EX) தமிழ்க் கவிதைகள் குறித்து குறிப்பாக இன்றைய ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் குறித்து நீங்கள் கூறுவது மாற்றுப் பார்வைக்குரிய ஒன்றுதான். ஆனால் ஈழத்து இலக்கியத்தில் கவிதைதான் மேல் நிலையில் உள்ளதாகப் பரவலான அபிப்பிராயம் உள்ளதே?
நவீன கவிதைகள் பற்றிய படிப்பு அறிவு குறைந்த என்னால் இதற்கு பெரிய விளக்கம் கூறமுடியாது. தமிழ் நாட்டில் உள்ளவர்களின் கருத்தைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள். கவிதைக்கு அப்பால் உள்ள சில விடயங்களைச் சொல்ல விரும்புகிறேன.
தமிழ்நாட்டு வாழ்வு மண்ணும் சாதிப்பிரிவுகளும் சீமெண்டும் கல்லும் சேர்ந்தது போன்ற இறுக்கமானது. அவர்கள் வாழ்வு. சமூக சிந்தனை, பெண்கள் உரிமைகள் ஏன் சாதி பற்றிய விடயங்களில் நாம் ஒரு கால் நூற்றாண்டுகள் முன்னால் இருக்கிறோம். இதற்கு காரணம் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயரது சிந்தனைகள் இலங்கை மக்களிடம் அதிகம் பரவியதே.
தென்னிலங்கையில் வெள்ளமாக பாய்ந்த ஐரோப்பிய சிந்தனை வரண்ட தமிழ்ப்பகுதிகளிலும் கசிந்தது. மிசனறிமார்களால் இலங்கையில் பெண்களுக்கான கல்வி மிகவும் சிறந்தது. எங்களது குடும்பம் ஒரு சிறுதீவில் வசித்தது. ஆனாலும் எனது பாட்டி உடுவிலில் படித்து ஆசிரியராகியவர். அக்காலத்திலே உடுவில் பெண்கள் பாடசாலை மாணவிகள் தலைக்கு எண்ணெய் வைப்பதில்லை என்று பாட்டி சொன்னது நினைவிருக்கிறது. இது 19 ஆம் நூற்றாண்டு விடயம். இதே போல் இலங்கைப் பெண்களின் உடை அலங்காரம் போர்த்துகீயரில் இருந்து வந்தது.
சாதிப்பாகுபாடு அறுபதாம் ஆண்டில் இருந்து உடைந்து வருகிறது. சாதியை மீறித் திருமணம் முடித்தவர்கள் உயிருடன் அந்தக் கிராமத்திலே வாழக்குடிய நிலை நமது ஊர்களில் இருந்தது. 17 வயதில் நான் விரும்பிய சக மணவியை காதலித்து திருமணம் செய்யாமல் என் மனைவி மருத்துவபீடத்தில் படிக்கும்போது குழந்தையை பெற்று யாழ்ப்பாணத்தில் 30 வருடத்திற்கு முன்பு வாழ்ந்தோம். எவரும் எங்களை வித்தியாசமானவர்களாக யாரும் பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் இதையெல்லாம் இப்பவும் நினைத்துப் பார்க்க முடியாது. அங்கு மாநிலம் விட்டு ஓடினால் உயிர் தப்ப வழியண்டு. காதல் காமம் தமிழ் பெருமண்ணில் வெங்காயம் போன்று பல தோல்களுடன் கண்ணை எரிக்கும் தன்மை கொண்டது. அங்குள்ள நிலவுடமை கலாச்சாரம் இளமையை ஒருவிதத்தில் வறுத்த பயறாக மாற்றிவிடுகிறது. ஆனால் இலங்கையில் உள்ளி போல் ஒரு தோல்தான் உள்ளது என்பது என்காலத்து அனுபவம். விடுதலைப்புலிகள் காலத்தின் பின் நிலமை எனக்குத் தெரியாது.
இதனால் எமது சிந்தனைகளால் பாரம்பரிய விடயங்களை எளிதில் மீறமுடிந்தது. மேலும் போரால் வேகமாக கலாச்சார விலங்குகள் உடைபட்டது. இப்படியான ஒரு காலம் இந்தியாவின் சுதந்திர போராட்டகாலத்தில் இருந்தது. பெண்கள் போராட சமூகத்தின் முன்னிலைக்கு வந்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பின்பு வந்த திராவிட அரசியல் அலையால் மீண்டும் சமூகம் பழைய நிலைக்கு திரும்பிவிட்டது. இதில் முக்கியமாக சாதியமைப்பை தற்போதய அரசியலுக்கு ஆதாரசக்தியாக வளர்த்து வருகிறது. ஒரு விதத்தில் திராவிடம் வர்ணாச்சாரத்தை தத்தெடுத்து பங்கு போடுகிறது. இது சரி பிழை என நான் தீர்ப்பு சொல்லவில்லை.
எனவே அவர்களது பேசும் பொருள் அவர்கள் அனுபவம் வித்தியாசமானது. ஈழத்தவர்களது சிந்தனை மாற்றப்பட வேண்டிய சூழலில் இருந்தது. இதனால் கவிதைப் பொருள்கள் வித்தியாசமாக இருப்பதாக தமிழ்நாட்டவர்கள் சொல்லலாம். எங்கள் கவிதை எங்களது சமூகத்தை பிரதிபலிக்கிறது. அவர்களது கவிதையின் பிரதிபலிப்பு அவர்களது நிலையைப் சொல்லுகிறது.
மீண்டும் சொல்கிறேன். எனது கவிதை அறிவு பாலபாடத்தை ஒத்தது. இது எனது அனுமானம்தான்.
