1994 ஆண்டுவரையும் நிறபேதமான (Apartheid) அரசமைப்பை கொண்டு பத்து வீத வெள்ளை இனத்தவரால் பெரும்பான்மை கறுப்பு இனமக்களை பிரித்து ஓடுக்கி அரசாண்ட தென் ஆபிரிக்கா என்ற தேசம் வானவில்லின் வண்ணங்களைக் கொண்ட பல இனமக்கள் வாழும் ஒரு நாடு என நெல்சன் மண்டேலாவினால் பிரகடனப்படுத்தப்பட்டு இந்த ஆண்டுடன் இருபது வருடங்களாகிவிட்டது.
வெகுகாலமாக நீடித்த கனவான தென்னாபிரிக்க பயணம் மிருக வைத்திய மாநாடு ஒன்றின் மூலம் சமீபத்தில் சாத்தியமாகியது. உன்னதமானவர்களால் தலைமைதாங்கி நடத்தப்பட்ட விடுதலைப் போரட்டங்கள் நடந்த நாடுகளான கியூபா – வியட்னாம் போன்ற இடங்களுக்கு சென்றபோது ஏற்படும் உணர்வுகளை எழுத்தில் விபரிப்பது கடினமானது.
அங்குள்ள வரலாற்று சின்னங்களையும் அங்கு நடந்த சம்பவங்களையும் நூல்வழி படித்தும் செவி வழியாக கேள்விப்பட்டுமிருந்த எனக்கு அங்குள்ள மக்களிடமும் அவர்களைத் தலைமைதாங்கி நடத்திய தலைவர்கள் மீதும் ஏற்பட்ட வியப்பு, மதிப்பு என்பன ஓருபுறம் இருக்க – வெம்பி விழலாகிய போராட்டத்தில் அகப்பட்ட இலங்கைத்தமிழனாக இருந்த எனக்கு மிகுந்த பணிவுகொள்ள இந்த நாடுகள் வழிவகுத்தன.
தென் ஆபிரிக்காவைப்பொறுத்தவரையில் மேற்குறித்த நாடுகளுக்கும் மேலாக வெற்றி அடைந்த போராட்டத்தின் பின்பு மனித மனத்தின் பழிவாங்கல் என்ற அடிப்படை உணர்வை வென்றதை மட்டுமல்ல பல நூற்றாண்டு காலம் எதிர்த்து போராடிய எதிரிகளானவர்களுடன் இணைந்து சகோதரர்களாக ஒரே நாட்டிற்குள் வாழும் உன்னதத்தை புரிந்துகொள்ள உதவியது.பேசும்போது கூட வார்த்தைகளில் வெறுப்பு தொனிக்கமல் பேசும் கறுப்பின மக்களின் பெருந்தன்மை மனதை உருகவைத்தது.
உலகப்படத்தில் ஆபிரிக்காவின் தென்முனையில் உள்ள தென்னாபிரிக்கா என்றவுடன் நெல்சன் மண்டேலாவும் ஆபிரிக்க மிருகங்களும் சாதாரணமாக எவருக்கு மனதில் வரும் விடயங்களதான்
இவற்றிற்கும் அப்பால் இந்திய இலங்கை நாட்டவர்களுக்கு காந்தியை மகாத்மாவாக்கிய நாடுதான் அந்த நாடு என்பதும் மறுக்கமுடியாதது.
லண்டனில் வக்கீலாக படித்துவிட்டு நம்மெல்லோரையும்போல், வேலைக்காக சென்ற சாதாரண மனிதனை அங்குள்ள நிலைமை உன்னத போராளியக்கியது. அகிம்சை என்ற புதிய ஆயுதத்தை கையில் எடுத்து அங்கு போராடவைத்தது மட்டுமல்ல அதை தனது இந்திய நாட்டில் பிற்காலத்தில், புதிய போராயுதமாக மேற்கொண்டது மட்டுமல்ல உலகத்தில் அகிம்சை என்பதை புதிய கோட்பாடாக மனிதகுலத்திற்கு கொடையாக்கிய அவரது சரித்திரமும் மறுக்க முடியாது.
