நடடா ராஜா நடடா நல்லாரோக்கியத்திற்காக நடடா -
காலத்திற்குத்தேவையான நடைப்பயிற்சி
ஒவ்வொரு நாள் நடைப்பயிற்சியின்போதும் பார்க்கின்றேன் – உடல்நலத்திற்காக நடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. பயம்தான் அவர்களை நடக்கவைக்கிறது. ஒவ்வொரு அடி வைக்கும்போது பதற்றமாகவே நடக்கிறார்கள். பலரது நடையிலும் எரிச்சலும் வேண்டாவெறுப்புமே விஞ்சியிருக்கிறது. நடத்தலின் இனிமையை நாம் உணர்வதேயில்லை.
இவ்வாறு கடந்த (2014) ஜனவரி தீராநதி இதழில் தமிழக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எதிர்த்திசை என்ற தொடர்பத்தியில் புத்தனோடு நடப்பவர்கள் என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
நான் சமீபத்தில் அனுபவித்து வாசித்த கட்டுரை.
ராமகிருஷ்ணன் சொல்வதில் யதார்த்தபூர்வமான உண்மை இருக்கிறது.
இலங்கை வரும் காலப்பகுதியில் என்னை அதிகம் சிந்திக்கவைத்த விடயங்களில் இந்த நடைப்பயிற்சியும் முக்கியமானது. முன்னரெல்லாம் நடந்து சென்ற தூரத்துக்கும்கூட தற்காலத்தில் பலருக்கும் ஓட்டோ தேவைப்படுகிறது. எனது பாட்டி ஒரு காலத்தில் சிலாபத்திலிருக்கும் முன்னேஸ்வரத்துக்கும் கதிர்காமம் செல்லும் வழியில் திஸ்ஸமகராமவிலிருந்து கதிர்காமத்துக்கும் நடந்து சென்று திரும்பிய கதைகளை சொல்லியிருக்கிறார்.
நானும் 1963 இல் கதிர்காமத்திலிருந்து செல்லக்கதிர்காமத்திற்கு பாட்டியுடன் நடந்து சென்றிருக்கின்றேன்.
பண்டத்தரிப்பில் வடலியடைப்பில் இப்பொழுதும் ஒரு பழைய காலத்து கதை சொல்வார்கள்.
அந்தக்கதையின் தலைப்பு உமையர் கதிரேசர் இளநி காவிய கதை.
ஒருநாள் உமையர் கதிரேசர் என்பவர் வடலியடைப்பிலிருந்து யாழ்ப்பாணம் பட்டினத்திற்கு நடந்து சென்றாராம். வழியில் அருந்துவதற்காக கையில் ஒரு இளநியும் எடுத்துக்கொண்டுதான் புறப்பட்டாராம். வழியில் பல இடங்களில் அவர் இளைப்பாறியபோதும் பிறகு இளநி அருந்துவோம் – அடுத்த ஊர் வந்தவுடன் அருந்துவோம் யாழ்ப்பாணம் சென்ற பின்னர் அருந்துவோம் என்று நினைத்துக்கொண்டு நடந்தாரேயன்றி அந்த இளநியை வெட்டி தாகசாந்தி செய்யவில்லை.
மீண்டும் மாலையில் யாழ்ப்பாணத்திலிருந்து வடலியடைப்புக்கு திரும்புகையிலும் மனதிற்குள் அதே பல்லவிதான். தாகத்திற்காக எடுத்துச்சென்ற இளநியை மீண்டும் காவிக்கொண்டு அவர் வீடு திரும்பிய கதைதான் உமையர் கதிரேசர் இளநி காவிய கதை.
இதில் உண்மை இருந்ததா என்பது தெரியாது. ஆனால் எமது முன்னோர்கள் நடந்து நடந்தே தமது கடமைகளை தொடர்ந்தார்கள் என்பதில் பெரிய உண்மை இருக்கிறது.
இந்தியாவிலிருந்து தோட்டக் கூலிகளாக அழைத்துவரப்பட்ட தமிழ் மக்கள் மலையகத்தில் காடு மேடெல்லாம் ஏறிக்கடந்து நடந்துவந்துதான் இரப்பரும் தேயிலையும் கொக்கோவும் பயிரிட்டார்கள் என்பது வரலாறு.
காலப்போக்கில் எம்மவருக்கு மட்டுமல்ல உலகடங்கிலும் வாழும் மக்களுக்கு நடைப்பயிற்சி படிப்படியாக குறைந்துதான்விட்டது.
அதனால் ஆயுளும் குறைந்துவிட்டது.
