திரும்பிப்பார்க்கின்றேன்
வட கொரியாவின் கிம் இல் சுங்கை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதன் எதிரொலி :
சிறையில் சிலவருடங்கள் வாழ்ந்த முற்போக்கு எழுத்தாளர் எச்.எம்.பி.மொஹீதீன்
முருகபூபதி
இந்தியாவில் சுதந்திர போராட்ட காலம். ஒரு கிராமத்தில் காதலியை சந்திக்கச் சென்றவன் – அவள் வீட்டில் இரவுப் பொழுதை கழித்துவிட்டு -அதிகாலை வேளையில் காலைக்கடன் கழிக்க கிராமத்தை ஊடறுத்து ஓடும் ரயில் தண்டவாளப் பாதையில் அமருகிறான். கடன் கழியும் மட்டும் அவனது கரங்கள் சும்மா இருக்குமா? கற்களை பொறுக்கி தண்டவாளத்தில் தட்டி தாளம் எழுப்பினான்.
எதிர்பாராதவிதமாக பிரிட்டிஷ் சர்க்காரின் சிப்பாய்கள் அவ்விடத்திற்கு வந்துவிடுகிறார்கள். அந்தக் கிராமவாசி கைதாகின்றான். பிரிட்டிஷ் சர்க்காருக்கு எதிராகச் சதி செய்து தண்டவாளம் பெயர்த்து ரயிலை கவிழ்க்க முயற்சித்தான் என்பது அவன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. அவன் எவ்வளவோ மன்றாடியும் நீதிமன்றம் நம்பத் தயாரில்லை. பலன் சிறைவாசம்.
இந்தியா சுதந்திரமடைந்து அவனும் விடுதலையாகி தியாகி பட்டத்துடன் தனக்காகக் காத்திருக்கும் காதலியைக் காண்பதற்காக கிராமத்துக்குத் திரும்புகிறான்.
அவனுக்காக காதலி மட்டுமல்ல. கோலாகல வரவேற்பும் காத்திருந்தது. ஊர்ப் பொதுமக்கள் அவனுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச்சென்றனர் – மேடை அமைத்து புகழாரம் சூட்டினர். அவனுக்கு ஏதும் புரியவில்லை. – மலம் கழிக்கச் சென்ற எனக்கு சிறைத்தண்டனை. சிறை மீண்ட பொழுது தியாகி பட்டம் – மாலை மரியாதை – புகழ். இனிமேலும் உண்மையைச் சொன்னால் இந்த பாமரச்சனங்கள் நம்பமாட்டார்கள். கும்பலுடன் சேர்ந்து கொள்ளத் தீர்மானித்த அந்த சுதந்திரப் போராட்ட தியாகி நன்றி கூற எழுந்து பேசினான்.
அதிகார வெறி பிடித்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை வெளியேற்ற ஒரு தண்டாவளம் என்ன – பல தண்டவாளங்களையும் பெயர்த்து பல ரயில்களையும் கவிழ்க்க நான் தயார். எமது புரட்சிக்குப் பயந்துதான் அவர்கள் ஓடிவிட்டார்கள் – என்று முழங்கினான் அந்த சுதந்திர போராட்ட வீரன்(?) மக்கள் கூட்டம் எழுப்பிய கரகோஷம் வெகு நேரம் நீடித்தது.
எச்.எம்.பி. என அழைக்கப்படும் அவர் 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது கைதாகி சிறை வைக்கப்பட்டார். விடுதலையாகி வெளியே வந்த பின்பு ஆறுதலாக ஒரு நாள் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தான் ஏன் கைதாகினேன் – சிறை சென்றேன் என்ற தகவல்களை கூறாமல் மேற்படி குட்டிக்கதையைச் சொல்லி என்னை சிரிக்க வைத்தவர். எச்.எம்.பி. இவ்வாறு பல கதைகளை எனக்கும் நண்பர்களுக்கும் மேடைப் பேச்சுக்களின் போதும் சொன்னவர்.
குறிப்பிட்ட சுதந்திரப்போராட்டக்காலக்கதையை ( தியாகி ஆறுமுகமும் ஆகஸ்ட் புரட்சியும் ) எழுதியவர் கே. கணேஷ் என்பதை பின்னர் தெரிந்துகொண்டேன்.)
