மதம் வந்த யானை கட்டப்பட்டிருக்கும்போது அந்த யானையால் கட்டப்பட்டிருக்கும் காரணத்தை புரிந்து கொள்ள முடியாது. அதனால் கட்டை அறுத்துக்கொண்டு சுதந்திரமாக நடமாட விரும்பி அட்காசத்தில் ஈடுபடுகிறது. பல நகரங்களில், விலங்கியல் பண்ணைகள் மற்றும் மிருகக்காட்சிசாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் பல மிருகங்கள் மன உளைச்சலால் துன்பப்படுகின்றன. செயற்கையாக காட்டை, மலையை, நீர்நிலைகளை எவ்வளவு திறமையாக அமைத்து அவைகளுக்கு இயற்கையான சூழ்நிலையை கொடுக்க முயற்சித்த போதும் அவை திருப்தி தருபவையல்ல. அவற்றின் இயற்கைச் சூழலை தரமுடியாதவை. இப்படியான வதிவிடங்களில் வைத்திருக்கும்போது ஏற்படும் மனஉளைச்சலால் மிருகங்கள் தங்களைக் கீறியோ கடித்தோ காயப்படுத்திக் கொள்கின்றன. சில சந்தர்ப்பங்களில் மனிதர்களுக்கு எதிராக இயங்கி பார்வையாளரையோ அல்லது பராமரிப்பவரையோ கொலை செய்கின்றன. இவை தற்போது பலருக்கு புரிந்தாலும் இவற்றை தவிர்க்க முடிக்காமல் விலங்கியல் பண்ணைகளை அமைத்துக்கொண்டு வருகிறார்கள்.
– — அசோகனின் வைத்தியசாலை
விலங்குகளை மிருகக்காட்சிச்சாலைகளில் பார்க்க விருப்பமற்று கடந்த மரர்கழியில் பெரியார் சரணாலயம் சென்றிருந்தேன் கடந்த மாதம் குருகர் தேசிய வனம் புதிய அனுபவத்தை தந்தது.
நடேசன்
மதியத்தை அண்மித்த பகலானதால் ஆதவனது ஒளிக்கதிர்கள் நிலமெங்கும் மஞ்சள் நிறம் தூவிப் பரவியிருந்தது. காய்ந்த புல் பற்றைகளும் சிறிய முட்புதர்களும் கண்ணுக்கு எட்டிய தூரமெங்கும் தெரிந்தன. பெரிய மரங்கள் ஆங்காங்கு இலைகளற்று நின்றபடி செப்டம்பர் காலம் இப்படித்தான் எல்லா இடங்களும் காய்ந்திருக்கும் என்பதை உணர்த்தின.
காட்டு மிருகங்கள் நீர்தேக்கங்களைத் தேடி நீண்டதூரம் செல்வதால் அந்தப்பிரதேசத்தைப்பார்பதற்கு இதுவே உகந்தகாலம் என்றான் மார்லின் என்ற ஆபிரிக்க வழிகாட்டி. அவன் சூலு என்ற இனக்குழுவை சேர்ந்தவன்.
காட்டு இலாகாவில் வேலை செய்பவன். தென்ஆபிரிக்காவிற்கு வருபவர்கள் தவறாமல் செல்லும் இடம் இந்த பூங்கா. மற்றைய ஆபிரிக்க நாடுகளை விட வனவிலங்குத்துறையை விஞ்ஞான பூர்வமாக நிர்வாகிப்பதும் அதிக வனவிலங்கு ஆராய்ச்சிகளை நடத்துவதும் தென் ஆபிரிக்காவில்தான் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
மேல்பகுதி திறந்த ஜீப்போன்ற ஒரு வாகனத்தில் வனத்தை ஊடறுத்து செல்லும்பாதை வழியாக ஆறுபேர் பயணம் சென்று கொண்டிருந்தோம். சிங்கத்தைத்தவிர மற்றைய மிருகங்களை ஏற்கனவே பார்த்துவிட்டதால் நாங்கள் சிங்கங்களைப் பார்க்கவே சென்றோம் எனக்கூறலாம்.
‘இன்று சிங்கத்தைப் பார்த்தால் எனக்கு ரிப் ஐம்பது ராண்ட்’ என்ற குரல், முன் இருக்கையில் அமர்ந்திருந்த எனக்கு மட்டுமே கேட்டது.