இதற்கும் மேலாக எனக்கு நினைவு வருவது மனித சமூகத்தின் தோற்றம் தொடங்கியது தென்னாபிரிக்க மண்ணில்தான் என்ற வரலாற்றுத்தகவல். தற்போதுள்ள மனிதர்களின் மூதாதையர்களான மனிதவர்க்கத்தின் உருவ அமைப்புள்ளவர்கள் ((Humanoid) இரண்டு மில்லியன் வருடங்கள் முன்பாக வாழ்ந்தவர்கள் ( Southern Ape or Australopithecus Africans). என்ற ஆதாரம் சிலகாலத்தின் முன்பு தென் ஆபிரிக்க தலைநகரான யோகன்ஸ்பேர்கின் அருகாமையில் உள்ள சுண்ணாம்புக் குகையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்தை மனித பரிமாணத்தின் தொட்டில் ( Cradle of Human civilisation) என்பார்கள்.
இப்படியான நாட்டில் மேற்கொண்ட ஒரு பயணத்தில் கடந்த இருபது வருடங்களில் தென்ஆபிரிக்காவும் அங்குவாழும் மக்களும் அடைந்த முன்னேற்றத்தை அறிந்துகொள்ள நான் செல்லவிருந்த சிலமாதங்களின் முன்பே நெல்சன் மண்டேலா மறைந்து விட்டார். மண்டேலாவின் உடல் மரணித்தாலும் தனது காலடியை தென்னாபிரிக்கா எங்கும் நினைவுகளாக மிகவும் அழுத்தமாக பதித்து விட்டுச் சென்றுள்ளார். அவரது பெயரில் தெருக்கள் , சிலைகள் மற்றும் மக்கள் ஒன்று கூடும் இடங்கள் என அவரது பெயர் நிறைந்துள்ளது மட்டுமல்ல – அவர் வாழ்ந்த வீடுகள் – பதினேழுவருடம் சிறையிருந்த ரொபின் தீவு என்பன உல்லாசப்பயணிகள் செல்லும் இடமாக அரசிற்கும் அங்குவாழும் மக்களுக்கும் அமுதசுரபியாகியுள்ளன. ஹிலரி கிளின்டன் மற்றும் ரோனி பிளேயர் ஆகியோர் அந்த ரொபின் தீவில் மண்டேலாவின் சிறைவாசத்தை புரிந்து கொள்வதற்காக ஒரு இரவு தங்கியிருந்து சென்றிருக்கிறார்கள்.
கடந்த பன்னிரண்டு மாதங்களில், தென்னாபிரிக்காவுக்கு வந்த உல்லாசப்பயணிகள் எண்ணிக்கை மில்லியனைக் கடந்துவிட்டது. 2010 இல் நடந்த உலக உதைப்பந்தாட்டப் போட்டி பல வகைகளில் தென்னாபிரிக்காவை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியதுடன் நாட்டின் சிவில் கட்டுமானத்தையும் நகர அபிவிருத்திக்கும் உதவியுள்ளது. முக்கிய நகரங்களான ஜோகான்ஸ்பேர்க், கேப் டவுன் , டேர்பன் என்பவற்றை ஐரோப்பிய நகரங்களுக்கு நிகராக உயர்த்தியுள்ளது.
நான் கலந்துகொண்ட மாநாட்டிற்கு ஐரோப்பா அமெரிக்க அவுஸ்திரேலியா முதலான நாடுகளிலும் இருந்து வந்த மிருக மருத்துவர்களில் பெரும்பாலானவர்கள் தென்னாபிரிக்காவை பார்ப்பதற்கு வந்தவர்களாகத் தெரிந்தார்கள்.
