அவுஸ்திரேலியர்கள் நிறவாத தென்னாபிரிக்க கிரிக்கட் ஆட்டக்காரர்களை முன்பு பகிஷ்கரித்தார்கள். அதில் ஒரு நியாயம் இருந்தது. நிறவாத அரசு அகன்ற பின்னர் தலைவர் நெல்சன் மண்டேலாவை வரவேற்றார்கள்.
முன்னர் இங்கிருந்த சிங்கள தேசிவாதிகள் அமர்தலிங்கத்தை பகிஷ்கரித்து அட்டைகளை சுமந்து துண்டுப்பிரசுரம் விநியோகித்தார்கள். பிறிதொரு சந்தர்ப்பத்தில் பிரேமதாச வந்தபொழுதும் லலித் அத்துலத் முதலி வந்தபொழுதும் இங்குள்ள தமிழ்த்தேசியவாதிகள் பகிஷ்கரித்து அதேபாணியில் எதிர்ப்புக்குரல் எழுப்பினார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்பொழுது இலங்கை கம்பன் கழகத்தையும் அதன் ஸ்தாபகர் கம்பவாரிதி ஜெயராஜையும் பகிஷ்கரிக்குமாறு குரல் எழுப்பி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கிறார்கள்.
இரண்டு தேசியவாதங்களும் காலம் பூராகவும் இவ்வாறு எதிர்ப்பு – பகிஷ்கரிப்பு என்றே திருவிழா காட்டி வந்துள்ளன.
சமூகத்தில் பத்து சதவீதமானவர்கள் மூளைவளர்ச்சி குறைந்தவர்கள் என்பது ஆய்விலிருந்து தெரிகிறது. ஆனால் புலம்பெயர்ந்த தமிழ் தேசியவாதிகளிடத்தில் அதன் வீதம் அதிகமோ என்றுதான் இதுபோன்ற பகிஷ்கரிப்பில் யோசிக்கவேண்டியுள்ளது.
ஒரு கால கட்டத்தில் எனது அரசியல் கருத்துக்களினால் என்னையும் நான் நடத்திய உதயம் பத்திரிகையையும் எனது தொழிலையும் எனது குடும்பத்தையும் பகிஷ்கரிக்குமாறு தூண்டியவர்கள் , இன்று சமூகத்தில், தமிழ்த்தேசிய அரசியலில் அந்நியமாகியிருக்கிறார்கள் என்பதுதான் அவர்களுக்கு காலம் வழங்கியுள்ள பதில். சிலரை இங்கு காணவே முடியவில்லை.
அகில இலங்கை கம்பன் கழகமோ அல்லது அதன் ஸ்தாபகர் ஜெயராஜோ இலங்கையில் மட்டுமல்ல, தமிழர் புகலிட நாடுகளிலும் தமிழ் இலக்கியத்தை வளர்க்கவில்லை. அவரும் அந்த அமைப்பினரும் காலம் பூராகவும் கம்பன் புகழ்பாடி தம்மையும் வளர்த்து, பொன்னாடை, பூமாலை, புகழாரங்கள் விரும்புபவர்களையும் திருப்திப்படுத்தியவர்கள்.
அவ்வாறு அவர்கள் செய்வதற்குரிய உரிமை அவர்களுக்குண்டு. ஒவ்வொருவரும் தாம் விரும்பியதை சட்டத்துக்கு புறம்பாக செய்யாதவரையில் விமர்சனங்களுக்குரியதாயிருந்தாலும் செய்வதற்கு உரிமையிருக்கிறது. அந்த உரிமை மதிக்கப்படவேண்டியது. அவர்களின் தவறுகளை விமர்சிக்கும் உரிமைதான் மற்றவர்களுக்குண்டே தவிர பகிஷ்கரிக்க தூண்டும் உரிமை இல்லை.
ஒருவர் விரும்பினால் அவர்களின் விழாவுக்கு செல்வார். விருப்பம் இல்லையாயின் தவிர்ப்பார். அதனைத் தீர்மானிக்கும் ஜனநாயக உரிமையை மற்றவர்கள் தங்கள் கையில் எடுப்பது அராஜகம்.
கம்பன் கழகத்தின் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்து இருப்பின் எழுதலாம். அவர்களுடன் வாதிடலாம். அதற்குரிய மனவுறுதிதான் வேண்டும்.
தமது பாதுகாப்பிற்காகவும் தேவைகளுக்காகவும் வசதிகளுக்காகவும் புகலிடம் தேடிச்சென்றவர்கள், இலங்கையில் இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும் ? என்று கட்டளையிடுவதோ இலங்கையரின் வாழ்வை தீர்மானிக்கவோ முடியாது.
புலம்பெயர்ந்தவர்கள் பெண்ணெடுக்க அங்கு செல்வதையும் இனிவரும் தலைமுறை தமிழை மறந்துவிடும் என்று கம்பவாரிதி ஜெயராஜ் சொன்னதில் எந்தத்தவறும் இல்லை. அதுதான் நடக்கிறது. புகலிடத்தில் தமிழின் எதிர்காலம் எத்தகையது என்று இங்கு வாழும் தமிழர்களின் மனச்சாட்சிக்குத் தெரியும்.
ஆனால் , அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
உண்மை கசப்பானதுதான். அதனைத்தான் ஜெயராஜ் சொல்லியிருக்கிறார்.
தேர்தல் கால வாக்குறுதிகளை மறந்துவிட்டு இலங்கைத் தமிழ்த் தேசியத்தலைவர்கள் ஜெனீவாவுக்கு வருடாந்தம் யாருடையதோ பணத்தில் யாத்திரை செல்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வருடாந்தம் விஜய்யின் திரைப்படம் வெளியாகும் வேளையில் அவருடைய கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து திருவிழா கொண்டாடுகிறார்கள்.
இவற்றையும் புகலிடத் தமிழர்கள் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்.
உண்மை கசப்பாக இருந்தாலும் – உண்மை உண்மையே !!!