தீடீர் என எங்கள் வாகனச் சாரதியின் ரேடியோவுக்கு பல மொழிகளில் செய்திகள் வந்தன. என்ன என்று மார்லினைக் கேட்டபோது காட்டில் பேசும் மொழி (bush Language ) என சிரித்தபடி சொன்ன அவன் – எனது ஆவலை அதிகரித்தான். எனக்குப் புரிவதற்கு அதிக நேரமெடுக்கவில்லை.
தென்னாபிரிக்காவின் அங்கீகரிக்கப்பட்ட பதினொரு மொழிகளில் ஆங்கிலமும் ஒன்றானதால் ஆங்கிலத்தில் வந்த செய்தியில் பத்து கிலோமீட்டர் தூரத்தில பல சிங்கங்;கள் ரோட்டில் படுத்திருக்கின்றன எனச்சொல்லப்பட்டது.
எல்லா மிருகங்களையும் பார்த்த பின்பு கடந்த மூன்று நாட்களாக சிங்கங்கள் மட்டும் எங்களிடம் டிமிக்கி கொடுத்துவிட்டு ஒளித்திருந்தின. மேலும் 2500 சிங்கங்கள் வாழும் இந்த வனத்தில்; பார்க்க முடியாமல் போய்விடுமென்று எண்ணுவதற்கே கசப்பாக இருந்தது.
என்னோடு வாகனத்தில் வந்த நண்பன் துரைசிங்கம் ரவிந்திரராஜ் சிங்கத்தை தேடி சிங்கம் வருகிறது என அறுவை ஜோக்கொன்றை உதிர்த்தான்.
வாகனத்தில் உள்ளவர்கள் சிங்கம் பற்றிய செய்தி கேட்டதும் உற்சாகமடைந்தனர.; அதேவழியாக எதிர்த்திசையில் காரில் வந்த பெண்மணி தனது வாகனத்தை நிறுத்தி எங்களிடம் ‘பதினாலு சிங்கங்கள் நிற்கின்றன’ என்று இரட்டை விஸ்கி ஊற்றி விட்டுச் சென்றார்.
அந்த இடத்தை நோக்கி வேகமாக எமது வாகனம் சென்றது.
உலகத்திலே மிகவும் பிரசித்தமான இந்த தேசியவனம் தென் ஆபிரிக்காவின் வடமேற்கு பகுதியில் மொசாம்பிக் நாட்டின் எல்லையோடு உள்ளது. விஸ்தீரணம் கிட்டத்தட்ட இலங்கையின் மூன்றில் ஒரு பகுதியானது. வனத்தின் உள்ளே சிறிய கிராமங்கள் அமைத்து உல்லாசப்பிரயாணிகளை தங்க வைப்பார்கள். காட்டுக்கு எவரும் நடந்து செல்லமுடியாது. வாகனத்தில் மட்டுமே செல்லமுடியும்.
சிங்கங்களை நோக்கி வேகமாக சென்றதால் யானைகள் மற்றும் பல வகையான மானினங்களை நாம் எதிரில் கண்டும் அவற்றை சட்டை செய்யவில்லை.
இந்த வனத்தில் ஐந்து மிகப் பெரிய மிருகங்களில் ( சிங்கம் – சிறுத்தை – யானை – காட்டெருமை – காண்டாமிருகம்) முக்கியமான காட்டு இராசாவை தேடி ஐந்து ஆறு கிலோமீட்டர் கடந்தபோது மீண்டும் ஒரு செய்தி வந்தது பாதையை விட்டு விலகி அருகில் உள்ள புதர்களுக்கு சிங்கங்கள் சென்றுவிட்டன என்ற செய்தி எமது உற்சாகத்தை காற்று போன பலூனாக்கிவிட்டது.
எமது அதிஷ்டத்தை கேள்வி கேட்டபடி தொடர்ந்தும் சென்றபோது பல வாகனங்கள் பாதையை அடைத்தபடி நின்றன. எமது வழிகாட்டியும் சாரதியுமான மார்லின் மிகவும் சாதுரியமாக தனது வாகனத்தை மற்றைய வாகனங்களின் இடையே இருந்த இடைவெளிக்குள் செலுத்தியதால் எங்களுக்கு அற்புதமான காட்சி மிக அருகில் தெரிந்தது.
அரைவட்டமாக புதர்கள் எரிக்கப்பட்ட வனப்பகுதில் ஆறு ஆண் சிங்கங்கள் சிட்னி கடற்கரையில் சூரிய வெளிச்சத்தில் இடையில் கச்சைமட்டும் கட்டியபடி வெய்யிலில் குளிக்கும் பெண்களைப்போல் திவ்வியமாக காட்சியளித்தன. ஆண் சிங்கங்கள் பாதையில் இருந்து பத்து மீட்டர் தூரத்தில் அமர்ந்திருந்தன.