விமானம் ஜோகன்ஸ்பேர்க் விமான நிலையத்தில் இறங்கியதும் புதிய அரசியல் மாற்றம் புரிந்தது. விமானநிலையம் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் தலைவரான மறைந்த ஓலிவர் தம்புவின் பெயரில் அந்த விமான நிலையம் மாறியிருப்பது தெரிந்தது.
உலகத்தில் சிறந்த நட்பான நகரமாக தெரியப்பட்ட மெல்பனில் இருந்து குற்றங்கள் அதிகம் நடக்கும் ஜோகான்ஸ்பேர்க் செல்லும்போது மனப்பயம் ஏற்பட்டாலும் அதை வெல்லும் அசாத்திய துணிச்சலும் வந்தது. வாகனத்தில், ஹோட்டல் நோக்கி செல்லும்போது மனதில் சிறிது பயமும் பொதிகள்; போல் ஒட்டிக்கொண்டு பிரயாணம் செய்தது. நகரத்தின் மத்தியில் வாகனத்தில் செல்லும்போது சாலையில் சிவப்பு சிக்னலில்கூட காரை நிறுத்தக்கூடாது என சொல்லியிருந்தது மட்டுமல்ல பத்திரிகைகளிலும் எழுதப்பட்டிருந்தது.ஆயுத முனையில் கார்கடத்தல்கள், பாலியல் வன்முறைகள் என்பன நடப்பதாகவும் சொல்லப்பட்டிருந்தன.
பாதையோரங்களில் வீடுகள் வேலைத்தலங்கள் மட்டுமல்ல பாடசாலைகள் கார் தரிப்பிடங்கள் எல்லாம் இரும்பு கம்பிவேலியுடனும் பாதுகாப்பு கமராக்கள் அமைக்கப்பட்டும் இருந்தன. காவலர்களும் கடமையில் இருந்தார்கள். காரில் போனபோது எம்மையழைக்க வந்த வாகனச்சாரதியிடம் இதுபற்றி பிரஸ்தாபித்தபோது ‘நீங்கள் பதிவு செய்த ஹோட்டல் நகரத்தின் வட பகுதியில் உள்ளது அது மிகவும் பாதுகாப்பான பிரதேசம்’ என்றார்.
கடந்த இருபது வருடத்தில் ஜோகன்ஸ்பேர்க்கின் வடபகுதியில் புதிதாக சன்ரவுன் முதலான புதிய நகரங்கள் உருவாகி அங்கு மிகவும் வசதியான வெள்ளையர் மட்டுமல்ல பணம்படைத்த உள்நாட்டு வெளிநாட்டு கறுப்பு இனத்தவர்களும் மிகப்பெரிய வீடுகளில் வாழ்கிறர்கள். அந்தப் பகுதிகளில் ஹோட்டல்கள், கசினோக்களும் இருக்கின்றன.
அவுஸ்திரேலியர புவியியலாளர் ஜோர்ஜ் ஹரிசனால் முதல்முதலாக தென்னாபிரிக்காவில் ஜோகன்ஸ்பேர்க்கில்; 1884 இல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஜோர்ஜ் ஹரிசன் தங்கம் தோண்டும் உரிமையை பத்து பிரித்தானிய பவுண்களுக்கு அன்றைய தென்னாபிரிக்க அரசுக்கு விற்றுவிட்டார். இந்ததங்கத்தை அடைய ஏராளமானவர்கள் அங்கு குடியேறியதால் அது பெரிய நகரமாகியது. இதனால் தங்கம் தோண்டுபவர்களிடம் வரிவசூலிக்க அரசின் மீது பிரித்தானியர்கள் சுரங்க உரிமையாளர் சார்பாக போர் தொடுத்தார்கள். இந்தப் போரே இரண்டாவது போயர் போர் எனப்படும். இந்த யுத்தத்திலே அவுஸ்திரேலியர்களும் பிரித்தானியர்களுக்கு ஆதரவாக ஈடுபட்டார்கள். காந்தியும் இந்தப் போரில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி செய்தார்.
