இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை
முரண்படுதலுக்கான காரணத்தைவிட
ஒன்றுபடுதலுக்கான காரணம் வலிமையானது
முருகபூபதி
திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்திற்கு என்னைத்தேடி வந்த இருவரையும் எனக்குத்தெரியாது. ஆனால் வந்தவர்கள் இலக்கியவாதிகள்தான் என்பதை புரிந்துகொள்ள முடியாவிட்டால் நான் இலக்கியவாதி அல்ல.
ஒருவர் தளம் இதழின் ஆசிரியர் பா.ரவிக்குமார் என்ற பாரவி. இவர் மறைந்த பிரபல எழுத்தாளர் அகிலனின் மகள் கற்பகவல்லியின் கணவர். நீட்சி என்ற சிறுகதைத்தொகுப்பை வெளியிட்டவர். அர்த்தம் இயங்கும் தளம் என்ற தொகுப்புநூலில் பாரவியும் தேவகோட்டை வா.மூர்தியும் எஸ்.சுவாமிநாதனும் எழுதியிருக்கிறார்கள். மற்றவர் தமிழகத்தில் மட்டுமன்றி இலங்கையிலும் அறியப்பட்ட திருக்குறள் முனுசாமியின் புதல்வர் ஞானசூரியன்.
அறிமுகமாகிக்கொண்டோம்.
அன்றைய சந்திப்பு விஜயராகவன் இல்லத்தில் எனச்சொன்னார்கள். திருவல்லிக்கேணி வீதிவழியே அழைத்துச்சென்றார்கள். விஜயராகவன் ஐயங்கார். அவரது நெற்றியில் துலங்கிய நாமம் அவரை அடையாளப்படுத்துகிறது. படித்துறை என்ற சிற்றிதழை நடத்தியவர். Silent Streams என்பது விஜயராகவன் மொழிபெயர்த்து தொகுத்திருக்கும் கவிதைகளின் ஆங்கிலமொழிபெயர்ப்பு. அவர் எனக்குத்தந்த படித்துறை இதழ்கள் மிகவும் தரமானவை. படைப்புகள் கனதியானவை.
நதியில் வருவது படித்துறையில் ஒதுங்கும். அது இயற்கை. இந்தக்குறியீடுதான் தேர்ந்த வாசகர்களை உள்ளே அழைக்கிறது என நினைக்கின்றேன்.
அப்துல்ரகுமான், பிரம்மராஜன், சி.சு.செல்லப்பா, தேவதச்சன், ஞானக்கூத்தன், ஜெயமோகன், கலாப்பிரியா, கல்யாண்ஜி, கனிமொழி, மகுடேஸ்வரன், பாவண்ணன், பிரமீள், தமிழன்பன், தாமரை, வைதீஸ்வரன், விக்கிரமாதித்தியன், யுகபாரதி முதலான இலக்கியஉலகில் மிகுந்த கவனிப்புபெற்ற படைப்பாளிகள் உட்பட 82 கவிஞர்களின் கவிதைகளை விஜயராகவன் Silent Streams இல் மொழிபெயர்த்திருக்கிறார்.
தவிர சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் பதிப்பித்த படித்துறைக்கு ஆசிரியராக பணியாற்றியவர் கவிஞர் யுகபாரதி. திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதியிருப்பவர். விஜயராகவன் சிறந்த மொழிபெயர்ப்பாளர். அவர் மொழிபெயர்த்த மலையாள சிறுகதையை தளம் இதழில் படித்திருந்தேன். இவர்களை சந்திப்பதற்கு முன்பே யுகமாயினி சித்தன் தளம் இதழ்களின் பிரதிகளை கோயம்புத்தூரில் எனக்குத்தந்திருந்தார்.
அதில் எனது கண்ணுக்குள் சகோதரி என்ற படைப்பும் நண்பர் நடேசனின் குற்றமும் தண்டனையும் சிறுகதையும் பிரசுரமாகியிருந்தன. குறிப்பிட்ட தளம் முதலாவது இதழ் 2013 ஜனவரியில் வெளியானது. எழுத்துச்சித்தர் சி.சு. செல்லப்பா நூற்றாண்டு சிறப்பிதழாக வெளியாகியிருக்கிறது. கி.அ.சச்சிதானந்தம், ந.முத்துசாமி, எஸ்.வைதீஸ்வரன், ஆரூர்.புதியவன், எஸ்.சுவாமிநாதன், வீ. விஜயராகவன், ஆகியோர் சி.சு. செல்லப்பாவின் ஆளுமைகளை விபரித்தும் திறனாய்வுசெய்தும் எழுதியிருக்கின்றனர். தவிர, வே. சபாநாயகம், சார்வாகன், பாரவி, எஸ்.பொ, அம்பை, எஸ்.எம்.ஏ. ராம், ஞானக்கூத்தன், ஆ.ரவிச்சந்திரன், எஸ்.ஷங்கரநாராயணன், சித்தன், யுகபாரதி, கோ. தெய்வசிகாமணி, சுப்ரபாரதிமணியன் முதலான முக்கிய படைப்பாளிகளின் ஆக்கங்களும் இடம்பெற்றுள்ள 160 பக்கங்களைக்கொண்ட தளம் முதலாவது இதழ் மிகவும் கனதியானது.
