங்கு வருகைதந்த சுமதி அவுஸ்திரேலியா பல்கலைக்கழகங்களுக்கும் சென்று ஆய்வுகளில் ஈடுபட்டார் என்பதும் எனக்குத் தெரியும்.
விஜயா என்று நாம் அழைக்கும் விஜயராணியின்; சிறுகதையான தொத்து வியாதிகள் அவுஸ்திரேலியாவில் வதியும் புலம் பெயர்ந்தவர்களின் வாழ்வை இலக்கியத்தில் இனங்காட்டுவதற்கு உதவியது என்பதில் தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்ட எமக்கு பெருமையானது.
“தொத்துவியாதிகள்” சிறுகதை கற்பனையென்றாலும் விஜயா எமது தமிழ்; சமூகத்தில் குடும்பம் கணவன் – மனைவி உறவு, குழந்தைகள் தொடர்பாக உணர்வுபூர்வமாகவும் அறிவார்ந்த நிலையிலும் எத்தகைய சிந்தனையை கொண்டிருப்பவர் என்பதை எடுத்துக்; காட்டுகிறது.
அருண். விஜயராணியின் மரணத்தை அவரது குடும்பத்துடன் அவரது நண்பர்களாகிய நாங்களும் தீவிர மனச்சுமையுடன் ஏற்றுக்கொண்டு அவருடன் பழகிய காலங்களை மனதில் பசுமையாக வைத்துக்கொள்ள விரும்புகின்றோம்.
http://noelnadesan.com/2015/12/15/contagious-diseases/
எழுத்தாளர் சமூகச் செயற்பாட்டாளர் சிந்தனையாளர் என பன்முக ஆளுமைக்கோணத்தில் எம்மை நேசித்த ஒரு நல்ல சிநேகிதி. உணர்வு வயப்படாமல் தர்க்க ரீதியாகப் பேசி தனது சார்பு நியாயத்தை ஏற்றுக்கொள்ள வைக்கும் தன்மையுடையவர் விஜயராணி, அதேவேளையில்; எமது குடும்ப விடயங்களையும் ஒரு சகோதரியாக விசாரிப்பார்.
மெல்பனுக்கு நான் வந்தகாலத்தில் இருந்து என்னாலும் நண்பர் முருகபூபதியாலும் முன்னெடுக்கப்பட்ட சகல கலை, இலக்கிய, சமூகம் சார்ந்த ஊடகப் (உதயம் இதழ்; ) பணிகளிலும் பல வழிகளிலும் தோளோடு நின்று உதவியவர்.
எங்களுடன் இணைந்திருந்த வேறும் பலர் பிற்காலத்தில் தடம்மாறிப் போயிருக்கிறார்கள். விஜயாவைப் பொறுத்தவிடயத்தில் நேர்மையான நேர்கோட்டில் பயணித்தவர்; . பல இடங்களில் எனக்காக பலரிடம் வாதாடியவர். எமது குடும்பத்தின் சகல நிகழ்வுகளிலும் தவறாது கலந்துகொள்வார். கடைசியாக எனது அறுபது வயது நிறைவு விழாவிலும் கலந்துகொண்டபொழுது,
‘நடேசனின் இந்த பிறந்தநாள் நிகழ்வுக்கு அவசியம் வரவேண்டும் என்று வந்தனான் ‘ என்று அவர் என்னை வாழ்த்தியபோது, அவரது உடல்நலத்தில் நேர்ந்திருந்த மாற்றங்கள் எனக்கு சங்கடமாகியது.
அப்படியிருந்தும் அவர் தமது கணவர் அருணகிரியையும் அழைத்துக்கொண்டு வந்தததைக் கண்டு நெகிழ்ந்துபோனேன்.
தொலைபேசியில் விஜயராணியோடு பேசுவது ஒரு சுகமான அனுபவம். அவருடைய அழகான வார்த்தைகள் மலர்ச்சரமாக கோர்க்கப்பட்டிருக்கும். மற்றவர்களது பதிலுக்கும் இடைவெளி விடுவார். இவ்வாறு அளவளாவுதலில்; மற்றவர்களுக்கு இடமளிப்பவர்கள் அதிலும் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் இடைவெளியில்லாது பேசுபவர்கள் மத்தியில் விஜயா மிகவும் வித்தியாசமானவர்.
