Quantcast
Channel: Noelnadesan's Blog
Viewing all articles
Browse latest Browse all 736

இலக்கிய ஆளுமைகளின் நடுவே ஒரு யாத்திரை

$
0
0

பயணியின் பார்வையில்-                                முருகபூபதிwith Chithan சித்தனுடன்
With Chinnapabarathy

 சின்னப்பாபாரதியுடன்

தமிழ்நாட்டில் நாமக்கல் என்றவுடன் முன்பு எனது நினைவுக்கு வருபவர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். ஆனால் சமகாலத்தில் நினைவுகளில் தங்கியிருப்பவர் படைப்பிலக்கியவாதி கு. சின்னப்பபாரதி.
இலங்கையில் நாம் 2011 ஜனவரியில் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு எதிராக தமிழகத்திலிருந்து குரல் ஓங்காரமாகவும் அகங்காரமாகவும் ஒலித்தவேளையில் அதனை அசட்டைசெய்துவிட்டு மனசாட்சியின் குரலை ஒலித்தவாறு வந்து கலந்துகொண்டவர். ஈழத்து இலக்கிய உலக நண்பர்களின் அன்புக்கு பாத்திரமானவர்.
இந்த ஆண்டு ஜனவரி இறுதியில் இலங்கையிலிருந்து புறப்படும் தருவாயில் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். தமிழகம் வரும்போது அவசியம் வருமாறு கேட்டுக்கொண்டார். வேலூர் வந்ததும் நாமக்கல்லுக்கு வரும் பாதையை அவரிடம் கேட்டுத்தெரிந்துகொண்டேன். தற்போது கோவையில் இருக்கும் யுகமாயினி ஆசிரியர் சித்தன், என்னைத்தொடர்பு கொண்டார். தானும் நாமக்கல்லுக்கு வந்து என்னைச்சந்திப்பதாகவும் பின்னர் அங்கிருந்து என்னுடன் கோவை வந்து இலக்கிய விமர்சகர் கோவை ஞானியை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் சொன்னாரர். இந்தப் பயண நிகழ்ச்சியை ஒழுங்குசெய்துகொண்டோம்.
சின்னப்பபாரதியும் கோவை ஞானியும் எனது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். கோவை ஞானியின் விமர்சனங்களை, நேர்காணல்களை ஏற்கனவே படித்திருந்தபோதிலும் அவருடன் எனக்கு வேறு எந்தத்தொடர்புகளும் இருக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த நண்பர் நடேசனின் வாழும் சுவடுகள் முதலாவது தொகுப்பிற்கு அணிந்துரை எழுதியிருக்கும் ஞானி, அதில் எனது குறிப்புகள் பற்றியும் பதிவுசெய்திருந்தார். அவர் எனது வேறு எந்தப் படைப்பும் படிக்காமலேயே என்னைத் தெரிந்துவைத்துக்கொண்டதற்கு நாம் நடத்திய மாநாடும் ஒரு காரணம். நான் அவரைப்பார்க்கவரவிருப்பதாக சித்தன் அவரிடம் சொன்னதும், வியப்பு மேலிட “ அந்த முருகபூபதியா?” எனக்கேட்டிருக்கிறார்.
திட்டமிட்டவாறு வேலூரிலிருந்து எனது பயணத்தை ஆரம்பித்தேன். எனது பயண ஒழுங்கை கவனித்த தம்பியின் மனைவி ( அவர் வேலூரில் ஒரு மருத்துவதாதியாக பணியாற்றுகிறார்) தெலைதூரம் பயணம் மேற்கொண்டு உடல் உபாதைகளை தேடிக்கொள்ளவேண்டாம் என்று எச்சரித்தார். யாத்திரிகனாக அலைபவனுக்கு அலுப்பு சலிப்பு வராது. நோய் நொடியும் அண்டமாட்டாது எனச்சொல்லிவிட்டு, எனக்குரிய மருந்து மாத்திரைகளுடன் இந்த நீண்ட பயணத்தை ஆரம்பித்தேன். ஆம் என்னைப்பொறுத்தவரையில் நீண்ட பயணம்தான்.
