நிழலாக நினைவுகளாக எம்மைத் தொடரும்.
நீர்கொழும்பூர் முத்துலிங்கம்.
பேனையும் வாளும் சிலம்படிக்கோலும் ஏந்திய கலைஞர்.
முருகபூபதி
இலங்கையின் மேற்குகரைதனில் இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்பில் வாழும் நீர்கொழும்பு – ஈழத்து இலக்கிய உலகிலும் இடம்பெற முழுமுதற் காரணமாகத் திகழ்ந்தவர் எழுத்தாளர் நீர்கொழும்பூர் முத்துலிங்கம்.
இவரது மறைவு எதிர்பார்க்கப்பட்டதே!
நீண்ட இடைவெளியின் பின்பு 1997 ஆம் ஆண்டில் இலங்கை சென்ற சமயம் கொழும்பிலும் நீர்கொழும்பிலும் நடைபெற்ற மூன்று இலக்கிய நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்து கொண்டோம்.
கொழும்பு நிகழ்ச்சிகளுக்கு இருவரும் ஒன்றாகவே பஸ்களில் பயணமானோம். மினுவாங்கொடையில் கள்ளொளுவை என்ற அழகிய சிறிய கிராமத்தில் நண்பர் மு.பஷீர் – பத்திரிகையாளர் நிலாம் ஆகியோர் ஒழுங்கு செய்த இலக்கிய சந்திப்பிலும் கலந்து கொண்டோம்.
கொழும்பில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் – விபவி சுதந்திர இலக்கிய அமைப்பு ஆகியன நடத்திய கருத்தரங்குகளில் உரையாற்றினோம்.
நீர்கொழும்பில் எனது – பாட்டி சொன்ன கதைகள் – நூல் வெளியீட்டுவிழாவில் நூலை ஆய்வு செய்து பேசியவரும் நீர்கொழும்பூர் முத்துலிங்கமே.
இவ்விதம் இலக்கிய உற்சாகம் கரைபுரண்டு ஓடும் விதமாக 97 டிசம்பரிலும் 98 ஜனவரியிலும் என்னுடன் பேசிப்பழகிய நண்பரை மீண்டும் 99 ஒக்டோபரில் சென்று பார்த்த பொழுது மரணத்தை வரவேற்கும் மனிதராக அரசமருத்துவமனைக் கட்டிலில் படுத்துக் கொண்டு என்னை வரவேற்று கட்டி அணைத்தார்.
நீண்ட நாட்கள் இருக்கமாட்டேன் பூபதி. இவ்வளவு தூரம் என்னைப்பார்க்க வந்துவிட்டீர் – என்று நா தழுதழுக்க பேசியது – எனது மனக்கண்ணில் இன்றும் பதிந்துள்ளது.
அறுபதாம் ஆண்டளவில் இவர் எழுதத் தொடங்கினார். அவரது கையெழுத்துக்களே ஓவியமாகத் துலங்கும். எழுதத் தொடங்கிய காலம் முதல் நீர்கொழும்பூர் இவர் பெயருடன் இணைந்து விட்டது.
வந்தோரை வாழவைக்கும் சிங்கார நீர்கொழும்பு என்று நாம் பெருமை பேசும் எமது ஊரை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். முத்துலிங்கத்தின் முதலாவது கவிதை தமிழகத்தில் கல்கி யில் வெளியானது.
நீர்கொழும்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் (இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி) இவர் கல்வி கற்கும் காலத்திலேயே நாடகங்கள் எழுதுவார் – நடிப்பார் – ஏனைய மாணவர்களுக்கும் பயிற்றுவிப்பார்.
எமது உறவினரான திரு.அ.மயில்வாகனன் அவர்கள் 1966 இல் அண்ணி என்ற சஞ்சிகையை தொடங்கியபொழுது கௌமாரன் என்ற பெயரில் அதன் துணை ஆசிரியராக இயங்கினார்.
அண்ணி சில இதழ்களுடன் நின்றுவிட்டது. அண்ணியில் முத்துலிங்கம் எழுதுவதாக இருந்த சரித்திரநாவல் ஒன்றும் அவரது ஓவியத்துடனும் அறிவிப்புடனும் வந்தது. அண்ணியுடன் அந்த நாவலும் நின்று விட்டது.
மல்லிகை – வீரகேசரியில் பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். சில கதைகள் ஆசிரியர்களின் தணிக்கைக்குட்பட்ட தகவலையும் எம்மிடம் சொல்லியிருக்கிறார்.
மல்லிகையில் முத்துலிங்கம் எழுதிய – அந்த ஜன்னல் ஏன் மூடியிருக்கிறது – என்ற கதை விமர்சகர்களினாலும் வாசகர்களினாலும் சிலாகித்து பேசப்பட்டது.
தமிழ்நாட்டில் செ.யோகநாதன் தொகுத்தளித்த ஈழத்தவர் சிறுகதைத் தொகுப்பிலும் நீர்கொழும்பூர் முத்துலிங்கத்தின் ஒரு சிறுகதை இடம்பெற்றுள்ளது.