முன்னர் தேவைகளின் நிமித்தமே நடந்தார்கள். ஆனால் இன்றோ தேகாரோக்கியத்திற்காகவே நடைப்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
நடைப்பயிற்சி ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று தெரிந்திருந்தாலும் நடப்பதற்கு ஏனோ பஞ்சிப்படுகின்றோம். ராமகிருஷ்ணன் நடைப்பயிற்சி பற்றி மிகவும் சிறப்பாக தீராநதியில் பதிவு செய்திருக்கிறார்.
அவர் – கௌதம புத்தர். – மகாத்மா காந்தி – தத்துவ ஆசான் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் தோரு என்ற அறிஞரின் நடைப்பயிற்சி அனுபவங்களையும் அழகாக விபரிக்கின்றார்.
கடந்த சில வருடங்களில் நான் இலங்கைக்கு பல முறை வந்திருந்தபொழுது நான் கண்ட அற்புதமான காட்சி – பலர் காலையிலேயே நடைப்பயிற்சியில் ஈடுபடுவதுதான். எங்கள் ஊர் நீர்கொழும்பில் கடற்கரைக்கு (பீச்) அருகாமையிலிருக்கும் மைதானத்தில் நானும் மைத்துனரும் காலை 5 மணிக்கே நடைப்பயிற்சியை ஆரம்பித்துவிடுவோம்.
ஒரு நாள் மைதானத்தை சுற்றுவோம். மற்றுமொரு நாள் கொழும்பு வீதி வரையில் சென்று ஊரைச்சுற்றிக்கொண்டு வருவோம். இப்படி பலநாட்கள் அங்கே நடைப்பயிற்சியில் ஈடுபட்டேன். இலங்கையில் வாழ்ந்த காலத்தில் நான் அபூர்வமாகக் காணும் இந்த நடைப்பயிற்சிக்காட்சியை தற்காலத்தில் வெகு சாதாரணமாகவே கண்டேன்.
1972 காலப்பகுதியில் காலிமுகத்திடலில் வீதி நிர்மாணிப்பு பணியில் ஒரு சப் – ஓவசீயராக பணியாற்றிய காலத்தில் அங்கு தந்தை செல்வநாயகம் தபால் அமைச்சர் செல்லையா குமாரசூரியர் உட்பட பல அரசியல் தலைவர்கள் நடைப்பயிற்சிக்கு வருவதைக்கண்டிருக்கின்றேன்.
இலங்கை அதிபரின் துணைவியாரும் தற்காலத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் புடைசூழ அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபடுவதாக அறிகின்றேன்.
சில வருடங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு முள்ளியாவளை வித்தியானந்தாக்கல்லூரியில் ஒரு நாள் இரவு தங்க நேரிட்டது. மறுநாள் காலை சிலர் அங்குள்ள மைதானத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டதைக்கண்டேன். இவ்வாறு எம்மவர்கள் நாடேங்கும் நடைப்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள் என்றால் ஜிம்முக்கும் செல்கிறார்கள் என்றால் அவர்களையும் இனிப்பும் – கொழுப்பும் ஆக்கிரமித்துவிட்டது என்பதுதான் காரணம்.
இரத்தத்தில் சுவர்ந்திருக்கும் இனிப்பை தொலைத்துக்கட்ட கொழுப்பை விரட்டியடிக்க நடைப்பயிற்சி மிகச்சிறந்த நண்பன் அல்லது தோழி. அனுபவத்தில் சொல்கின்றேன்.
மழைநாட்கள்தான் நடைப்பயற்சிக்கு எதிரி.
அவுஸ்திரேலியாவில் குளிர்காலம்தான் எதிரி.
கனடாவில் ஒரு தமிழ் அன்பர் பனிபெய்யும் காலத்தில் நடைப்பயிற்சிக்குச்சென்று தனது செவிமடல் குளிரில் விறைத்துப்போனதும் அதில் கையை வைக்க செவிமடல் கையோடு வந்துவிட்டதாகவும் அறியக்கிடைத்தது.
நடைப்பயிற்சியை வழக்கமாக்கிக்கொள்ளாதவர்கள் ஜிம்முக்குச்சென்று செலவழித்துக்கொண்டிருக்கும் காட்சி வெளிநாடுகளில் மட்டுமல்ல எமது தாயகத்திலும் தொடருகிறது.
நடைப்பயிற்சிக்கு பணச்செலவுகள் இல்லைத்தானே.
நடடா ராஜா நடடா—-
ஆகா மெல்ல நட மெல்ல நட—
நடையா— இது நடையா — நாடகம் அன்றோ நடக்குது என்றெல்லாம் திரைப்படப்பாடல்களும் இருக்கின்றன.