இரண்டு பெரிய இலக்கிய ஆளுமைகளை சந்திக்கப்போகும் உணர்வுடன் சேலத்துக்கு பஸ் ஏறினேன். சேலத்தில் ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்த மொடர்ன் தியேட்டர்ஸ் தற்போது பாழடைந்துவிட்ட செய்தி கேள்விப்பட்ட நாளிலிருந்து அதன் தற்போதைய கோலத்தையும் பார்க்கவேண்டும் என்ற விருப்பம் எனக்கிருந்தது. ஒரு இதழில் அதன் சிதைவுகளின் படத்தை பார்த்திருக்கின்றேன். நூற்றுக்கணக்கான பல மொழி திரைப்படங்களை உருவாக்கிய நிறுவனம்.
நான் பயணித்த பாதையில் அது அமைந்திருக்கவில்லை என்பது சற்று ஏமாற்றம்தான். சேலம் – ஏற்காடு பாதையில் மொடர்ன் தியேட்டர்ஸ் ஸ்ரூடியோ அமைந்திருந்ததாக சின்னப்பபாரதியை சந்தித்தபோது அவர் சொன்னார்.
சேலத்தில் இறங்கி நாமக்கல்லுக்கு புறப்பட்டேன். பஸ் எந்தத்தாமதமுமின்றி என்னை நாமக்கல்லில் இறக்கிவிட்டது. ஒரு ஓட்டோவில் ஏறியதும் சின்னப்பபாரதியை கைத்தொலைபேசியில் தொடர்புகொண்டதும் அவர் தமது இல்லத்துக்கு வரும் பாதையை அந்த ஓட்டோ சாரதிக்கு தெளிவாகச்சொன்னார். சில நிமிடங்களில் அவரது செல்லம்மாள் இல்லத்தின் வாசலுக்கு வந்துசேர்ந்தேன். அவர் வாசலில் காத்திருந்து என்னை அரவணைத்து வரவேற்றார்.
அந்த இல்லம் அமைந்துள்ள பிரதேசம் ரம்மியமானது. அருகே அழகிய குன்று. சில கணங்கள் அந்த இல்லத்தின் சுற்றுப்புறத்தை ரசித்தேன். ஏற்கனவே பல இலக்கியவாதிகளதும் இடதுசாரி அரசியல், தொழிற்சங்கவாதிகளினதும் கால் பதிந்த இல்லம்.
சின்னப்பபாரதியின் பிரத்தியேக அறை சிறிய நூலகமாகவே காட்சி தருகிறது. அந்த இல்லத்தின் பின்புறம் சோலையாக காய், கனிகளுடனும் உயிர்ச்சத்துகள் நிரம்பிய கீரைவகைகள் பயிரிடப்பட்ட தோட்டமாகவும் காட்சியளிக்கிறது.
பல மணிநேரங்கள் சின்னப்பபாரதியுடன் உரையாடினேன். அவரது வாழ்வும் பணிகளும் இடதுசாரி இயக்கத்துடனும் முற்போக்கு இலக்கிய முகாமுடனும் பின்னிப்பிணைந்திருக்கின்றன.
தமிழில் அவரால் படைக்கப்பட்ட பல படைப்புகள் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்திய மொழிகளில் மட்டுமன்றி ஐரோப்பிய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. அவரது பெயரில் ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக விருதுகளும் பணப்பரிசில்களும் வழங்கப்படுகின்றன. தமிழகத்தவர் மட்டுமன்றி இலங்கை மற்றும் புகலிட நாடுகளைச்சேர்ந்தவர்களும் அந்த விருதுகளையும் பணப்பரிசில்களையும் பெற்றிருக்கின்றனர். இந்தத்தகவல்கள் சின்னப்பபாரதியைப்பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு பழையதுதான்.
சின்னப்பபாரதியின் “பவளாயி” நாவலை உஸ்பெக்கிஸ்தான் மொழிக்கு மொழிபெயர்த்துள்ள லோலா மக்தூபா என்ற பெண்மணி உஸ்பெக்கிஸ்தானில் அமைந்துள்ள தாஸ்கண்ட் ஸ்டேட் இன்ஸ்ரிரியூட் ஒஃப் ஓரியண்டல் ஸ்டடிஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப்பணியாற்றுபவர். அவரும் நாமக்கல்லுக்கு வந்துள்ளார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் தமிழ் இலக்கியம் கற்றுள்ளார்.