நான் அங்கம் வகிக்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்பனவற்றில் தலைமைப் பதவிகளில் அமர்ந்து, உற்சாகமாக இயங்கியவர். அவருடன் சேர்ந்து பொதுப்பணிகளில் ஈடுபடுவது எமக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.
அவுஸ்திரேலியாவில் உதயம் இதழைத்தொடங்கிய ஆரம்பகாலத்தல் அவரும் ஒரு பங்காளராக இணைந்தார். அத்துடன் உதயத்தில் பல படைப்புகளையும் எழுதினார். பல மொழிபெயர்ப்புகளையும் செய்திருக்கிறார். உதயத்தின் கருத்துக்களினால் என்னையும் உதயத்தையும் இச்சமூகத்தில் பலர் புறக்கணித்து தாக்கியபோதும் உதயத்திற்காக வாதாடினார். அதேசமயம் தனக்கு உடன்பாடற்ற கருத்தின் பேதங்களை எடுத்துச்சொல்லி ஆக்கபூர்வமாக பேசியிருக்கிறார். மாற்றுக்கருத்துக்களையும் சினேக பூர்வமாக அனுகிவிடுவது அவரது இயல்பு.
ஒரு முக்கியமான நிகழ்வு இந்நேரத்தில் நினைவுக்கு வருகிறது. உதயம் இதழின் சார்பாக தமிழ்நாட்டிலிருந்து எழுத்தாளர் ஜெயமோகனை அழைத்திருந்தேன். அவருடனான சந்திப்பு கலந்துரையாடலை தம்மை எழுத்தாளர்கள் எனச்சொல்லிக்கொள்ளும் சிலர் புறக்கணித்தனர். ஆனால் அந்த நேரத்திலும் அச்சந்திப்பில் கலந்துகொண்டவர் விஜயராணி. வந்திருப்பவர் முக்கியமான தமிழ் இலக்கிய ஆளுமை எனத்தெரிந்துகொண்டு யார் அழைக்கிறார்கள் என்ற குறுகிய பார்வையின்றி பரந்த நோக்குடன் பங்குபற்றினார்.
அவரை நினைத்து எழுதும் இச்சந்தர்ப்பத்தில் அவருடைய கணவர் அருணைப்பற்றியும் அவசியம் சொல்லவேண்டும். விஜயராணிக்கு கார் ஓடத்தெரியும். ஆனால் அவர் காரைப்பாவிப்பது அபூர்வம். ஆனால் விஜயாவின் சகல சமூக முயற்சிகளுக்காகவும் அவரைக் காரில் அழைத்துச்செல்வதில் அருண் சலிப்படையாதவர். எல்லோரும் இவ்வாறு மனைவிக்கு உதவுவது இயல்புதானே எனச்சொல்வார்கள். ஆனால் எப்பொழுதும் அதை சிரித்த முகத்தோடு செய்வது எத்தனைபேரால் முடிகிறது. நான் அறிந்தவரையில் நண்பர் அருணாலே மட்டுமே முடியும்.
அருணுடைய இந்த நல்லியல்பை பல முறை நான் எனது மனைவியிடம் சொல்லியிருக்கிறேன். அதற்கு எனது மனைவி, அருண் எவ்வளவு நல்ல மனிதர். நீங்களும் இருக்கிறியள் என்று எனது மனைவி என்னைப்பார்ப்பது வழக்கம். ஏனென்றால் அவுஸ்திரேலியாவுக்கு நாம் வந்தகாலத்தில் அவரை வேலைக்கு அழைத்துச்செல்லும் விடயத்தில் என்மீது திருப்தி இல்லாமல் பின்னர் தானே கார் ஓட்டப் பழகிக் கொண்டவர் எனது மனைவி.
அருண் மற்றும் பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்கள் துயரில்; பங்கு கொள்ளும் இவ்வேளையில் எங்களைப் போன்ற விஜயராணியின் நண்பர்கள் வட்டத்தில் மட்டுமல்ல அவுஸ்திரேலியா தமிழ் சமூகத்தில் விஜயாவின் இழப்;பு வெற்றிடமாகவே இருக்கும். விஜயா உருவத்தில் சிறியவராக இருந்தாலும் அவரது செயற்பாடுகள், ஆளுமை மற்றவர்களிடத்தே அவர் செலுத்திய மனிதநேயம் மிக்க அன்பு என்பனவற்றால் அந்த வெற்றிடம் மிகவும் பெரிதாகவே இருக்கும்.