ஐம்பது கார்களுக்கு முன்பாக அவை அமர்ந்திருந்தாலும் அவற்றில் எந்தச் சலனமும் இல்லை. அவை தங்களை மறந்து தியானத்தில் இருந்தன. காலம் காலமாக மனிதர்களை எதிரியாக கருதிய இப்படியான மிருகங்கள் வாகனங்களை தனது எதிரியாக கருதுவதும் இல்லை. அதிலும் வாகன எஞ்ஜின் நிறுத்தப்பட்டு மனிதர்கள் உள்ளே அசையாமல் இருந்தால் வந்து வாகனத்தை பார்த்துவிட்டு சென்றுவிடும் அவைகளுக்கு வாகனங்கள் தமது எதிரிகள் இல்லை என்பதும் புரியும்.
அதேநேரத்தில் மனிதர்கள் வாகனத்தை விட்டு இறங்கினாலோ அல்லது தொடர்சியாக வாகன என்ஜினை அலறவிட்டால் அந்த இரைச்சல் அவற்றை சீற்றமடையப்பண்ணும்.
இந்த ஆறு சிங்கங்களையும் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அவதானிக்க கிடைத்த சந்தர்ப்பம் மிகவும் அதிர்ஷ்டவசமானது. ஒரு ஆண்சிங்கம் மட்டும் தனது பின்னங்காலை உயர்த்தி தலையையும் காதையும் சொறிந்தது. ஒரு மணித்தியாலத்தின் பின்பு இரண்டு சிங்கங்ககள் மெதுவாக எழுந்து பிடரி மயிரை சிலுப்பிவிட்டு சோம்பல் முறித்தன. அந்தக் காட்சி தேர்ந்த நடனப் பெண்ணின் நாட்டிய அசைவு போன்று இருந்தது. அதன் பின்பு ஒரு மரத்தில் இரண்டு சிங்கங்களும் எதிர் எதிராக ஓரே நேரத்தில் இருபக்கத்திலும் முன்கால்களை உயர்த்தி மரத்தை கீறின. எங்கள் வாகனத்தில் இருந்த அமெரிக்க மிருக மருத்துவர் அந்தச்சிங்கங்கள் தமது நகங்களை கூர்மைப்படுத்தவும்; அந்த இடத்தை தமக்குரிய இடமாக பதிவு செய்யவும் அவ்வாறு நகங்களினால் கீறுகின்றன என்றார். அந்த இடத்தில் சிறுத்தையையோ வேங்கையையோ அவை தமது எதிரியாக நினைப்பதில்லை. வேறு சிங்கங்கள் அந்த இடத்திற்கு உரிமை கோர முடியாது. சவானா காட்டின் நிறத்தில் உருவத்தை மறைக்கும் சிங்கங்களின் நிறம் அவைகளுக்கு பாதுகாப்பு கொடுத்தன. ஆண்சிங்கங்களின் பிடரி மயிர்கள் சிலிர்ப்பதும் அவைகளுக்கு பெரிய உருவத்தை கொடுத்து எதிரிகளை விரட்டவும் பெண் சிங்கத்தை கவருவதற்கும் உதவுகிறது. அத்துடன் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டால் பிடரி மயிர் அடியின் வேகத்தில் இருந்து அவற்றைப்பாதுகாக்கிறது. எமது வழிகாட்டி சிங்கங்கள் பசி ஏற்பட்டால் மட்டுமே வேட்டையாடுவதாகவும் பொதுவாக மூன்று நாளைக்கு ஒரு முறை உணவு உண்ணுவதாகவும் கூறியதுடன் அவை உண்ணும் உணவிலிருந்தே நீர்த்தேவையை பூர்த்தி செய்வதாகவும் சொன்னான்.
பூனைகளைப்போல் மிகவும் திறனான சிறுநீரகத்தை கொண்டிருப்பதால் குறைந்த அளவு சிறு நீரை வெளியேற்றும்போது அதிக நீரைக் குடிக்க வேண்டியதில்லை.