சின்னப்பபாரதியின் பவளாயி நாவலை உஸ்பெக் மொழிக்குத்தந்துள்ள அவர், தான் மேலும் தமிழைக்கற்றுக்கொண்டு, உஸ்பெக் இலக்கியங்களை தமிழுக்கும் தமிழ் இலக்கியங்களை உஸ்பெக் மொழிக்கும் பெயர்ப்பதுதான் தனது இலக்கியப்பயணம் என்று தினமணிக்கதிருக்கு வழங்கியுள்ள நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கு போதியளவு ஊக்கமும் களமும் இருந்தால் இந்தத்துறை ஆரோக்கியமாக வளரும். சின்னப்பபாரதி மொழிபெயர்ப்புத்துறைக்கு பக்கபலமாக இருந்துவருபவர். சமீபத்தில் அவரது சர்க்கரை நாவல் இலங்கையில் சிங்கள மொழியில் அறிமுகமானது அறிந்ததே. இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளிடத்தில் பேரன்பும் அபிமானமும் கொண்டிருக்கும் அவர், உபாலி லீலாரத்தின முதலான சிங்கள படைப்பாளிகளிடத்திலும் அன்பும் மரியாதையும் செலுத்துபவர்.
தனது இளமைப்பருவத்து பாடசாலைக்காலத்திலிருந்து வரித்துக்கொண்ட கொள்கையிலிருந்தும் வழுவாதவர். “ எந்தச்சூழ்நிலையிலும் எப்படிப்பட்டவர்களிடத்தும் தான் காணும் தவறுகளை எடுத்துரைக்கத்தவறாத இயல்பும் அதேவேளை தனது தவறுகளை எவரேனும் சுட்டிக்காட்டினால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும்” அவரிடம் இருக்கிறது. அதுவே அவரது வழுவாத கொள்கை.
“படைப்பாளி என்பவன் தனது படைப்பிற்கும் மேம்பட்டவனாக விளங்கவேண்டும்” என்ற இலக்கியமேதை மக்சிம் கோர்க்கியின் சிந்தனையை உள்வாங்கியவாறு இலக்கிய மற்றும் தான் சார்ந்துள்ள அரசியல் இயக்கத்திலும் பயணித்துக்கொண்டிருப்பவர்.
1935 இல் சாலைவசதியும் மின்சாரமும் இல்லாத ஆனால் இயற்கை எழில்கொஞ்சும் பொன்னரிப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர், தனது கிராமம் பற்றி தனது ‘ என் பணியும் போராட்டமும்” என்ற நூலில் இப்படி விவரிக்கின்றார்:-
“எங்கு பார்த்தாலும் வேம்பு, வாதநாரை, ஊஞ்சை, கறுவேல், பனை, நொச்சி, பூவரசு, கொடுக்காப்புளி, மின்னல், அரளி…இப்படியான மரங்கள் நீர்ப்பாசனத் தோட்டத்துக்கரைகளிலும் வெள்ளவாரிக்கரைகளிலும் புஞ்சைக்காடுகளிலும் விரிந்து பறந்து பருவங்களுக்கேற்ப இயற்கை மணத்தை பரப்பிக்கொண்டிருக்கும்.”
இவரைப்போன்று இயற்கையை இப்படி நேசித்த பல படைப்பாளிகளை நாம் பார்த்திருக்கின்றோம்.
கலைஞர் கருணாநிதிதான் செம்மொழி அந்தஸ்துக்கு பாடுபட்டவர் என்றுதான் அந்த மாநாடு கோவையில் நடந்தபோது பலரும் பேசிக்கொண்டார்கள்.
ஆனால் பலவருடங்களுக்கு முன்பே, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டுமென்று கோரி டில்லியில் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனுகொடுத்திருக்கிறது. அந்தத் தூதுக்குழுவில் அங்கம் வகித்தவர் சின்னப்பபாரதி. அந்தப்பயணத்தின்போது உடன்வந்த இலக்கியவாதிகள், இயக்கத்தோழர்களின் வேண்டுகோளை ஏற்று பின்னாளில் தமது சுயவரலாற்றை எழுதியிருக்கிறார்.
இரண்டு பெண்பிள்ளைகளுக்குத் தந்தை. சற்று வசதியோடு வாழ்ந்தாலும் எளிமையாக இருப்பவர். அவரதும் அவரது அன்புத்துணைவியார் செல்லம்மாள் அவர்களினதும் அன்பான உபசரிப்பினால் நெகிழ்ந்தேன்.