1971 இல் எச். எம்.பி. மொஹிதீன் கைதான சமயம். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பணிப்பாளர் சபையில் அங்கம் வகித்திருந்தார். கைதுடன் அந்தப் பதவியும் பறிபோனது.
வட கொரியாவின் கிம் இல் சுங் எழுதிய சில புத்தகங்களை அவரும் – அவர் மூலமாக அவரது ஆற்றல் மிக்க நண்பர்கள் சிலரும் மொழிபெயர்த்தனர். இந்த வேலைக்காக பணமும் கைமாறப் பட்டதாகவும் – பணம் பெற விரும்பாதவர்களுக்கு எச்.எம்.பி. வானொலிப்பெட்டி வாங்கிக் கொடுத்ததாகவும் கதைகள் உண்டு.
எச்.எம்.பி. கைதானதும் பல வதந்திகள் உலாவத் தொடங்கின. அவரது விரல் நகங்களில் ஊசிகள் ஏற்றப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
யாழ்ப்பாணம் சிறையிலிருந்து அவர் திடீரென விடுதலையானதுமே முதலில் தமது இலக்கிய நண்பர்களைத்தான் அவர் தேடிச் சென்றார். பின்னர் கொழும்பில் வசித்த தன் மனைவி பிள்ளைகளுக்காக யாழ்ப்பாணம் மாம்பழம் வாங்கிக்கொண்டு புறப்பட்டவர்.
எச்.எம்.பி. கைதான சமயம் மனைவி கர்ப்பிணி. இரக்கமின்றி அவரை சிறை வைத்தது அம்மையாரின் அரசு. எச்.எம்.பி . சிறை மீண்ட பின்பே குழந்தையைப் பார்த்தார். இது தான் எனது ஜெயில் பரிசு – என்று நண்பர்களுக்கு குழந்தையை அறிமுகப்படுத்தும்போது நாம் நெகிழ்ந்து விடுவோம்.
முதல் முதலில் அவரை கொழும்பு சட்டக்கல்லூரியில் பூரணி காலாண்டிதழ் அறிமுகவிழாவில் பார்த்த சமயம் முதலில் அவரின் கைவிரல்களைத்தான் தடவிப்பார்த்து நண்பனானேன். அவ்விரல்களில் காயங்களைத் தேடினேன். அன்றைய கூட்டத்திற்கு கு.விநோதன் தலைமை வகித்தார். பின்னாளில் இவர் அரசியலுக்கு பிரவேசித்து பின்பு ஒதுங்கிக் கொண்டார். அன்று மேடையேறி பூரணியை விமர்சித்த ஒரு சட்டக்கல்லூரி மாணவர் பின்னாளில் இலக்கியவாதியாக மட்டும் மிளிரவில்லை . அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். அவர்தான் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் அஷ்ரப்.
அக்காலப்பகுதியில் அங்கு சட்டம் பயின்ற மற்றுமொரு மாணவர் ஸ்ரீகாந்தா. இவரும் பின்னர் சட்டத்தரணியாகவும் அரசியல் வாதியாகவும் பிரபலமானவர்.
உரத்துப் பேசுவது – அட்டகாசமாய் சிரிப்பது எச்.எம்.பி. க்கே உரித்தான குண இயல்பு. ஒரு காலத்தில் தீவிர இடதுசாரியாக விளங்கிய எச்.எம்.பி. பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார். எழுத்து அவருக்கு ஆயுதமாகவே பயன்பட்டது. இன்றும் தமிழ் இலக்கிய உலகில் பேசப்படும் தமிழ்நாடு – சரஸ்வதி – யில் எழுதிய ஈழத்து எழுத்தாளர்களின் வரிசையில் எச்.எம்.பிக்கும் இடம் உண்டு.
ஜெயகாந்தன் – ரஷ்ய எழுத்தாளர் – மொழி பெயர்ப்பாளர் – ஃபுர்ணிக்கா முதலானோரின் அன்புக்கும் இவர் பாத்திரமாகக் காரணம் – ரஷ்யாவின் உக்ரேயின் கவிஞர் தராஸ் செவ் சென்கோவை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் எச்.எம்.பியும் ஒருவர் என்பதுதான்.