வழக்கமாக ஒரு சிற்றிதழ் வெளியாகும்பொழுது சில பிரகடனங்களையும் சுமந்துவரும். தளம் இதழின் பிரகடனம் ஒரு பக்க பிரசுரமாக இதழுடன் தரப்பட்டிருந்தது.
வாசகர்- படைப்பாளி- வாசகர்-விமர்சகர் என 1970 களிலிருந்து தமிழ் சிற்றேடுகள், தீவிரமான இலக்கிய இதழ்கள் முனைப்பான படைப்பிலக்கிய தளத்தை உருவாக்கியுள்ளன. தமிழ்நாடு – தமிழ்பேசும் அனைத்து பகுதிகளிலிருந்தும் இம்முனைப்பு காரணமாக படிப்புத்திறனும் படைப்புத்திறனும் வலுப்பெற்றன.
இத்தொடர் ஓட்டத்தில் இப்போது தளம் கலை இலக்கிய இதழ் இணைந்துள்ளது. வலுவான, முனைப்பான, தீவிரமான வாசக வளையங்களை தமிழ் இளைஞர்களிடையே உருவாக்கி, கூர்மையான விவாதங்கள் மூலம் திக்குத்தெரியாத எழுத்தாக படைப்பிலக்கியம் செல்லும் நிலையிலிருந்து மீட்டு நோக்கப்படுவது சாத்தியம் என தளம் கருதுகிறது.
இம்முயற்சியில் இவ்விதழை மேலும் உரிய தளத்திற்கு எடுத்துச்செல்ல, வரக்கூடிய புதிய- இளம்படைப்பாளிகளை தளம் வரவேற்பதுடன், அவர்கள் வசம் இத்தளத்தை மாற்றித்தந்து செல்லவேண்டும் எனக்கருதுகிறது. எனவே, முனைப்பான வாசகர்களின் படைப்பாளிகளின் உறுதுணையை எல்லாவகையிலும் தளம் எதிர்நோக்குகிறது.
இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப்பிரசுரத்தின் இறுதிவரிகள் முக்கியமானவை.
முரண்படுவதற்கான காரணங்களைக்காட்டிலும், ஒன்றுபடுதலுக்கான ஒன்றுபட்டு செயல்படுவதற்கான காரணங்கள் வலுவானவை.
இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் நானறிந்தவரையில் சிலர் ஒன்றிணைந்து வெளியிட்ட இதழ்கள் காலப்போக்கில் முரண்பாடுகளினால் – மனவேற்றுமைகளினால் நின்றுவிட்டன. அதுபோன்று அமைப்புகளும் செயல் இழந்தன. இலங்கையில் தனிமனித உழைப்பை மாத்திரம் நம்பி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளியான மல்லிகை தற்போது அதன் எதிர்காலம் குறித்து கேள்விக்குறியோடு நிற்பதாக அறிந்தேன். வணிக இதழ்களுக்கு வாரிசுகள் இருந்தனர். அதனால் வணிக இதழ்கள் தொடருகின்றன. இலட்சியத்திற்காக தொடங்கப்பட்ட இதழ்கள் இலட்சங்களை தொலைத்துவிட்டன.
தளம் இதழின் எதிர்காலமும் வாசகர்களின் ஆதரவில்தான் தங்கியிருக்கிறது. விஜயராகவன் இல்லத்திற்குச்சென்றதுமே முதலில் அறிமுகப்படலம். சமகால இலக்கிய உலகம் முதல் இலங்கையில் அரசியல் நிலைவரம் வரையில் பேசினோம்.
பரஸ்பரம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் ஏராளமிருந்தன.
சோஷலிஸ யதார்த்தவாதப்படைப்புகள், பின்நவீனத்துவப்படைப்புகள், மெஜிக்கல் ரியலிஸ படைப்புகள் பற்றியெல்லாம் எங்கள் உரையாடல் நீண்டது.
பாரிசில் வெளியான எக்ஸில், உயிர்நிழல், இலங்கையில் வெளிவரத்தொடங்கியுள்ள மகுடம் முதலான இதழ்கள் பின்நவீனத்தவ படைப்புகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை சுட்டிக்காட்டினேன்.