அவரது நூலக அறையில் சுவரில் காட்சி அளித்த அவரது மருமகனின் படம் எமக்கு அதிர்வுகலந்த செய்திகளை சொல்கிறது.
மூத்த மகளின் கணவர் அவர். பெயர் இளங்கோ. ஒரு விஞ்ஞானி. பாரத ரத்னா அப்துல்கலாமுடன் பெங்களுரில் பணியிலிருந்தவர். அங்கு ஒரு விமானத்தில் பயிற்சியிலிருந்தபோது எதிர்பாராத விபத்தினால் கொல்லப்படுகிறார். அந்தச்சம்பவம் விதியின் சதிதான்.
பரீட்சார்த்த பயிற்சி என்பதனால் மருமகன் ஒரு பயணம் புறப்பட்டிருக்கிறார். ஆனால் ரயிலை தவறவிட்டு மீண்டும் பயிற்சி நடந்துகொண்டிருந்த விமானத் தளத்திற்கு வருகிறார். அங்கு பயிற்சிதொடருகிறது. ஒரு விமான ஓட்டியை இறக்கிவிட்டு இவர் ஏறுகிறார். விமானம் பயிற்சியை தொடருகிறது. திடீரென்று விமானம் இயந்திரக்கோளாறினால் வெடித்து சிதறுகிறது.
அந்த விபத்தில் சின்னப்பபாரதியின் மருமகன் இளங்கோ உட்பட மூவர் கொல்லப்படுகின்றனர்.
அப்துல்கலாம் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்கிறார். சின்னப்பபாரதியின் மகளுக்கு பின்னர் அந்தத் தளத்தில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தருகிறார்.
கேரள இலக்கியத்தில் கவனிப்புக்குரிய படைப்பாளியாகவும் கேரள சட்ட மன்ற உறுப்பினராகவும் மாக்சீய அறிஞராகவும் விளங்கியவர் பி. கோவிந்தப்பிள்ளை, சின்னப்பாரதியின் அருமைத்தோழர். இடதுசாரித்தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரிப்பாத் அவர்களை சின்னப்பபாரதிக்கு அறிமுகப்படுத்தியவரும் கோவிந்தப்பிள்ளைதான்.
சின்னப்பபாரதியின் மருமகன் எதிர்பாராதவிதமாக விபத்தில் கொல்லப்பட்ட செய்தி அறிந்தவுடன் கோவிந்தப்பிள்ளை எழுதியிருந்த ஆறுதல்கடிதம் சற்று வித்தியாசமானது. ஈடுசெய்யமுடியாத இழப்புகளை தாங்கிக்கொள்வதற்கு இதுபோன்ற ஆறுதல்வார்த்தைகள் சிறந்த ஒத்தடம் என்பதானால் கோவிந்தப்பிள்ளை சின்னப்பபாரதிக்கு அனுப்பியிருந்த கடிதத்தை இங்கு பதிவுசெய்கின்றேன்.
“…..செய்தி அறிந்ததும் அதிர்ந்துபோய்விட்டேன். நேரில் வந்து உங்களுக்கு ஆறுதல் கூறவேண்டும். வேலைப்பளு முடியவில்லை. உங்கள் மருமகனின் இழப்பு உங்களுக்கு தனிப்பட்டமுறையில் பேரிழப்புத்தான். நமக்கெல்லாம் புரட்சிகரமான தத்துவம் இருக்கிறது. அது நம்மையெல்லாம் அத்துக்கத்திலிருந்து மீண்டெழத்தைரியமளிக்கும். இந்த நேரத்தில் மார்க்சுக்கு நிகழ்ந்த சோகத்தைக்கூறுகின்றேன். மார்க்ஸ் தனது ஒரே அன்பு மகன் காலமனது பற்றி ஆறாத்துயரில் மூழ்கியிருந்தார். அச்செல்வனுக்கு சத்துணவும் நோய்க்கான உரிய வைத்தியமும் கொடுக்கமுடியாமல் அவன் இறந்துவிட்டானே என்பதே அவரின் தாங்கமுடியாத வேதனைக்கு காரணம்.