இவரது கையில் பேனை மாத்திரம் இருக்கவில்லை. சிலம்படி – வாள்சண்டை முதலான கலைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
முன்பு – நீர்கொழும்பில் வருடாந்த ரதோற்சவத்தின் போது இவரதும் – இவரது குழுவினரதும் சிலம்படி – வாள்சண்டை மக்களை பெரிதும் கவரும்.
இவரது குரு – இவரது தந்தையார் மாணிக்கம். முத்துலிங்கத்தைப் போன்றே – அவரது தந்தையாரும் சுவாரஸ்யமான மனிதர்.
அவரும் மறைந்து பல ஆண்டுகள். 1997 – 98 இல் முத்துலிங்கம் வீட்டில் கலந்துரையாடிய போது தந்தையாரின் அந்தக்கால சுவாரஸ்யமான வேடிக்கைக் கதைகள் பலதை மீட்டிப் பேசிச் சிரித்தேன்.
பூபதி —- உமக்கு நல்ல ஞாபகசக்தி. சின்னசின்ன விஷயங்களையும் நினைவுபடுத்தி அந்நியம் சென்றாலும் நம்மையும் நாட்டையும் மறக்காமல் பேசுகிறீர்—. நாமே பல விஷயங்களை மறந்துவிடுகிறோம் – என்று என் கைபற்றி பேசிய முத்துலிங்கம் இன்றில்லை.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட மஞ்சள் குங்குமம் திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கும் இன்னும் பல சிங்களப் படங்களிற்கும் இவர் ஸ்டன்ட் மாஸ்டராகவும் பணியாற்றியுள்ளார்.
பல தமிழ் – சிங்கள கலைஞர்கள் சிலம்பம் – வாள் சண்டை முதலான கலைகளில் முத்துலிங்கத்தையே குருவாகக் கொண்டனர்.
சிறிது காலம் மத்திய கிழக்கு நாடொன்றில் பணியாற்றச் சென்றமையால் எழுத்துத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
மீண்டும் தாயகம் திரும்பிய பின்பு தீவிரமாக எழுதினார்.
இவரது கதைகள் – குறுநாவல் இடம்பெற்ற ஒரு ஜனனத்தின் அஸ்தமனம் என்ற தொகுப்பு 1994 இல் தேசிய கலை இலக்கிய பேரவையால் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கு முன்னுரை வழங்கியவர் இளங்கீரன்.
வீரகேசரியிலும் – தினக்குரலிலும் இவரது தொடர்கதைகள் வெளியாகியுள்ளன. முத்துலிங்கத்தின் மேலும் பல கதைகள் தொகுதிகளாக்கப்படாமல் இருக்கின்றன.
இலங்கை ரூபவாஹினிக்கென ஒரு தொலைக் காட்சி நாடகத்தையும் இவர் எழுதி இயக்கினார். காலம் கடந்து அது ஒளிபரப்பப்பட்டாத தகவல்.
1999 இறுதியில் இலங்கை சென்றிருந்த சமயம் – முத்துலிங்கம் சுகவீனமுற்றிருப்பதாக அறிந்தேன்.
அவரைப் பார்க்கும் ஆவலில் இருந்தபொழுது நண்பர்கள் மல்லிகை ஜீவாவும் வன்னியகுலமும் தாமும் வருவதாகச் சொன்னார்கள்.
இந்த இறுதிச் சந்திப்பும் சுவாரஸ்யமானதுதான்.
ஜீவாவும் வன்னியகுலமும் நீர்கொழும்பு வந்து என்னைச்சந்தித்தனர். அங்கிருந்து ஒரு ஓட்டோவில் முத்துலிங்கம் இல்லத்திற்கு புறப்பட்டோம். நேரம் பிற்பகல் 2.30 மணி. வீட்டில் முத்துலிங்கம் இல்லை. அவருடைய மனைவி சொன்னார் – அவர் மீண்டும் ஆஸ்பத்திரியில். அங்கு போனால் பார்க்கலாம்.
மீண்டும் அதே ஓட்டோவில் நீர்கொழும்பு ஆஸ்பத்திரிக்கு மூவரும் விரைந்தோம்.
வாயில் காப்போர் எம்மை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.
நோயாளரை பார்க்கும் நேரம் 5 மணிக்கு பின்புதான். சென்று பிறகு வாருங்கள். – என்றனர்.
நாம் தூரத்திலிருந்து வருகிறோம். அனுமதிக்கப்பட்டிருப்பவர் ஒரு பிரபல கலைஞர் – எழுத்தாளர். நான் ரூபவாஹினியில் பணியாற்றுகிறேன். இவர் ஒரு சஞ்சிகை ஆசிரியர். இவர் ஒரு எழுத்தாளர் – அவுஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கிறார். தயவு செய்து நோயாளியை பார்க்க அனுமதியுங்கள். 5 நிமிடம் பார்த்துப் பேசிவிட்டு திரும்புவோம் – என்று வன்னியகுலம் காவலர்களிடம் சொன்னார்.
எனது பாஸ்போட்டும் – அவர்களின் அடையாள அட்டைகளும் பார்வையிடப்பட்டன.