தனியே நடக்கும் பொழுது நனைவிடை தோயலாம். எம்மை நாமே புலன் விசாரணைக்குட்படுத்தலாம். சுயவிமர்சனமும் செய்துகொள்ளலாம். கடந்துசென்ற காலத்தை நினைத்து அகம் மகிழலாம். அந்த நாள் நெஞ்சிலே வந்ததே — என்று பரவசப்படலாம். எதிர்காலம் குறித்த திட்டங்களை மனதிற்குள் தீட்டலாம்.
ஆனால் – கடந்த காலமும் கையில் இல்லை. எதிர்காலமும் எம்மிடமில்லை. இருப்பது நிகழ்காலம். இந்நிகழ்காலத்தில் நடைப்பயிற்சியலாவது ஆரோக்கியத்தை தேடுகின்றோமே என்று ஆறுதல்படலாம்.
இலக்கியப்படைப்பாளிகள் எப்பொழுதும் ஆசனத்தில் அமர்ந்தே பேனையும் பேப்பரும் எடுத்து எழுதுகிறார்கள். அல்லது கணினியின் முன்னமர்ந்து விசைப்பலகையில் தட்டி எழுதுகிறார்கள். அவ்வாறு தொடர்ந்து நீண்ட நேரம் அமர்ந்திருப்பதும் ஆரோக்கியத்திற்கு கேடு என்று அறிந்த தகவலை கடந்த பத்தியில் எழுதியிருந்தேன்.
படைப்பாளிகள் சக படைப்பாளியுடன் நடைப்பயிற்சியில் ஈடுபடும்பொழுது பிடிக்காத மற்றுமொரு படைப்பாளி பற்றியும் உரையாடலாம். அல்லது குறிப்பிட்ட
படைப்பாளியிடத்திலிருக்கும் குறைகளை பட்டியலிட்டு விமர்சிக்கலாம். ஆனால் இந்த இரண்டுபேருக்கும் இடையில் எப்பொழுது முரண்பாடு வெடிக்கும் என்பது இருவருக்கும் அச்சமயம் தெரியாது.
பிறிதொரு நடைப்பயிற்சியில் இன்னார் இன்னாரைப்பற்றி இப்படி ஒரு நாள் சொன்னார் என்று சொல்லிக்கொண்டு புதிய நபருடன் நடைப்பயிற்சியில் ஈடுபடலாம்.
சில நேரங்களில் சில மனிதர்களைத்தான் இலக்கிய உலகில் அன்றாடம் பார்த்துவருகின்றோமே.
இலக்கியவாதிகள் அவ்வாறு புறம்பேசிக்கொண்டிருப்பதை விட்டு விட்டு – அன்று அல்லது அதற்கு முதல்நாள் வாசித்த இலக்கியப்படைப்புபற்றி உரையாடிக்கொண்டே நடைப்பயிற்சியில் ஈடுபடலாம்.
அவுஸ்திரேலியா – மெல்பனில் பெரும்பாலும் நான் தினமும் மாலையில் சுமார் ஒன்றரை மணிநேரம் ஒரு அழகிய பூங்காவையும் நீண்ட தடாகத்தையும் சுற்றி நடப்பேன். அந்தத்தடாகத்தில் வாத்துக்கள் எண்ணிறைந்து நீந்திக்கொண்டிருக்கும் காட்சி அலாதியானது. அந்த வாத்துக்கள் தரைக்கு வந்து நடைப்பயிற்சியில் ஈடுபடும். மனிதர்களின் நடமாட்ட அரவம் தெரிந்ததும் தடாகத்தினுள் இறங்கிவிடும்.
மனிதர்களுக்கு மழையும் குளிரும் நடைப்பயிற்சிக்கு எதிரியாக இருப்பதுபோன்று அந்த வாத்துக்களுக்கு மனிதர்கள்தான் எதிரியோ என்றும் நான் யோசிப்பதுண்டு.
அவ்வாறு நடக்கும் பொழுது அடுத்து எதனைப்படிப்பது எதனை எழுதுவது என்று யோசித்துக்கொண்டுதான் நடைப்பயிற்சியில் ஈடுபடுவேன். மனைவியையும் பேச்சுத்துணைக்கு அழைத்துச்சென்றால் நடைப்பயிற்சி பாதி தூரத்தில் நிறைவு பெற்றுவிடும். ஏன் என்று இங்கு சொல்வது அவசியமில்லை. நடைப்பயிற்சியில் இருவர் உலகமும் வேறு வேறு.