என்னுடன் வந்த எனது நண்பர் பல்மருத்துவர் தொலைநோக்கியால் சிங்கத்தின் பல்லுகளை பார்த்து எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என அங்கலாய்த்தார். மரத்தில் நகங்களை உராய்ந்து கொண்டிருந்த இரண்டு சிங்கங்களும் மெதுவாக நடந்து எம்மை நோக்கி வந்தன. மிகவும் ஆரோக்கியமான வலிமையான ஆண்சிங்கங்களின் நடை உண்மையிலேயே கண்கொள்ளாத காட்சிதான். அவற்றின் பின்பக்கத்து தசைகள் தொடையில் தனியாக எடை தூக்கும் ஓலிம்பிக் வீரனை நினைவுக்கு கொண்டுவந்ததுடன் அவற்றின் பாதங்களின் திண்மையான தோற்றம்; நிலத்தில் பாவும் விதமும் வியக்கவைத்தது.
இந்த ஆறு சிங்கங்களும் விடலைப்பருவமானவை. ஒரு கூட்டமாக திரிவதும் வேட்டையாடுவதும் வழக்கம். மேலும் அதிக அளவில் வனத்தில் பெண் சிங்கங்கள் இருப்பதால் உடலுறவுக்கு போட்டியும் தேவையில்லை.
பூனை போன்று பெண் சிங்கந்தான் ஆண்சிங்கத்தின் முன்னால் படுத்தபடி உறவு கொள்ள அழைக்கும். ஆனால் உடலுறவில் ஆண்சிங்கத்தின் குறியில் உள்ள முள்ளுப் போன்ற குத்தும் தன்மையினால் காயப்பட்டு சீற்றமடைந்து முன்காலால் ஆண்சிங்கத்தை அடிக்கும். மேலும் அந்த ஆண் குறியில் உள்ள முள்ளுகள் அடிக்கடி பெண்குறியில் படும்போதே பெண்ணின் சூலகம் முட்டையை வெளித்தள்ள உதவும். இதனால் சிங்கங்கள் அடிக்கடி உடலுறவு கொள்ளும்.
சிங்கங்களும் நாய் பூனையைப்போல் நிறங்களை பகிர்ந்தறிய முடியாதவை. ஆனால் இரவுப்பார்வைக்கு சிறு அசைவையும் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள அவற்றின் கண்களில் உள்ள சிவப்புக்கலங்கள் உதவுகின்றன. இதனால் பெரும்பாலானவை இரவிலேயே வேட்டையாடும்.
ஆண்சிங்கங்களிலும் பார்க்க பெண்சிங்கங்களே சுறுசுறுப்பாக திறமையாக வேட்டையாடுவன. ஆண்சிங்கங்கள் தன்னை சுற்றியுள்ள இடத்தை பாதுகாப்பதிலும் மற்றைய சிங்கங்களை விரட்டுவதிலுமே அதிகம் கவனமாக ஈடுபடும். இதேவேளையில் இளம் ஆண் சிங்கங்கள் கிடையில் இருந்து விரட்டப்பட்டு அவை தன்னையொத்த வயது சிங்கங்களுடன் இணைந்து ஒன்றாக வேட்டையில் ஈடுபடும்
நாங்கள் பார்த்த இந்த ஆறு சிங்கங்களும் 2 – 3 வயதுக்கு உட்பட்ட இளம் ;சிங்கங்கள். இவை ஒன்றாகத் திரிவதால் வேட்டை இலகுவாகிறது. உணவும் கிடைக்கிறது.
ஆறு சிங்கங்கள் வரிசையாக பாதையில் குறுக்கே சென்று மறு புறத்தில் உள்ள ஓடையொன்றை ஒன்றன்பின் ஒன்றாக அடைந்தன. ஓடையில் நீர் அதிகம் இருக்கவில்லை. சேறாக சில பகுதிகள் காட்சியளித்தன.
சிங்கங்களை பின்தொடர்ந்து வாகனத்தில் சென்ற போது அவை ஈரலிப்பான மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக படுத்துக்கொண்டதை பார்த்தோம். அந்த ஓடைக்கு அருகே நின்ற மரத்தின் கீழ் பல எலும்புத்துண்டுகள் கிடந்தன. எருமையின் எலும்புகள்போல் இருக்கிறதே என்ற போது இரண்டு கிழமைகளுக்கு முன்பாக இவை ஒரு எருமையை கொன்றிருக்கவேண்டும் என்றான் மார்லின்.
அந்த ஆறு சிங்கங்களையும் பிரியமானவரை விட்டு மனமில்லாமல் பிரிவதுபோல் பிரிந்து மீண்டும் எங்கள் தங்குமிடத்திற்கு வந்தோம்.
—0—