ரூபவாஹினி என்றவுடன் நோயாளியும் ஒரு கலைஞர் என்று அறிந்தவுடன் காவலர்கள் தணிந்த குரலில் பேசினார்கள்.
உங்களை இப்போது உள்ளே அனுமதிக்க சட்டம் இடம் தரவில்லை. ஆனாலும் அனுமதிக்கிறோம். முதலில் இருவர் போய் பார்த்துவிட்டு திரும்புங்கள். அதன் பின்பு யாராவது ஒருவர் செல்லலாம் – என்றார் வாயில் காப்போர்.
நீங்கள் இருவரும் முதலில் போய் வாருங்கள். அதன் பின்பு நான் போகிறேன் – என்று சொல்லி நண்பர்களை முதலில் அனுப்பினேன்.
காவலர்கள் பின்பு நோயாளிக்கலைஞரைப்பற்றி என்னிடம் விசாரித்தனர்.
முத்துலிங்கத்தின் திறமைகளை – சிங்களப் படங்களில் அவர் ஸ்டன்ட் மாஸ்டராக இயங்கியதை சிங்களத்தில் விபரித்தேன். எனது பேச்சை ஆவலுடன் கேட்ட அந்த காவலர்கள் – தமது தயக்கத்தையும் வெளிப்படுத்தி என்னிடம் ஒரு உறுதிமொழி கேட்டார்கள்.
நோயாளி ஒரு கலைஞர் என்கிறீர்கள் எழுத்தாளர் – சஞ்சிகை ஆசிரியர் – தொலைக்காட்சி சேவையை சேர்ந்தவர்கள் என்று வந்திருக்கிறீர்கள். பின்பு வெளியே போய் – அந்த நோயாளியை இந்த மருத்துவமனை நன்றாக பராமரிக்கவில்லை என்று ஏதும் எழுதியும் பேசியும் எமது தொழிலுக்கு மாத்திரம் உலை வைத்துவிடாதீர்கள் – இதுவே அவர்கள் கேட்ட உறுதிமொழி.
எனக்குள் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு – அப்படி ஏதும் நடக்காது. கவலைப்படாதீர்கள் எனச் சொல்லிக்கொண்டிருக்கும் போது உள்ளே சென்ற இரு நண்பர்களும் திரும்பினார்கள்.
பின்னர் நான் முத்துலிங்கத்தை பார்க்கச் சென்றேன். எனது வரவை அவர் எதிர்பார்க்கவே இல்லை.
கட்டிலிலிருந்து சிரமப்பட்டு எழுந்து என்னை அணைத்து சிரித்தார்.
விரைவில் நீங்கள் குணமடைவீர்கள். அவுஸ்திரேலியா புறப்படு முன்னர் வந்து பார்க்கிறேன் – என்று கூறி விடைபெறும் போதுதான் தனது ஆயுள் முடியப்போகிறது என்றார்.
எனக்குக்கேட்க மிகவும் கஷ்டமாக இருந்தது. எனினும் துயரத்தை வெளியில் காட்டாமல் – தைரியமாக இருங்கள் – என்று மட்டும் சொன்னேன்.
அதன்பிறகு நீர்கொழும்பூர் முத்துலிங்கம் சில நாட்களில் இறந்துவிட்டார். முத்துலிங்கம் ஈழத்து பத்திரிகைளில் மாத்திரமல்லாது ஐரோப்பாவிலிருந்து வெளியாகும் சிற்றிதழ்களிலும் எழுதிக் கொண்டிருந்தார்.
இறுதியாக – பிரான்ஸில் வெளியாகும் உயிர் நிழல் இதழில் முக்கியமான வினாவொன்றையும் எழுப்பியிருந்தார். (உயிர் நிழல் நவம்பர் – டிசம்பர் 1999)
புலம் பெயர் சிருஷ்டியாளர்களின் ஆளுமை ஒரு காலத்தின் பதிவாக பிரதிபலிக்கின்றது. எனினும் ஏற்கனவே இங்கிருந்து சென்ற இலக்கிய கர்த்தாக்கள் புலம்பெயர் இலக்கியப்பூங்காவினை அலங்கரிக்கின்றனர்.
அவர்கட்குப் பின்னர்?
இதுவே பெரும் கேள்விக்குறி?
முத்துலிங்கத்தின் இந்த வினாவுக்கு பதில் தரவேண்டியவர்கள் புலம்பெயர் படைப்பாளிகள்தான்.
இதே உயிர்நிழல் இதழில் நீங்கள் யார்? என்ற கவிதையையும் அவர் எழுதியிருக்கிறார். இந்தக் கவிதையின் மூலம் முத்துலிங்கத்தின் இலக்கியக் கொள்கையையும் எம்மால் புரிந்து கொள்ள முடியும். இந்த உயிர் நிழல் இதழை முத்துலிங்கம் பார்த்தாரா – அல்லது அதற்கு முன்பே அவரது உயிர் பிரிந்து விட்டதா? என்பது அவுஸ்திரேலியாவில் இருக்கும் எனக்குத் தெரிய நியாயமில்லை.
எனினும் அவரது உயிர் – நிழலாக நினைவுகளாக எம்மைத் தொடரும்.
–00-
