ஆசிரியர்: டாகடர் என்.எஸ்.நடேசன். பதிப்பகம்: மித்ர;
டாக்டர் நடேசனின் ‘வாழும் சுவடுகள்’ தமிழ் இலக்கிய உலகிற்கு நல்லதொரு வரவு. புது முயற்சியும் எனலாம். ‘நாலுகால் சுவடுகளே’ ‘வாழும் சுவடுகளான’ தலைப்பு மாற்றத்தினை நூலிற்கான எஸ்.பொ.வின் முன்னீடு தெரிவிக்கின்றது. மனிதரின் மிருக அனுபவங்களை வைத்துப் புனைகதைகள் பின்னப்படும் இக்காலகட்டத்தில் ‘வாயில்லாச் சீவன்ளுடனான’ மனிதரின் அனுபவங்களை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் கூறும் ‘வாழும் சுவடுகள்’ இன்னுமொரு விதத்திலும் சிறந்து விளங்குகின்றது. ஆசிரியரின் எழுத்தாற்றல் காரணமாக ஒவ்வொரு அனுபவங்களும் ஈசாப் கதைகளைப் போல் சில சமயங்களில் தீர்வினைத்தரும் குறுங்கதைகளாக விளங்கிச் சிறக்கின்றன. வித்தியாசமான அனுபவங்கள் நல்ல சிறுகதைகளைப் போல் படிப்பதற்குச் சுவையாகவிருக்கின்றன.
‘நடுக்காட்டில் பிரேத பரிசோதனை’ யானைக்கு நடந்த பிரேத பரிசோதனையைக் கூறும். ஆசிரியரின், டாக்டரின் ஆரம்ப அனுபவம் ‘துப்பறியும் சாம்பு’ கதையொன்றை வாசித்தது போலொரு கதையாக உருவான நல்லதொரு அனுபவம். சிக்கலான பிரச்சினைகளை எவ்விதம் சாதாரண அனுபவ அறிவு மூலம் தீர்க்க முடியுமென்பதற்கு உதாரணமாக இக்கதையினைக் கூறலாம். ஆரம்பத்தில் பயந்து கொண்டு சென்ற டாக்டர் தனது சமயோசிதத்தால் நல்லதொரு தீர்வினைத் தனது தடுமாற்றத்தினை வெளிக்காட்டாமல் தீர்த்துத் துப்பறியும் சாம்புவாய்ப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் முன்னால் நிமிரும் போது வாசிப்பவர் இதழ்க் கோடியில் புன்னகையும் கூடவே தோன்றி விடுகின்றது.
‘கலப்பு உறவுகள்’ சிறிய இனப் பசுவொன்றிற்குப் பெரிய இனக்காளையொன்றுடன் சினைப்படுத்தியதால் உண்டான பிரசவச் சிக்கலைக் கூறும். மனிதருக்கும் இது பொருந்துமாவென்பதை பிரசவ வைத்திய கலாநிதிகள் தான் ஆய்ந்து அறிவிக்க வேண்டும். ‘ராமசாமி கோனாரின் கவலைக்கு மருந்து’ அவரது வாழ்வுப் பிரச்சினை அவரது மாடுகளின் அனுபவத்தினூடு ஒப்பிட்டு ஆராயப்படும் பொழுது சிறுகதைகளுக்குரிய அம்சங்களுடன் விளங்குகின்றது. இக்கதையில் தமிழகத்தில் தமிழ்ச் சொற்களாகப் பரவிக்கிடக்கும் ஆங்கிலச் சொற்களின் பாவனையும் அங்கதத்துடன் சுட்டிக்காட்டப் படுகிறது. தமிழ் நாட்டில் ‘சோப்பு’ என்ற தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்ததைக் கூறும் அனுபவம் அது.
பல புதிய தகவல்களையும் ‘வாழும் சுவடுகள் ‘தெரிவிக்கின்றன. உதாரணத்திற்கு ‘இரத்த தான மகிமையி’னைக் குறிப்பிடலாம். கருணைக்கொலை செய்யப்படும் நாய்களிடமிருந்து பெறப்படும் இரத்ததானத்தினைக் குறிப்பிடலாம். இலங்கையில் போர்ச்சூழல் உக்கிரமாகவிருந்த சமயம் கொல்லப்பட்டவர்களின் கண்கள் தானமாகப் பெறப்பட்டதாகக் கதைகள் பல கேள்விப்பட்டிருக்கின்றோம். மேற்படி அனுபவம் இத்தகைய சம்பவங்களை இலேசாக நினைவு படுத்துகின்றன.
‘அகதி அந்தஸ்து கேட்ட பெருநண்டு’ ஏற்கனவே குமுதத்தின் ‘யாழ்மணத்தில்’ வெளிவந்த அனுபவம். மேற்படி தொகுப்பிலுள்ள அனுபவங்களில் சிறுகதைக்குரிய அம்சங்களுடன் விளங்கும் முக்கியமான படைப்பிது. நடைமுறைக்கும் தத்துவத்திற்குமிடையில் விளங்கும் முரண்பாட்டினை அழகாக எடுத்துக் கூறும் அனுபவம். மரணப்பிடியிலிருந்து தப்பியோட முனையும் பெருநண்டு. அதன் நிலைக்காக அனுதாப்படும் மனித உள்ளம் முடிவில் அதனை உண்டு ஏப்பம் விட்ட பிறகே ‘இனி மேல் பெருநண்டு சாப்பிடுவதில்லை’ என்று சபதம் எடுக்கின்றது. சாதாரண நடைமுறைச் சாத்தியமான அனுபவம் உணர்வுகள் இயல்பாக வெளிப்படுகின்றன. ‘போதை தந்த கொக்கிஸ்’, ‘நாய் வயிற்றில் பலூன்’, ‘விதையின் விலை பத்தாயிரம் டொலர்’, ‘மஞ்சள் விளக்கின் அர்த்தம்’ போன்ற ஆசிரியரின் அனுபவங்கள் வெறும் மிருகங்களுடான அனுபவங்கள் மட்டுமல்ல. ஒருவகையில் புலம் பெயர்ந்த சூழலின் வித்தியாசமான அனுபவங்களாகவும் விளங்குகின்றன.
மொத்ததில் டாகடர் நடேசனின் ‘வாழும் சுவடுகள்’ ஒரு மிருக வைத்தியரின் சாதாரண அனுபவங்கள் மட்டுமல்ல. சொல்லும் பொருளில் , நடையில் சிறந்து விளங்கும் வித்தியாசமான படைப்பிலக்கிய முயற்சியாகவும் விளங்கும் அனுபவங்கள். மிருகங்களின், புலம் பெயர்ந்த சூழலின் அனுபவங்களை விவரிக்கும் மனித உணர்வுகளின் தொகுப்பான ‘வாழும் சுவடுகள்’ தமிழ் இலக்கிய உலகிற்கொரு வித்தியாசமான புது வரவு தான்.
– ஊர்க்குருவி –
பதிவுகள் , மார்ச் 2003 இதழ் 39 -மாத இதழ்