இலங்கை எழுத்தாளர்களுக்கு ஜீவநதியின் ஊடாக நான் சொல்ல விரும்புவது நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள். அந்தப்பயிற்சி உங்களை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச்செல்லும். நிச்சயமாக. அனுபவித்துப்பாருங்கள்.
மெல்பனில் எனது நல்ல நண்பர் – தன்னை ஒரு எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ளவிரும்பாத ஒருவர் இருக்கிறார். இதுவரையில் மூன்று நாவல்களும் தனது தொழில் சார் அனுபவங்களை சித்திரிக்கும் இரண்டு கதைத்தொகுப்புகளும் சில வருடகாலத்துள் எழுதியிருப்பவர். பெயர் நடேசன். அவர் ஒரு மிருக மருத்துவர்.
அவரைச்சந்திக்கச்சென்றால் – அவருக்கு ஓய்வு இருந்தால் நடப்போமா? என்றுதான் முதலில் கேட்பார். அவருடன் பல நாட்கள் நடந்திருக்கின்றேன். அவர் – தான் படித்த ஆங்கில நூல்கள் மற்றும் இலக்கிய விமர்சனங்கள் – உலக விவகாரங்கள் – அரசியல் – ஆன்மீகம் – பரிசுத்த வேதாகமம் – பகவத்கீதை – இராமாயணம் மகாபாரதம் – திரைப்படம் – தொலைக்காட்சி நாடகங்கள் பற்றியெல்லாம் பேசிக்கொண்டே வருவார். சுமார் இரண்டு மணிநேரங்கள் நடப்போம். அவர் வளர்க்கும் செல்லப்பிராணி சிண்டி என்ற நாய் எந்தச் சண்டித்தனமும் இல்லாமல் எம்முடன் நடந்துவரும்.
இந்த நடைப்பயிற்சியில் அந்தப்பிராணியும் நாமும் வேறு வேறு உலகங்களில் இருப்போம்.
அவருடனான நடைப்பயிற்சி எனக்கு பலன் தந்திருக்கிறது.
கோயம்புத்தூரில் இலக்கிய விமர்சகர் கோவை ஞானியுடனும் எழுத்தாளர் யுகமாயினி சித்தனுடனும் சுமார் ஒரு மணிநேரம் நடைப்பயிற்சியில் ஈடுபட்டேன். கோவை ஞானிக்கு பார்வை போய்விட்டது. அவர் எனது கரம் பற்றியவாறு நடைப்பயிற்சியில் ஈடுபட்டு இலக்கியம் பேசியதை மறக்க முடியவில்லை.
சில வேளைகளில் நான் நேசிக்கும் இலங்கை எழுத்தாளர்களும் அவ்வாறு நடப்பார்களா? என்று நான் அண்மைக்காலங்களில் யோசிப்பதுண்டு.
தெணியான் கரணவாயிலும் கலாமணி அல்வாயிலும் சட்டநாதன் நல்லூரிலும் யேசுராசா குருநகரிலும் சாந்தன் மானிப்பாய் சுதுமலையிலும் குந்தவை தொண்டமனாறிலும் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் கோப்பாயிலும் சஹானா கெக்கிராவையிலும் டொமினிக் ஜீவா மட்டக்குளியிலும் தெளிவத்தை ஜோசப் வத்தளையிலும் குணரத்தினம் அமிர்தகழியிலும் ஞானசேகரன் வெள்ளவத்தையிலும் மேமன்கவி புறக்கோட்டை பஸாரிலும் உமா வரதராஜன் கல்முனையிலும் மல்லிகை சி. குமாரும் மு. சிவலிங்கமும் மலையகத்திலும் மாத்தளை கார்த்திகேசு மாத்தளையிலும் திக்குவல்லை கமால் பண்டாரகமவிலும் ஏ. இக்பால் பேருவளையிலும் மு. பஷீர் மினுவாங்கொடை கள்ளொழுவையிலும் கோண்டாவிலில் சிவா சுப்பிரமணியமும் கிளிநொச்சியில் கருணாகரனும் நடந்துகொண்டிருப்பார்கள் என்ற எண்ணத்துடன் இதனை நிறைவு செய்கின்றேன்.
ஏனென்றால் அவர்கள் அனைவரும் என்னைப்போன்று ஐம்பது – அறுபதைக்கடந்துவிட்டவர்கள்தானே?
நடைப்பயிற்சியை தொடருங்கள். உங்களை அது புதிய உலகத்திற்கு அழைத்துச்செல்லும்.
( நன்றி : ஜீவநதி இதழ் யாழ்ப்பாணம் ஏப்ரில் 2014 )