பின்நவீனத்துவம் என்றபெயரில் வெளியாகும் படைப்புகளை யதார்த்தவாத பிரதிகளை எழுதுவோர் நிராகரிக்கின்றனர். தற்காலத்தில் திரைப்படங்களும் பின்நவீனத்துவ பாணியில் வெளியாகின்றன. பலருக்கு அவற்றை புரிந்துகொள்வதும் சிரமமாக இருக்கிறது.
கட்டுடைப்பு குறித்து விவாதங்கள் தொடருகின்றன. சில பின்நவீனத்தவ எழுத்துக்களில் கெட்டவார்த்தைகளும் இடம்பெறுவதாகச்சொன்னேன். தெருவோர சுவர்கள் பொதுக்கழிப்பிடங்களில் வரையப்பட்ட ஆணுடல், பெண்ணுடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட சித்திரங்களை அடிப்படையாகவைத்து பாரிஸில் வெளியான தமிழ் இதழில் பதிவான கட்டுரை பற்றி குறிப்பிட்டேன்.
அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி ஆகியோரின் படைப்புகள் தொடர்பாகவும் பேசினோம். புலிகள் குறித்து ஷோபாசக்தி தனது கொரில்லா நாவல் உட்பட ஏனைய படைப்புகளில் முன்வைத்துள்ள கடுமையான விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார் ஞானசூரியன்.
அவர் தனக்கு நேர்ந்த அனுபவங்களின் பின்புலத்திலிருந்துதான் அவற்றை எழுதியிருக்கவேண்டும். என்றேன்.
போருக்குப்பின்னர் அங்கு களத்தில் நின்ற சில படைப்பாளிகளின் தற்கால எழுத்துக்களைப்படித்தால் பல உண்மைகள் தெளிவாகும் என்றும் இலங்கையில் போருக்கு முந்திய இலக்கியம், போர்க்கால இலக்கியம், போருக்கு பிந்திய இலக்கியம் என்று வகைப்படுத்தவேண்டியிருக்கிறது. திறனாய்வாளர்கள் இதுவிடயத்தை தவிர்க்கமுடியாது எனவும் குறிப்பிட்டேன்.
இந்த உரையாடலிலும் இலங்கையில் நாம் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றி அவர்கள் பிரஸ்தாபித்தனர். கோயம்புத்தூரில் கோவைஞானியிடம் சொன்னதையே இவர்களுக்கும் தெரிவித்தேன்.
“இலங்கை அரசின்மீதான போர்க்குற்றத்திற்காக இலங்கையில் வாழும் படைப்பாளிகளை தமிழகம் தண்டிக்கமுடியாது. தமிழுக்காக இரத்தமும் சிந்தி உரிமைகளையும் உடைமைகளையும் பறிகொடுத்த மக்கள் மீண்டும் உயிர்ப்புடன் எழவேண்டும். அவர்களின் அண்மைக்கால படைப்புகள் தமிழகத்தில் அறிமுகமாகவேண்டும். இலங்கைப்பிரச்சினைகளை தங்களின் சுயஅரசியல் ஆதாயத்திற்காகவே பயன்படுத்திவரும் தமிழக அரசியல்வாதிகளின் நீரோட்டத்தில் தமிழக படைப்பாளிகளும் கரைந்துவிடக்கூடாது.
ஒரு தடவை இலங்கைக்கு வாருங்கள். எங்கள் மக்களையும் எங்கள் படைப்பாளிகளையும் சந்தியுங்கள். எங்கள் மத்தியில் நீடிக்கும் இடைவெளிகுறையும்.” எனச்சொன்னேன்.
மாலை 4 மணிக்கு தொடங்கிய சந்திப்பு உரையாடல் இரவு 7 மணிவரையில் நீடித்தது. அந்தச்சந்திப்பு பயனுள்ளது. இடம்பெற்ற உரையாடலை பதிவுசெய்வதற்கான சாதன வசதிகள் இல்லாமல்போய்விட்டதே என்ற மனக்குறையுடன் அவர்களிடமிருந்து விடைபெற்றேன்.
பாரவி, என்னை திருவல்லிக்கேணியில் பஸ்ஸில ஏற்றிவிடும்பொழுது இரவு 8 மணியும் கடந்துவிட்டது.
அந்த பஸ்ஸில் ஜனநெரிசலுக்குள்ளும் வளசரவாக்கம் வந்து இறங்கும்வரையில் மட்டுமன்றி அவுஸ்திரேலியா திரும்பியபின்னரும், பின்வரும் கருத்தே என்னை ஊடுருவியிருந்தது.
முரண்படுவதற்கான காரணங்களைக்காட்டிலும், ஒன்றுபடுதலுக்கான ஒன்றுபட்டு செயல்படுவதற்கான காரணங்கள் வலுவானவை.
இது இலக்கியத்திற்கு மட்டுமல்ல குடும்பங்களுக்கும் நட்புகளுக்கும் இனங்களுக்கும் தேசங்களுக்கும் பொருத்தமானது.
(பயணங்கள் தொடரும்)