தனது அன்புத்தோழர் ஏங்கல்சுக்கு எழுதும்பொழுது, ‘ தத்துவஞானி பேகன் கூறும்பொழுது யாரெல்லாம் மக்களுக்கு தன்னலமற்ற சேவைகள் செய்துவருகிறார்களோ அவர்களுக்கு ஏற்படுகின்ற சொந்த இழப்புகளை அவர்களால் தாங்கிக்கொண்டு மீண்டெழமுடியுமென்பார்கள். நான் அப்படிப்பட்டவர்களில் ஒருவன் அல்ல. எனது மகனின் இழப்பென்பது இல்லாமையாலும் வறுமையாலும் உரிய மருத்துவம் செய்யமுடியாத கொடுமையினாலும் நிகழ்ந்துவிட்டதென்பதுதான் என்னைத்தாங்க முடியாத வேதனையில் ஆழ்த்துகிறது.” – என்று தெரிவித்தார்.
உங்களுடைய இழப்பு வறுமையால் நேர்ந்ததல்ல. விமான விபத்து… மனதை தேற்றிக்கொள்ளுங்கள்”
இவ்வாறு சின்னப்பபாரதிக்கு ஆறுதல் கூறிய கோவிந்தப்பிள்ளை அண்மையில் காலமாகிவிட்டார். கடந்த ஜனவரி செம்மலர் இதழில் சின்னப்பபாரதி கோவிந்தப்பிள்ளைக்கு அஞ்சலிக்குறிப்பு எழுதியிருக்கிறார்.
மனிதவாழ்வில் இழப்புகளின் வடிவங்கள் மாறுபடும்.
சின்னப்பபாரதியுடனான உரையாடலில் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் அவுஸ்திரேலியாவிலிருந்து மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் விரிவாகப்பேசினேன்.
“ போர் முடிந்துவிட்டது. ஈழத்தமிழ் மக்கள் தமிழ்த்தேசியத்திற்கும் அபிவிருத்திக்கும் நடுவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்த்தலைமைகள் தமிழ்த்தேசியம் பேசுகின்றன. அரசோ அபிவிருத்தி பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. போர் நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பிரதேசம் கண்காட்சி கூடமாக மாறியிருக்கிறது.
கியூபாவுக்குச்சென்றால் ஏர்ணஸ்ட் சேகுவேராவின் நினைவு மண்டபத்தையும் அவரது எலும்பு எச்சங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லறையையும் அவர் பாவித்த ஸ்டெத்தஸ்கோப் மற்றும் படித்த நூல்கள் மற்றும் பயன்படுத்திய கருவிகள் எழுதிய பேனைகளை பார்க்கமுடியும்.
இலங்கையில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இரண்டு கிளர்ச்சிகளில் ஈடுபட்டு கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி தலைவர் ரோஹண விஜேவீராவின் உடைமைகளை அவரது மனைவியிடம் கேட்டுப்பார்த்துக்கொள்ளமுடியும். அல்லது தற்போதைய தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவிடம் தொடர்புகொண்டு பார்க்கலாம்.
ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாவித்த ஒரு பேiனையையோ அல்லது அவர் படித்த ஒரு புத்தகத்தையோ கூட விட்டுவைக்காமல் மறைத்துவிட்டு அல்லது அழித்துவிட்டு, அவரது ஐந்து பாதாள அறைகளைக்கொண்ட அபூர்வ மறைவிட வீடுகளையும் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களையும் நீர்மூழ்கி கப்பல்களையும் 22 ஆடி ஆழம் கொண்ட பாரிய நீச்சல் தடாகத்தையும் அவர்கள் கடத்திவந்த பிரம்மாண்டமான கப்பலையும் வைத்துக்கொண்டு தென்னிலங்கை மக்களுக்கு அவற்றை காட்சிப்படுத்தியுள்ள இலங்கை அரசு, இதன்மூலம் தென்னிலங்கை மக்களுக்கு சொல்லும் செய்தி சுருக்கமானது எளிமையானது.
முழு இலங்கையையும் இத்தனை கனரக ஆயுதங்களுடன் அழித்து கபளீகரம் செய்ய எத்தனித்தவரையும் அவரது சகாக்களையும் அழித்து தேசத்தை காப்பாற்றியுள்ளோம்.
தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் ஒருபுறம் பேசிக்கொண்டிருக்கையில் அரசு அபிவிருத்திபற்றி பேசிக்கொண்டிருக்கிறது. அரசியல் கட்சித்தலைமைகள் சில வெளிநாடுகளின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப இயங்குகிறார்கள்.
இந்நிலையில் போரில் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான விதவைகள், தந்தையை பறிகொடுத்த குழந்தைகள், இயக்கத்தை நம்பி வந்து தமது எதிர்காலத்தை தேடிக்கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள்; ( பெண்கள், ஆண்கள்) இவர்கள் குறித்து சிந்திப்பவர்கள் பேசுபவர்கள் இயங்குபவர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழர் புகலிட நாடுகளிலும் இடதுசாரிகள்போன்று சிறுபான்மையினர்தான்.” என்று சொன்னேன்.
அந்தச் சிறுபான்மையினரில் சின்னஞ்சிறு துளியாகியிருக்கும் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பணிகளை கேட்டுத்தெரிந்துகொண்டார்.
ஒரு புறத்தில் இவ்வாறு புனர்வாழ்வுப்பணிகளை மேற்கொண்டவாறுதான் இலங்கையில் இலக்கிய வளர்ச்சிக்கு போருக்குப்பின்னர் புத்துயிர்ப்பு வழங்குகின்றோம் என்பதில் சின்னப்பபாரதி திருப்தி கண்டார்.
வடக்கிலிருந்து வெளியாகும் ஜீவநதி உட்பட தினக்குரல் ஞாயிறு இதழ் முதலானவற்றை அவரிடம் வழங்கினேன். தாம் ஜூலை மாதம் மிண்டும் இலங்கை செல்லவிருப்பதாகவும் அப்பொழுது போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ( மாணவர்களை) வடக்கு கிழக்கு மாகாணங்களில் நேரில் சென்று பார்த்து உதவுவதற்கு எமது கல்வி தொடர்பாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தித்தருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
“இந்தப்பயணத்தில் அப்படி ஒரு பலன் கிட்டுமானால் இந்தப்பயணம் பூரணத்துவமானது என்ற மனநிறைவுடன் திரும்புவேன்” என்றேன்.
எமக்கிடையிலே உரையாடல் தொடர்ந்துகொண்டிருந்தவேளையில், கோயம்புத்தூரிலிருந்து நண்பர் யுகமாயினி சித்தன் தொலைபேசியில் தொடர்புகொண்டு எம்மிருவரையும் சந்திக்க தான் புறப்பட்டிருப்பதாக தகவல் சொன்னார்.
மல்லிகை நடத்திய டொமினிக்ஜீவா எமக்கு மல்லிகை ஜீவா ஆனார். அதுபோன்று சிரித்திரன் நடத்திய சிவஞானசுந்தரம், சிரித்திரன் சிவஞானசுந்தரமானார். சென்னையிலிருந்து சிறிதுகாலம் யுகமாயினி என்ற தரமான இலக்கிய இதழை நடத்திய சித்தன் எமக்கு யுகமாயினி சித்தன் ஆனார். ஓவியரும் படைப்பிலக்கியவாதியும் ஆங்கில இலக்கியங்களில் சிறந்த புலமையும் மிக்க சித்தன் தனது நெடிய பயணத்தில் தற்போது திரைப்படத்துறையின் பக்கம் வந்துள்ளார். தற்போது ஒரு திரைப்படம் சம்பந்தமான வேலைப்பளுவுக்கும் மத்தியில் அவர் எம்மைக்காண்பதற்காக நாமகல்லுக்கு வந்து சேர்ந்ததும் எமது உரையாடல் வேறு ஒரு திசைக்கு வேகமாகத்திரும்பியது.
தனது படைப்புகளின் மொழிபெயர்ப்புகளின் ஊடாக பல்வேறு இந்திய மொழிவாசகர்களுக்கும் ஐரோப்பிய வாசகர்கள் மற்றும் இலங்கை சிங்கள வாசகர்களுக்கும் பரவலாக அறிமுகமாகியுள்ள சின்னப்பபாரதியிடம், சித்தன் திடீரென்று ஒரு கேள்வியை எழுப்பி அதிர வைத்தார்.
அது என்ன கேள்வி? அடுத்த வாரம் சொல்கின்றேன்.
(பயணம் தொடரும்)



Viewing all articles
Browse latest Browse all 736

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!