தென்னாபிரிக்க சரித்திரம் மிகவும் சுவாரஸ்யமானது.
15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கு இடையிலான வர்த்தகம் நிலவழியாக இக்கால துருக்கியின் ஊடாக தடைப்பட்டதும் கடல்வழிப்பயணங்களை தேடிய போது உருவாகிய காலனி ஆதிக்கத்தில் இதுவும் ஒன்று. இந்தியாவிற்கு பயணித்தபோது போர்த்துகீச கப்பல் புயலால் உடைந்த இடம் தென்னாபிரிக்காவின் தென்முனையான நன்நம்பிக்கை முனை. இந்த இடத்தில் சிலுவைதாங்கிய தூணைகட்டினான் பாத்தலோமிய டயஸ் என்ற போர்த்துக்கீய கப்டன். பத்து வருடங்கள் பின்பு போர்த்துக்கேய மாலுமியான வாஸ்கொடகாமா இந்தியாவுக்கு செல்லும் வழியில் நத்தால் என்ற தென்னாபிரிக்காவின் கிழக்கு பிரதேசத்தை அடைந்தபோது 25ஆம் திகதி மார்கழி மாதம் 1497 ஆம் ஆண்டு. அதனால் நத்தார் பண்டிகையின் நினைவாக நத்தால் மாகாணம் எனப்பெயரிட்டு சிலுவைத் தூணை கட்டிவைத்துவிட்டு பத்து நாட்களில் இந்தியாவில் உள்ள கோவாவை அடைந்தான்.
இதன்பின் டச்சுக்காரர் பிரித்தானியர் என உருவாகிய தென் ஆபிரிக்க பிரதேசம் இலங்கை இந்திய காலனி ஆட்சியோடு மிகவும் நெருங்கிய உறவு கொண்டது. டச்சுக்காரரால் இலங்கை இந்தியா மலேசியாவில் இருந்து அடிமைகளாக பலர் கொண்டு செல்லப்பட்ட வரலாறு பிரித்தானியர்கள் இந்திய மக்களை கரும்புத்தோட்டத்தின் கூலிகளாக கொண்டு சென்றதிற்கு முந்தியது.
எனக்கு மிகவும் வியப்பளித்த விடயம் யாழ்ப்பாணம் கோட்டை கட்டிய காலத்திய வரைபடம் கேப் டவுண் அடிமைகள் பற்றிய நுண்பொருட்காட்சிச்சாலையில் இருந்ததுதான். அதை புகைப்படம் எடுக்கக் கூடாது என்றும் எழுதப்பட்டிருந்து.
அடிமைகள் பற்றிய நுண்பொருட்காட்சி சாலையில் நின்றபோது எனக்கு உருவாகிய சிந்தனையை இங்கு எழுதவேண்டும். மனித வரலாற்றில் மனிதர்கள் சக மனிதர்களுக்கு செய்த கொடுமைகளில் ஐரோப்பியர் அமெரிக்க கண்டத்திற்கு செய்த அடிமை வியாபாரம் முதன்மையானது.
அதைத்தொடர்ந்து பின்னர் அமெரிக்க அடிமை முறை ஐரேப்பாவில் யூதர்களின் இன ஒழிப்பு தென்னாபிரிக்காவில் நிற பேத அரசாங்கம் என்று இருந்து அதுவும் ஒழிக்கப்பட்டு இருபது வருடமாகியது. இந்தக் கொடுமைகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஐரோப்பியர்கள். அவை முடிவுக்கு வந்து விட்டன.
நமது இந்தியா – இலங்கையில் நடக்கும் சாதி ரீதியான பாகுபாட்டு கொடுமை மிகத் தொன்மையானது மட்டுமல்ல – அழிக்க முடியாத மதத்தில் இரண்டறக் கலந்துவிட்டிருக்கும் இந்தக் கொடுமை எப்பொழுது முடிவுக்கு வரும் என்பதே என் முன்னாலிருக்கும் கேள்வி.