தமிழுக்கு அந்த உக்ரேயின் மகாகவியை அறிமுகப்படுத்திய மற்றுமொரு ஈழத்து எழுத்தாளர் எங்கள் கே.கணேஷ்.
எச்.எம்.பி. யின் அரசியல் – இலக்கிய வாழ்வு பல தடவைகள் தடம்புரண்டமை விமர்சனத்துக்கும் கவலைக்குமுரியது. அவருக்குக்கிட்டிய பணிப்பாளர் பதவியும் இந்தத் தடம்புரளலுக்குக் காரணமாயிருந்த போதிலும் அப்பதவியையும் அவர் தக்க வைத்துக் கொள்ளத் தவறினார்.
ரஷ்ய சார்பு கம்யுனிஸ்டாகவும் பின்பு சீன சார்பாளராகவும் மாறிய எச்.எம்.பி 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீமா அம்மையாரின் நண்பரானார். இந்த நட்பு வழங்கிய பதவிதான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் பணி.
சிறை மீண்ட எச்.எம்.பி. முழு நேர எழுத்தாளனாகவும் பத்திரிகையாளனாகவும் மாறினார். மீண்டும் ஸ்ரீமா அம்மையாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி – அவரது கட்சிப்பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் இணைந்தார்.
தினகரனில் அபியுக்தனாகி – பத்தி எழுத்தாளர்களின் வரிசையில் சேர்ந்தார். புதுக்கவிதையாளர்கள் பலர் புதிது புதிதாக அறிமுகமாவதற்கும் – பலர் கவிதை என்ற பெயரில் கவியுலகத்திற்கு அநியாயம் செய்வதற்கும் இந்த – அபியுக்தன் வழிவகுத்தார் என்பதும் கசப்பான உண்மை.
எச்.எம்.பி. யின் ஜர்னலிசம் – இன்வெஸ்டி கேட்டிங் ஜர்னலிசமாக மாறியதால் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கல்வி அமைச்சு முதலானவற்றுள் நிலவிய ஊழல்கள் பல அம்பலமாகின.
அபியுக்தனுக்கு எதிராக லேக்ஹவுஸ் நிர்வாகத்துக்கு பெட்டிஷன்களும் புறப்பட்டன. இறுதியில் அன்றைய கல்வி அமைச்சர் பதியுத்தீன் முகம்மதுவுடன் முரண்பட்ட எச்.எம்.பி. க்கு தினகரன் கதவடைப்புச் செய்தது.
எச்.எம்.பி . அபியுக்தன் என்ற பெயரிலேயே ஒரு பத்திரிகையை சிறிது காலம் வீம்பாக நடத்தி ஓய்தார்.
எச்.எம்.பி . பல நூல்கள் எழுதியபோதிலும் அவரது – அறிஞர் அஸீஸ் சில நினைவுகள் நூலே பரபரப்புக்குள்ளானது.
அறிஞர் அஸீஸ் சாஹிறாக் கல்லூரியின் முன்னாள் அதிபர். செனட்டர். பல படைப்பாளிகள் – பத்திரிகையாளர்கள் – கல்விமான்களின் ஆசான். பேராசிரியர் சிவத்தம்பி – தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் – எச்.எம்.பி . முதலானோரும் அஸீஸின் அன்புக்கும் அபிமானத்துக்கும் பாத்திரமான மாணவர்கள்.
அஸீஸ் மறைந்ததும் அவரது நினைவுகளை தினகரன் மூலம் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட எச்.எம்.பி. பின்பு அதனை நூலாக்கி வெளியிட்டார்.
அறிஞர் அஸீஸை மேன்மைப்படுத்தி வெளியான இந்நூலை விமர்சித்து ஷம்ஸ் – ஏ.இக்பால் – எம்.எஸ்.எம். இக்பால் முதலானோர் மற்றுமொரு சிறிய நூலை எழுதினார்கள்.
இந்நூலின் முன்னுரை சுமார் 60 பக்கங்கள் வரையில் நீண்டிருந்தது. இம் முன்னுரை கொழும்பில் சலசலப்பை ஏற்படுத்தியது. இலக்கிய வட்டாரத்தில் பலர் முகம் சுழித்தனர். எச்.எம்.பி. அனைத்தையும் மௌனமாக ரசித்து – சிரித்துவிட்டு மௌனமானார்.
பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த எஸ்.பொ. வெகுண்டார். அந்த நூலின் முன்னுரையினால் அவரும் பாதிக்கப்பட்டிருந்தார்.
ஒரே மூச்சில் இரவு பகலாக இஸ்லாமும் தமிழும் என்ற நூலை எழுதி வெளியிட்டார் எஸ்.பொ.
இலங்கையின் கலை – இலக்கியம் – அரசியல் உலகத்தின் நாற்றமெடுக்கும் பக்கங்கள் அம்பலமாகின. எழுத்தாளரை வெட்கித் தலைகுனிய வைத்த நூல் அது. பரபரப்பு நிலையானதல்ல . வெறும் பரபரப்பாக காற்றோடுதான் கலைந்து – கரைந்து விடும்.
அந்த நூலைப்பற்றி இன்று கேட்பாரில்லை. தேடுவாரில்லை. எச்.எம்.பி. யின் அஸீஸ் நினைவுகள் பலரைக் கவர்ந்தன. சில அத்தியாயங்கள் கண்ணீரை வரவழைத்தன. அஸீஸின் துணைவியார் மறைந்த சமயம் எச்.எம்.பி .சிறையில். எச்.எம்.பி. எழுதிய ஆறுதல் கடிதம் இலக்கிய நயம்மிக்கது. பின்னாளில் இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் இது பற்றி சிலாகித்து எழுதியதாக நினைவு.
நண்பர் மு.கனகராசன் – குறிப்பிடத்தகுந்த கடிதங்களின் வரிசையில் அந்தக் கடிதத்தையும் மறுபிரசுரம் செய்வித்தார் வீரகேசரியில். இந்தக் கடிதங்களின் வரிசையில் காந்தி – நேரு – பாரதி – வா.வே.சு. ஐயர் – அரவிந்தர் – கி.ராஜநாராயணன் முதலானோரின் கடிதங்களும் அடங்கின என்பதைக் கவனிக்கலாம்.
இடதுசாரி சித்தாந்தங்களில் ஊறி வாழ்ந்த எச்.எம்.பி. – முற்போக்கு இலக்கிய முகாமில் செயல்பட்ட எச்.எம்.பி. – மாக்ஸியத்தைப் போதனையாக ஏற்ற எச்.எம்.பி. – இனரீதியாக சிந்திக்கவும் செயல்படவும் தொடங்கியபோது எனக்கே அவர் மீது பல ஐயங்கள் தோன்றின. முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குப் பெறவேண்டும் என்ற ஆசையும் அவருள் தோன்றியிருக்க வேண்டும். இந்த ஆசை – முஸ்லிம் எழுத்தாளர் சங்கமாக பரிமாணம் பெற்றது.
பூபதி – வண்டிலுக்கு முன்பாக மாட்டை கட்டியிருக்க வேண்டும். நான் பின்புறம் கட்டியதனால் மாடும் நகரவில்லை – வண்டிலும் போகவில்லை – எனது இனத்தையும் மதத்தையும் மறந்து செயல்பட்டதும் – சிந்தித்ததும் – எழுதியதும் – பேசியதும் பெரிய தவறு என்று இப்பொழுது உணர்கின்றேன். இதனால்தான் எமது சமூகத்தின் ஆதரவை நான் பெரிதும் சம்பாதிக்கத் தவறிவிட்டேன் – என்று அரசியல்வாதிகளின் தோரணையில் ஒரு சமயம் கூறினார்.
துடுக்காகப் பேசுவதிலும் – தனது மனசுக்கு சரியெனப் பட்டதை தயங்காமல் சொல்வதிலும் முன்னிற்கும் எச்.எம்.பி. க்கு அவரது பேச்சும் எழுத்துமே எதிரிகளாகிய உண்மையை அவர் பிற்காலத்தில் உணர்ந்தார்.
நிதானமிழந்த செயல்கள் அவை என்றும் வருந்தினார்.
அநுரா பண்டாரநாயக்காவிடம் – தமது இனத்தின் நிலைமையை எடுத்துக் கூறும்பொழுது – இலங்கையில் மிகப்பெரிய செல்வச் சீமான்களாவும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். அதே சமயம் அடுத்த வேளைக்கு உணவு தேடும் ஏழைப் பராரிகளாவும் வாழ்கின்றனர். வெள்ளிக் கிழமைகளில் பள்ளிவாசல்களின் பக்கம் போனால் இந்த உண்மை தெரியும் – என்றார்.
உண்மைகள் சுடும் – அவை கசப்பானவை – எச்.எம்.பி. பல உண்மைகள் சொன்னார். யதார்த்தவாதி – வெகுசனவிரோதி என்பதற்கு எங்கள் எச்.எம்.பி.யும் ஒரு உதாரணம்.
எழுத்தாளர் – பத்திரிகையாளர்களுக்கு அவர் ஒரு பாடம்.
பாரதி விழாவுக்காக எச்.எம்.பி.யை ஒரு சமயம் நீர்கொழும்புக்கு அழைத்துச் சென்றேன். மண்டபம் நிறைந்து மக்கள். ஸ்ரீமா அம்மையாரின் அரசுக்கு எதிராக தமிழர் கூட்டணி அமைத்த காலம் அது. தமிழ் இளைஞர் பேரவை உருவாகிய வேளை. சுதந்திரனில் கோவை மகேசன் நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்தார். எங்கள் ஊர் பாரதி விழாவில் எச்.எம்.பி. பேசுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும் கதைகள் பரப்பப்பட்டிருந்தன. தடைகள் தெரிந்தும் எச்.எம்.பி. வந்து சிறப்பாகப் பேசினார்.
இவ்விழாவில் சட்டத்தரணி சகுந்தலா சிவசுப்பிரமணியம் ( இவர் அற்பாயுளில் காலமாகிவிட்டார்) எம்.ஸ்ரீபதி ( இவர் பின்னாளில் பருத்தித்துரை ஹார்ட்லி கல்லூரியின் அதிபராக பணியிலிருந்தவர்)
என்ன கொடுமையிது வென்று பார்த்திருந்தார்.
ஊரவர் தங்கீழ்மை உரைக்குந் தரமாமோ?
வீரமிலா நாய்கள் – விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே
பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல்
நெட்டைமரங்களென நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமே
என்ற பாரதியின் கவிதை வரிகளைப் பாடினார். விளக்கவுரை சொன்னார். கூட்டம் அமைதியாக செவிமடுத்தது. அதன்பின்னர் வந்தது விபரீதம். எச்.எம்.பி. தமிழர்களை நாய் என்று அழைத்துவிட்டார் என்று கதை கட்டி விட்டார்கள். சுதந்திரனும் காத்திருந்து விஷம் கக்கியது. பின்பு எச்.எம்.பி. சொன்னார். கதை எழுதுவார்கள் – கதை பேசுவார்கள் – கதையும் கட்டுவார்கள். இது சாபக்கேடு விட்டுத் தள்ளுங்கள்.
எச்.எம்.பி. மொஹிதீனுடன் இணைந்து கொழும்பு – குருநாகல் – நீர்கொழும்பு முதலான பிரதேசங்களில் சில இலக்கியக்கூட்டங்களிலும் உரையாற்றியிருக்கின்றேன். மினுவாங்கொடையில் நடந்த கூட்டமொன்றில் அவர் அல்லாமா இக்பால் பற்றி உரையாற்றியபொழுது உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார். அதனைப்பார்த்த சபையினரும் அழுதுவிட்டார்கள். அவ்வாறு உணர்ச்சிகரமாகப் பேசவல்ல எச்.எம்.பி. பழகுவதற்கு இனிமையானவர். எவருடனும் சகஜமாக பேசுவார். பந்தாக்கள் அற்ற பண்புகள் அவரிடம் இருந்தன. அவர் சொன்ன பல சுவாரஸ்யமான கதைகள் அவரைப் போன்று நெஞ்சில் பதிந்தவை.
( இந்தப்பதிவிற்காக எச்.எம்.பி.யின் ஒளிப்படம் தேடினேன். கிடைக்கவில்லை)
letchumananm@gmail.com
